பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

384

ஆப்பிரிக்கா

லாந்தின் ஒரு பாகமும், மடகாஸ்கர் தீவும், பிரான்சின் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. பழங்காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் ஆப்பிரிக்காவின் வடபாகம் முழுவதும் பரவியிருந்தது. ஆகவே இத்தாலி 1870-ல் ஐக்கியப்பட்டு, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தவுடன், ஆப்பிரிக்க ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்டது. அதற்குள்ளாக வடஆப்பிரிக்கா பிரான்சின் ஆதிக்கத்தின்கீழ் வந்துவிட்டது. ஆகவே, இத்தாலி கிழக்கு ஆப்பிரிக்காப் பக்கம் திரும்பி, எரிட்ரியாவையும், சோமாலிலாந்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றியது. இதியோப்பியாவையும் கைப்பற்ற 1896-ல் போர் தொடுத்தது. ஆனால் போரில் தோல்வியடைந்து பின்வாங்கியது. 1935-ல் முசொலீனி இதியோப்பியாவின் மீது போர்தொடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினார். ஆனால் இரண்டாம் உலகயுத்தத்தில் இத்தாலி தோல்வியடையவே இதியோப்பியா மறுபடியும் சுதந்திர நாடாயிற்று.

இத்தாலியைப்போல ஜெர்மனியும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் ஐக்கியப்பட்டது. அதற்குப்பின் ஆப்பிரிக்க ஆதிக்கப் போட்டியில் கலந்து கொண்டு, தென்மேற்கு ஆப்பிரிக்காவையும், தென் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியது.

ஆப்பிரிக்காவின் தென்முனையைக் கண்டுபிடித்த போர்ச்சுகல் அங்கோலாவையும், மொசாம்பிக் என்னும் கிழக்கு ஆப்பிரிக்காவையும் தன் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியது.

ஸ்பெயின் ஆப்பிரிக்காவின் வடமேற்கில் ஸ்பானிய சகாரா மாகாணத்தையும் மொராக்கோவின் ஒரு பாகத்தையும் பெற்றது.

ஆப்பிரிக்காவில் பிரான்சுக்கு அதிக நிலப்பரப்பு கிடைத்தபோதிலும் வளம்பெற்ற பிரதேசங்கள் பிரிட்டனுக்குத்தான் கிடைத்தன. எகிப்து நாடு கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை துருக்கிச் சாம்ராச்சியத்தின் கீழிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் எகிப்து மன்னன் துருக்கி ஆட்சியை உதறித் தள்ளிச் சுதந்திர மன்னனாயினன். அப்போது பெர்டினாண்டு டலெஸ்ஸெப்ஸின் முயற்சியால் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டது. எகிப்து மன்னன் அக் கால்வாயின் கம்பெனியில் தனக்குண்டான பங்குகளைப் பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளுக்கு விற்று, மேற்கொண்டும் அவர்களிடம் கடன்வாங்கினான். கடனைக் கொடுக்க முடியாமல் வருந்தவே, ஆங்கில அரசாங்கமும், பிரெஞ்சு அரசாங்கமும் எகிப்தில் இருதலைக் கண் காணிப்பை (Dual control) நிறுவின. இதை எகிப்தியர் வெறுத்துக் கலகஞ் செய்தனர். கலகத்தை அடக்கப் பிரான்சு தயங்கிற்று. பிரிட்டன் ஒரு படையை அனுப்பிக் கலகத்தை அடக்கி, எகிப்தைத் தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டது. எகிப்தின் பாஷா பெயரளவிலே மன்னனாயிருந்தான். ஆங்கிலேயப் பிரதிநிதியிடம் முழு அதிகாரமுமிருந்தது. எகிப்துக்கு முதலில் அனுப்பப்பட்ட ஆங்கிலப் பிரதிநிதியாகிய குரோமர் பிரபு அநேக சீர் திருத்தங்கள் செய்து நாட்டை மேம்பாடடையச் செய்தார். ஆகையால் இவருக்கு 'நவீன பாரோ' (Pharaoh) எனப் பெயர் வழங்கலாயிற்று.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தியர் சாக்லுல் பாஷாவின் தலைமையில் சுதந்திரமடையக் கிளர்ச்சி செய்தனர். 1936-ல் பிரிட்டனும் எகிப்தும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டன. அதன் முக்கிய ஷரத்துக்கள்: 1. எகிப்து சுதந்திர நாடென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. 2. சூடானை ஆங்கிலேயரும் எகிப்தியரும் கூடி ஆளவேண்டும். 3. சூயஸ்கால்வாய் ஆங்கிலப் பாதுகாப்பில் சிலகாலம் இருக்கவேண்டும். இந்த உடன்படிக்கை எகிப்தியருக்கு முற்றிலும் திருப்தியளிக்கவில்லை. சூடானை எகிப்துடன் இணைத்து, எகிப்தின் ஆட்சிக்கு விட்டுவிட வேண்டுமென்று எகிப்தியர் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.

ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைக் கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுக்கேசியர். ஆனால் அப் பிரதேசத்தில் குடி புகுந்தவர்கள் டச்சுக்காரர்கள். அவர்களுக்குப் போயர்கள் என்று பெயர். அவர்கள் சுதேசிகளை அடிமைகளாக்கி அவர்களுதவியால் வேளாண்மை செய்துவந்தனர். நெப்போலிய யுத்தம் 1815-ல் முடிவடைந்ததும், கேப் (முனைக்)குடியேற்றநாடு ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டது. 1833-ல் ஆங்கில அரசாங்கம் அடிமை வர்த்தகத்தை யொழிக்கவே, போயர்கள் கேப் குடியேற்றத்திலிருந்து வெளியேறி, நெட்டால், ஆரஞ்சுக் குடியேற்றம், டிரான்ஸ்வால் முதலிய இடங்களில் குடிபுகுந்தனர். இதற்குப் பெருவலசை (The Great Trek) என்று பெயர். 1843-ல் நெட்டாலைப் பிரிட்டன் தன்னுடைய சாம்ராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டது. ஆகவே பல போயர்கள் நெட்டாலில் இருக்க விரும்பாது, ஆரஞ்சுக் குடியேற்றத்திற்கும் டிரான்ஸ்வால் குடியேற்றத்திற்கும் சென்று, தங்கள் இனத்தாருடன் சேர்ந்தனர். டிரான்ஸ்வால் ஜனாதிபதியான பால் குருகர் ஆங்கிலேயரிடம் ஆறாத கோபங்கொண்டனர். ஆங்கிலேயரைத் தென் ஆப்பிரிக்காவிலிருந்து விரட்ட வேண்டுமென்று திட்டம் போட்டார். ஆனால் அப்பொழுது கேப் குடியேற்றத்தின் பிரதம மந்திரியாக இருந்த செசில் ரோட்ஸ் ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைப் பரப்ப வேண்டுமென்னும் நோக்கமுடையவர். இவ்விருவருடைய கருத்து முரண்பாட்டினால் போயர் யுத்தம் மூண்டது. போயர் யுத்தத்தில் பிரிட்டனுக்கு வெற்றி கிடைத்தது. 1906-ல் ஆரஞ்சுக் குடியேற்றத்திற்கும் டிரான்ஸ்வாலுக்கும் பிரிட்டன் பொறுப்பாட்சி அளித்தது. 1909-ல் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகள் எல்லாம் ஒன்றுபட்டுத் தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாடாயிற்று.

ஆப்பிரிக்காக் கண்டத்தில் லைபீரியா, இத்தியோப்பியா, எகிப்தைத் தவிர ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாட்டினர் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் பொருட்செல்வமே ஐரோப்பிய வல்லரசுகளின் போட்டிக்குக் காரணம். அந்நாட்டு நீக்ரோ மக்களின் அநாகரிகமே அவர்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம். மேனாட்டார் ஆப்பிரிக்காவில் வந்ததிலிருந்து, போக்குவரவுச் சாதனங்கள் வளர்ந்து, ஆலைகள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டின் கச்சாப் பொருள்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் ஆப்பிரிக்காவில் சிறுபான்மையோராக இருந்தபோதிலும், தங்களுடைய விஞ்ஞான அறிவாலும் ராணுவ பலத்தாலும், பெருவாரியான நீக்ரோ மக்களை அடக்கி யாளுகின்றனர். வெள்ளையர்களின் முக்கியக் கடமை சுதேசிகளை நாகரிக வாழ்க்கையில் திருப்பி முன்னேற்றமடையச் செய்வது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இக்கொள்கை வெள்ளையரின் சுயநலத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது என்று மற்றவர்கள் கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவில் ஆட்சி செய்யும் வெள்ளையர்கள் தாங்கள் உயர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும், தங்களுக்குச் சிறப்பு உரிமைகள் இருக்கவேண்டுமென்றும் வாதிக்கின்றனர்.