பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

383

ஆப்பிரிக்கா

சின்னங்களால் நமக்குத் தெரியவருகின்றன. இறந்தவர்களின் ஆவி மறுபடியும் உடலில் சேரும் என்ற நம்பிக்கை எகிப்தியரிடமிருந்தபடியால் அவர்கள் பிரேதங்களை வாசனைத் திரவியங்களால் காப்பாற்றி வைக்கக் கல்லறைகள் கட்டினர். மன்னர், பிரபுக்கள் முதலியோருடைய பிரேதங்களை அடக்கஞ் செய்த கல்லறைகளின் மீது பிரமிடுகள் கட்டுவித்தனர். பிரமிடுகள் கட்டப்பட்ட காலம் கி. மு. 3000-2500 என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிரமிடுகளை கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பார்வையிட்ட ஹிரோடட்டஸ் (Herodotus) என்ற கிரேக்க அறிஞர், ஒவ்வொரு கோபுரமுங் கட்ட ஓர் இலட்சம் தொழிலாளிகள் இருபது ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டுமென்று கருதினார்.

எகிப்தை கி.மு. 3000-1200 வரை ஆண்டுவந்த பாரோ (Pharaoh) மன்னர்களுள் முக்கியமானவர்கள் டூட்டான்காமன், III-ம் தட்மோஸ், ராமசீஸ் என்பவர்கள். 1922-23-ல் கார்னார்வன் பிரபுவும். எட்வர்டு கார்ட்டரும் டூட்டான்காமன் கல்லறையிலிருந்து விலை உயர்ந்த பொருள்களை யெடுத்து, அநேக வரலாற்றுக் குறிப்புக்களைக் கண்டு பிடித்தனர். தட் மோஸ் என்பவர் மேற்கு ஆசியா, ஈஜியன் தீவுகள் முதலியவற்றை வென்று ஒரு சாம்ராச்சியத்தை நிறுவினார். ஆகவே அவர் 'எகிப்தின் நெப்போலியன்' என்றழைக்கப்படுகிறார். ராமசீஸ் அநேக கட்டடங்கள் கட்டியதுமன்றித் தம்முடைய முன்னோர்கள் கட்டிய கட்டடங்களில் குறிப்புக்கள் எழுதியும் வைத்துள்ளார். இவர் காலத்தில்தான் இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தனரென்று வரலாற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ராமசீஸுக்குப் பின்பு ஹிட்டைட்டுச் சாதியினர் எகிப்தின் ஆசிய சாம்ராச்சியத்தைக் கைப்பற்றினர். இதற்குப்பின் எகிப்தே அடிமை நாடாயிற்று. கி. மு. ஏழாம் நூற்றாண்டில் அசீரியாவின் ஆதிக்கத்தின் கீழும், அதற்குப்பின் கிரேக்க ஆதிக்கத்தின் கீழும் இருந்துவந்தது. கிரேக்க அரச வம்சமாகிய டாலமி வமிசம் எகிப்தை அரசாண்டபோது அந்நாட்டில் கலைகள் பலவும் செழித்து வளர்ந்தன. மகா அலெக்சாந்தர் நிறுவிய அலெக்சாந்திரியா நகரில் பல அறிஞர்கள் வசித்து வந்தனர். டாலமி வமிசத்துக் கடைசி அரசி கட்டழகி கிளியோபாத்திரை. கிளியோபாத்திரைக்குப் பின் எகிப்து, ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு மாகாணமாயிற்று. அப்பொழுதுதான் எகிப்து மக்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டில் அராபியர்கள் எகிப்தின்மீது படையெடுத்து, நாட்டைக் கைப்பற்றி மக்களை முஸ்லிம்களாக்கினர். ஆனால் ஒரு சிலர் கிறிஸ்தவ மதத்தை விடவில்லை. அவர்களுடைய சந்ததியார் இன்றும் கோ-ஆப்டிக் (Co-optic) கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். எகிப்து முதலில் அரேபியாவின் ஆதிக்கத்தின் கீழும், பின்பு கி. பி. 19ஆம் நூற்றாண்டுவரை துருக்கியின் ஆட்சியின் கீழும் இருந்து வந்தது.

எகிப்தில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதுபோல், ஆப்பிரிக்காவின் ஏனைய வடபாகங்களிலும் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டது. அதற்குக் காரணம் பிற நாட்டாரின் குடியேற்றமே. பினீஷிய சாதியினர் நிறுவிய கார்த்தேஜ் நகரம் ஒரு பெரிய சாம்ராச்சியத்தை நிறுவி, ரோமாபுரியுடன் கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் போர் புரிந்து கடைசியில் வீழ்ச்சியடைந்தது. பழங்காலத்தில் சிறந்த வீரராக விளங்கிய ஹானிபால் கார்த்தேஜ் நகரத்தைச் சார்ந்தவர். கார்த்தேஜ் வீழ்ச்சியடைந்ததும், வட ஆப்பிரிக்கா ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாயிற்று. பின்பு கி. பி. ஏழாவது நூற்றாண்டில் எகிப்துடன் வட ஆப்பிரிக்காவின் ஏனைய பாகங்களாகிய லிபியா, டூனிஷியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகியவை அரேபியரின் ஆதிக்கத்துக்குட்பட்டு, மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாயினர். பல நூற்றாண்டுகளாக வட ஆப்பிரிக்கா கலை, விஞ்ஞானம், தொழில் முதலியவைகளுக்குப் பெயர் பெற்றதாயிருந்தது. மொராக்கோவிலுள்ள பெஸ் (Fez) என்னும் நகரத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு பல்கலைக் கழகம் இருந்து வந்தது. மொராக்கோ மக்கள் தோல் வேலையில் மேம்பட்டிருந்தனர்.

அரேபியப் படையெடுப்பின் பயனாக நீக்ரோ மக்கள் சகாரா பாலை வனத்தின் தெற்கே குடி புகுந்தனர். 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தபோது, நீக்ரோ மக்கள் இராச்சியம் ஒன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்தது. அதற்கு மோனோ மோட்டபா (Mono motapa) என்று பெயர். இந்த நீக்ரோ இராச்சியத்திற்கும் ஆசியாக் கண்டத்திற்கும் அராபிய, இந்திய வியாபாரிகள் மூலம் வாணிபம் நடந்து வந்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியாவிற்குக் கிழக்கே மற்றொரு நீக்ரோ இராச்சியமிருந்தது. அதற்குச் சாங்கே (Sanghay) இராச்சியமென்று பெயர். அதன் தலை நகரம் டிம்பக்டூ.

வடஆப்பிரிக்காவில் பிறநாட்டார் படையெடுப்பினால் மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில் இதியோப்பியாவில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. இதியோப்பிய மக்கள் ஆப்பிரிக்க ஆசிய மக்களின் கலப்பினத்தைச் சேர்ந்தவர்கள். சாலமன் அரசனும் ஷீபா அரசியும் வாழ்ந்த காலத்திலிருந்து இதியோப்பியர் தம் சுதந்திரத்தை இதுகாறும் காப்பாற்றி வந்திருக்கின்றனர். இடையில் சில ஆண்டுகள் மட்டும் இத்தாலியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். பழங்கால கோ ஆப்டிக் கிறிஸ்தவ மதம் இன்றும் இருந்து வருகிறது.

நன்னம்பிக்கை முனை போர்ச்சுகல் தேசத்து வாஸ்கோட காமாவால், 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து காடுகள், மலைகள், ஏரிகள் அடங்கிய மத்திய ஆப்பிரிக்காவிற்குச் சென்று பார்க்கவேண்டுமென்ற அவர் ஐரோப்பிய மக்களுக்கு ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் மாங்கோ பார்க் நைஜர்நதி தீரத்தையும், டாக்டர் லிவிங்ஸ்டன் என்னும் ஆங்கிலப் பாதிரி சாம்பசி நதி தீரத்தையும் நைல் உற்பத்தித் தானத்தையும், ஸ்டான்லி என்பவர் காங்கோநதி தீரத்தையும் ஆராய்ந்தனர். இவர்கள் ஆராய்ச்சியினால் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை ஆப்பிரிக்காவிலிருந்து பெறக் கூடுமென்றும், அக்கண்டத்திற்குத் தொழிற்சாலைச் சாமான்களை அனுப்பலாமென்றும் ஐரோப்பிய மக்களுக்கு விளங்கிற்று. ஆகவே 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் போட்டியிட்டு, ஆப்பிரிக்காவைப் பங்கு போட்டுக்கொள்வதில் முனைந்தன.

பெல்ஜிய அரசரான II-ம் லியப்பால்டு காங்கோ பிரதேசத்தைப் பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ்1879-85 ஆண்டுகளில் கொண்டுவந்தார். 1880-ல் சகாராப் பாலைவனம் அடங்கிய மேற்கு ஆப்பிரிக்காவைப் பிரான்சு கைப்பற்றியது. 1881-ல் ஆப்பிரிக்காவின் வடபாகத்திலுள்ள டூனிஸ், அல்ஜீரியா முதலிய நாடுகளைப் பிரான்சு தன்னுடைய பாதுகாப்பிற் குட்படுத்தியது. பின்பு செனிகால் நதிப்பிரதேசமும், சோமாலி-