பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

381

ஆப்பிரிக்கா

பெரிய கைத்தொழில்களை அமைப்பதற்கு வசதியில்லாத இடங்களில் இவ்வீழ்ச்சிகள் இருப்பது இதற்கொரு காரணமாம்.

மானிடவியல் : உலகத்திலுள்ள முக்கியமான மக்கள் இனவியல் பகுதிகளுள் ஒன்று ஆப்பிரிக்கா. மக்: 18 கோடி. இங்குள்ளோர் பல்வேறு உடல் அமைப்பு உடையவர்களாகவும், பல்வேறு மொழிகள் பேசுவோராகவும், பல்வேறு பண்பாட்டினராகவுமுளர். ஆப்பிரிக்காக்கண்டத்தின் பெரும்பாகம் சகாராபாலைவனத்துக்குத் தெற்கே இருக்கிறது. அதில் 15 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மத்தியதரைக் கடற்கரை ஓரத்தில் வாழ்பவரினின்றும் பல வகையிலும் வேறுபட்டவராவர். தெற்குப் பகுதியில் வாழ்பவர் நீக்ராயிடு இனங்கள். வடக்குப்பகுதியில் வாழ்பவர் காக்கசாயிடுகள். வட ஆப்பிரிக்காவை ஐரோப்பாவுடனும் அண்மைக் கிழக்குப் பகுதியுடனும் சேர்ந்த நிலப்பகுதியாகவே கருதவேண்டும். அப்பகுதியில் வழங்கும் மொழி அரபு ; மதம் இஸ்லாம் ; கிழக்கு மத்தியதரைக் கடற் பகுதியின் பண்பாடு இங்குக் காணப்படுகிறது.

சகாரா பாலைவனத்துக்கு, தெற்கேயுள்ள பகுதியில் பல்வேறு உடல் அமைப்புக்கள் காணப்படுகின்றன. சுத்தமான நீக்ரோ வசிப்பது கினிகோஸ்ட்டு என்னும் பகுதியிலாகும். இவர்கள் குள்ளமானவர்கள்; கட்டான உடலும், மிகுந்த கறுப்பு நிறமும், நீண்ட தலையும், மிகுதியாகச் சுருண்ட மயிரும் உடையவர்கள். அப்பகுதிக்கு வடக்கே கண்டத்தின் குறுக்கே கிழக்கிலிருந்து மேற்கு வரையுள்ள பகுதியில் தென் பகுதியைச் சார்ந்த சுத்தமான நீக்ரோ அமைப்பும், வடபகுதியைச் சார்ந்த காக்கசாயிடு அமைப்பும் ஆகிய இரண்டும் கலந்த அமைப்புக்களுடைய பெர்பெர் என்று தவறாகக் கூறும் ஒரு கலப்பு இனம் காணப்படும். ஆங்கிலோ-எகிப்திய சூடானிலிருந்து கெனியா வரையுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்கப்பகுதியில் ஹாமிட்டிக் இனத்தாரும் நிலோட்டிக் இனத்தாரும் வசிக்கிறார்கள். அவர்கள் திடமில்லாத உடலும், மிகுந்த உயரமும், நீண்ட முகமும், ஒடுங்கிய மூக்குப்புழையும், மிகுந்த கறுப்பு நிறமும், அறல்போன்ற கறுப்பு மயிரும் உடையவர்கள். ஆண்கள் ஆறேகால் அடி உயரமிருப்பார்கள்.

பான்டூ மொழி பேசுவோர் காமரூன் - பெல்ஜியக் காங்கோப் பகுதி முதல் இந்துமகா சமுத்திரம் வரைத் தென் கிழக்காகவும். சான்சிபார் முதல் நன்னம்பிக்கை முனைவரைத் தெற்காகவும் நீண்டு கிடக்கும் பெரும் பகுதியில் வாழ்கிறார்கள். அவர்களுடைய உடலமைப்பு. நிலோட்டிக், ஹாமிட்டிக் அமைப்புக்களை அடிப்படையாகக்கொண்டிருந்தும், பல்வேறு நீக்ராயிடு அமைப்புக்கள் கலந்ததாகும். ஆயினும் அடிப்படையில் நீக்ராயிடு தோற்றமே உடையவர்கள். குள்ளர்கள் (பிக்மி) என்போர் காங்கோவின் கிழக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். அவர்கள் கறுப்பு நிறமும், அகன்ற தட்டை மூக்குப்புழையும், நெருக்கமாகச் சுருண்ட மயிரும் உடையவர்கள். ஆண்கள், ஐந்து அடி உயரமிருப்பர். தெற்குக் கோடியில் கோய்சான், புஷ்மன், ஹாட்டன்டாட்டுக்கள் ஆகியோர் வசிக்கிறார்கள்.

மொழிகள் : ஆப்பிரிக்காவில் வழங்கும் மொழிகளின் தொகை தெரியவில்லை. ஆயினும் ஆராய்ச்சியாளர் அறிந்தனவாக உள்ள பல்வேறு தனி மொழிகளின் தொகை எழுநூற்றுக்குக் குறையாது என்று கூறுவது மிகையாகாது. பொதுவாக வழங்கும் பாகுபாட்டு முறைப்படி பார்த்தால் இந்த மொழிகள் பல குடும்பங்களாகப் பிரியும் : 1. கினி கோஸ்ட்டுக்கும் சகாரா பாலைவனத்தின் தென் எல்லைக்குமிடையில் சூடான் மொழிக் குடும்பமும், 2. ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியில் பான்டூ மொழிக் குடும்பமும், 3. வடகிழக்கில் ஹாமிட்டிக், ஹாமிட்டோ-செமிட்டிக் மொழிக் குடும்பமும், 4. தென் கோடியில் ஹாமிட்டிக்கின் கிளை என்று சிலரால் கருதப்படும் கோய்சான் மொழிக் குடும்பமும் வழங்குகின்றன. இந்தப்பாகுபாட்டு முறையைத் தவறு என்று கிரீன்பெர்க் என்பவர் பான்டூவும் சூடன் மொழிகளில் பெரும்பாலனவும் நைகர்-காங்கோகுடும்பத்தையும், ஹாமிட்டோ- செமிட்டிக் மொழிகள் பண்டை எகிப்திய மொழியையும், குஷைட்மொழி ஆப்பிரோ-ஆசிய மொழியையும் சேரும் என்பர். நிலோட்டிக் மக்களின் மொழிகளைத் தனி கிழக்குச் சூடான் குழுவாகவும், கோய்சான் மொழிகளைக் கிளிக்குக் குடும்பமாகவும் கூறுவர். மற்ற மொழிகளையெல்லாம் பன்னிரண்டு சிறு குடும்பங்களாக வகுப்பர்.

ஆப்பிரிக்க மொழிகள் தொனி வேறுபாடுடையவை. காங்கோ மொழிகளும் ஓரளவு கினிகோஸ்ட்டு மொழிகளும் பொருள் வகைகளையும் நிகழ்ச்சி வகைகளையும் குறிப்பதற்குப் பகுதி முறைகளைக் கையாள்கின்றன. புஷ்மன், ஹாட்டன்டாட்டு மொழிகளில் உள்ள சில ஒலிகள் உலகத்தில் எந்த மொழியிலும் காணப்படாதவை. அம்மொழி பேசுவோர் வாயில் வெற்றிடம் உண்டாக்கிக் காற்றை உட்புகச் செய்து ஆறுவிதமான ஒலிகளை உண்டாக்குகிறார்கள்.

பண்டை ஆப்பிரிக்கப் பண்பாட்டுப் பகுதிகள் ஒன்பதாகும்.

கோய்சான் : இதில் புஷ்மன், ஹாட்டன்டாட்டு என இரண்டு உட்பிரிவுகள் உண்டு. 1. புஷ்மன் பண்பாடு: இம்மக்களிடம் வீட்டு விலங்குகள் இல்லாமையாலும், வேளாண்மை இவர்களுக்குத் தெரியாதாகையாலும் குறைந்த உடையும் கருவிகளும் உடையவராதலாலும், இவர்களுடைய பண்பாடே உலகத்தில் மிகவும் எளிமை வாய்ந்ததாகும். இவர்கள் கலஹாரிப் பாலைவனத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொருளாதாரத்தின் அடிநிலை வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். தேவதைகளில் நம்பிக்கை உடையவர்கள். 2. ஹாட்டன்டாட்டுப் பண்பாடு: இது புஷ்மன் பண்பாட்டைவிடச்சற்று வளர்ச்சி பெற்றதாம். மிகுந்த கலைப்பண்புடைய பலநிற ஓவியங்கள் பாறைகளில் தீட்டியுளர். அவர்களுடைய பொருளாதாரத்திற்கு அடிநிலை கால்நடை வளர்த்தல். அடிப்படையான அரசியலமைப்பும் காணப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்கக் கால்நடைப் பிரதேசம் நைல் நதி உற்பத்தித் தானத்திலிருந்து நன்னம்பிக்கை முனை கிழக்குக் கடற்கரை ஓரமாக நீண்டு கிடப்பதாகும். இது நியாசா ஏரிக்குக் கிழக்கேயுள்ள ஒரு துண்டு நிலத்தால் இரண்டு மாகாணங்களாகப் பிரிந்து கிடக்கிறது. அதற்குக் காரணம் அந்தத் துண்டுப் பகுதியில் ட்ஸெட்ஸி (Tsetse)என்னும் ஒருவகை ஈ இருக்கிறது. அது கால்நடை வளர்ச்சிக்குத் தடையாயுள்ளது. அங்குள்ள மக்களிடையே பிழைப்புப் பொருளாதாரம், பெருமைப் பொருளாதாரம் என இரண்டுவகை காணப்படுகின்றன. பிழைப்புப் பொருளாதாரம் வேளாண்மையை அடிநிலையாக உடையது. மற்றதில் கால்நடை வளர்ப்பது முக்கியமாகும். அவர்கள் கால்நடைகளை வளர்ப்பது உண்பதற்காகவோ விற்பதற்காகவோ அன்று ; சமூகத்தில் தங்கள் நிலை இது என்று காட்டுவதற்காகவே, மனைவியரை விலைக்கு வாங்குவதில்லை. ஆயினும் மணமகன் குடும்பத்திலிருந்து கால்நடைகள் மணமகள் குடும்பத்துக்குப் போய்ச்சேர்ந்தால் மணம் உறுதியாகும். தாய்க்காகக் கொடுத்த கால்நடையின் அள-