பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிபத்தியக் கோட்பாடு

373

ஆதிரை

தேசியக் கொள்கையால் நாடுகள் தத்தம் தனி முன்னேற்றத்தையே கருதி நடப்பதால் சர்வதேச அமைதி குலைவதைக் கண்ட அறிஞர்கள் சர்வ தேசியத்தை விரும்பினர். ஆனால் இரு உலக யுத்தங்களுக்குமிடையே ஐரோப்பாவில் தேசியக் கோட்பாடே வளர்ந்து வந்தது. முதல் உலக யுத்த இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் எடுத்துக்கூறிய சுயநிர்ணயக் கொள்கை வலுவுற்றது. ஐரோப்பாவில் உருக்கொண்ட தேசியக் கொள்கை மத்தியக்கிழக்கு, தூரக்கிழக்கு நாடுகளிலும் பரவிற்று. அதன் பயனாகவே பிரிட்டிஷ், டச்சு ஏகாதிபத்தியங்கள் சிதறத் தொடங்கின.

சட்ட முறைப்படி நிறுவப்படும் ஆதிபத்தியத்திற்கும் பரம்பரையாக வந்த ஆதிபத்தியத்திற்கும் வேறுபாடு உண்டு. பிரெஞ்சு மன்னரான XVI -ம் லூயி 'நானே இராச்சியம்' என்று உரிமைகொண்டாடிய பொழுது ஆதிபத்தியம் தம்மிடம் அமைந்து கிடப்பதாக அவர் கருதினார். தேசியத்தின் விளைவாக ஜனநாயகவாதிகள் ஆதிபத்தியம் மக்களிடம் அமைந்து கிடப்பதாகக் கூறலாயினர். அவர்கள் கொள்கைப்படி நாட்டுப் பொது மக்களே அதிபதிகளாவர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்களால் நிறுவப்பட்ட ஓர் ஆதிபத்திய குடியரசைப்பற்றிப் பீடிகை கூறுகின்றது. பாரம்பரிய முறையில் ஆட்சி புரிந்துவரும் ஓர்-ஆள் -அதிபதியின் அதிகாரம் முழுவதும் இப்போது மக்களது உரிமையெனக் கொண்டாடப்படுகிறது. மக்கள் எல்லோரும் ஒருமுகமாகச் சேர்ந்து ஆதிபத்தியத்தைச் செலுத்த இயலாதாகையால், அவர்கள் சார்பில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவ்வாதிபத்தியத்தைச் செலுத்துகின்றனர். சில இடங்களில் அம் மக்களின் பிரதிநிதிகள் எளிதில் நீக்கமுடியாதவர்களாக இருக்கின்றனர். அந்நாடுகளில் பூரண ஆதிக்க ஆட்சி நடைபெறும். ஆதிபத்தியம் தேசியத்துறையில் இயங்கும்போது கேடு விளைக்கும் ஒரு சக்தியாக விளங்கக்கூடும். நாட்டில் ஒருவரால் செலுத்தப்பட்டாலும், ஒரு கட்சியால் செலுத்தப்பட்டாலும், பொதுமக்களின் ஆதரவைப்பெற்ற ஒரு கட்சித் தலைவரால் செலுத்தப்பட்டாலும், அது பல கேடுகளை விளைவிக்கக்கூடும். சர்வ தேசியத்துறையில் ஆதிபத்தியக்கொள்கையால் போரும் நாசமும் உண்டாவதை இருபதாம் நூற்றாண்டில் கண்கூடாகக் கண்டுள்ளோம். ஒவ்வொரு நாடும் தனது மேம்பாட்டையே விரும்புவதோடு பிற நாடுகளின் நலனைப்பற்றிக் கருதாமலும் இருக்கும் நிலைமை தேசிய ஆதிபத்தியத்தால் விளைகிறது. வாணிபத்திலும், குடியேற்றத்திலும், எல்லைத் தகராறுகளிலும் தொடங்குகிற சிறு பூசல்கள் சர்வதேசப் பெரும் போர்களாக வந்து முடிகின்றன.ஆதலால் சர்வதேசிய நிலையிலும் ஆதிபத்தியத்தால் தொல்லைகள் விளைகின்றன என்பது தெளிவு.

இராச்சியத்தில் ஆதிபத்தியம் ஒரே இடத்தில் குவிந்திருக்கும் என்பதும், அதன் அதிகாரம் பிரிக்கப்படாதது என்பதும் ஆதிபத்தியத்தைப் பற்றிய ஆதாரக் கருத்துக்கள் என்று மேலே கண்டோம். இக்கருத்தினாலேயே கொடுங்கோன்மையும் போரும் விளைகின்றன என்பதும் பெற்றாம். இதற்கு வேறான கருத்து ஒன்று உண்டு. அதாவது “இராச்சியம் என்பது ஒரு சங்கம்; அச்சங்கத்திற்கு அதன் உறுப்பினர்களான குடிகள் மீது ஆதிபத்தியம் இருப்பதுபோல் இராச்சியத்திலுள்ள ஏனைய சங்கங்களுக்கும் தத்தம் உறுப்பினர்மீது ஆதிபத்தியம் உண்டு; அவ்வாதிபத்தியம் இராச்சிய ஆதிபத்தியத்தால் கட்டுப்படாது” என்பதாம். ”சர்வதேசிய நிலையில் பல நாடுகள் தத்தம் ஆதிபத்தியத்தைத் தனித்தனி பெற்றிருப்பது போல, தேசிய நிலையிலும் பல சங்கங்களும் தத்தம் ஆதிபத்தியத்தைத் தனித்தனி பெற்றிருப்பதால் சமூக நலன் பெருகும்; இதனால் குற்றமொன்றுமில்லை” என்பது இதன் பொருள். இதை அரசியற் பன்மை வாதம் (Political Pluralism) என்று கூறுவர்.

சிண்டிகலிஸ்டுகளும், கில்டு சோஷலிஸ்டுகளும் இவ்விதமான பன்மைவாதத்தை மேற்கொள்பவர்கள். இராச்சிய அதிகாரத்தின் எல்லை எவ்வளவில் இருக்கவேண்டும் என்பதைப் பற்றிய கருத்து, ஒருமை வாதிகளுக்கும் பன்மை வாதிகளுக்கும் வேறுபடுகிறது. இராச்சியம் அதிகாரம் செலுத்துவதற்காக ஏற்பட்ட ஒரு ஸ்தாபனமா, அன்றிக் குடிமக்களுக்கு ஊழியம் செய்வதற்காக ஏற்பட்ட ஒரு நிலையமா என்பது பற்றிக் கருத்து வேறுபடுகிறது. தற்காலத்தில் செஞ்சிலுவை, இரட்சணிய சேனை முதலிய சில சங்கங்கள் இராச்சிய எல்லைகளைக் கடந்து நிற்பதைக் காண்கிறோம். இவ்வாறே தொழிற் சங்கங்கள் முதலிய வேறு பல சங்கங்களும் இருக்கக்கூடும். இவையெல்லாம் மனிதரது சமூக இயல்பாற் பிறப்பவை. இராச்சியமும் இவ்வாறுதான் பிறந்தது. ஆதலால் இராச்சியத்திற்குள்ள ஆதிபத்தியம் இச்சங்கங்களுக்கும் இருப்பது முறைதான் என்பது இதனின்றும் பிறக்கும் கோட்பாடு.

தற்கால இராச்சியம் பூரண ஆதிக்கம் செலுத்துவதன்று. குடிமக்களின் கருத்திற்கேற்ப அமையும் பொறுப்பாட்சி வரம்பற்ற ஆதிபத்தியத்தைச் செலுத்த முடியாது. ஆகையால், அது ”பன்மைவகை இராச்சியம் (Pluralist State)” என்று ஆதிபத்தியத்தைக் குறைக்க நினைப்பவர் கூறுகின்றனர். இப்படியே ”இறைவனால் நிறுவப்பட்ட இயற்கைச் சட்டம், இராச்சியம் முதலிய மானுடச் சங்கங்கள் இயற்றும் எவ்வகைச் சட்டத்திற்கும் மேலானது. அச்சட்டத்திற்கு அடங்கியே இராச்சியம் உட்பட எல்லா மனித சங்கங்களும் இயங்க வேண்டும்” என்னும் கருத்து ஆதிபத்தியக் கோட்பாட்டின் வரம்பற்ற தன்மையைக் குறைக்கப் பண்டைக்காலத்தில் பயன்பட்டது. இன்று புதிதாகச் சுதந்திரம் பெற்ற கீழ்நாடுகளில் தேசிய உணர்ச்சி மிகுந்திருப்பதால் இங்கு ஆதிபத்தியக்கோட்பாடு ஓங்கியிருக்கிறது. அதன் பிறப்பிடமாகிய ஐரோப்பாவில் இரண்டு உலகப் போர்களின் படிப்பினையால் தேசிய உணர்ச்சியும் ஆதிபத்தியக் கோட்பாட்டில் நம்பிக்கையும் தளர்ந்து வருகின்றன. ரா. பா.

ஆதிமந்தி திருமாவளவன் எனச் சிறந்த கரிகாற் சோழன் மகள். சேரநாட்டரசன் ஆட்டனத்தியின் மனைவி. ஆட்டனத்தியைக் காவிரி கொண்டு செல்லக் கூவியரற்றிச் சென்றாள். மருதி என்பவளால் அவன் கரை சேர்க்கப்பட்டதையறிந்து அவனையடைந்தாள். இவள் பாடியது குறுந். 3; இவளது வரலாற்றை அகம் 45,76,222, 236, 276, 396-ல் அறியலாம்.

ஆதியப்பனார் (18ஆம் நூ. முற்பகுதி) தொண்டை நாட்டிற் களத்தூரிற் பிறந்தவர். திருக்களர், திருக்கொள்ளம்பூதூர், பருதிவனம், மாயூரம் முதலான தலங்களுக்குப் புராணம் பாடியவர்.

ஆதிரை 1. ஒரு நட்சத்திரம் ; திருவாதிரை என்று வழங்கும். சிவபெருமான் முத்தொழில்களையுஞ்செய்ய உருவங்கொண்ட நாள். இந்த நாளில் சிவன் கோயில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடத்துவர். அன்று சைவர்கள் களி செய்து உண்பர்.

2 சாதுவன் என்னும் வணிகன் மனைவி; கற்பிற் சிறந்தவள்; மணிமேகலைக்கு அமுதசுரபி என்னும்

பாத்திரத்தில் முதலிற் சோறு இட்டவள்.