பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

385

ஆப்பிரிக்கா

மகாத்மா காந்தி அங்குள்ள இந்தியர்களின் இடையூறுகளை நீக்கச் சத்தியாக்கிரகப் போர் நடத்தியும் அவர்களுடைய துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. நிறவெறுப்பு ஒழியும்வரை ஆப்பிரிக்காவில் இந்திய மக்கள் பிரச்சினையும் சுதேசமக்கள் பிரச்சினையும் இருந்துதான் வரும். எம். வீ. சு.

ஆப்பிரிக்க மொழிகள்: ஆப்பிரிக்காவின் சுதேசிகள் பிக்மி - புஷ்மென் நீக்ரோ, ஹாமிட்டிக், செமிட்டிக் என நான்கு முக்கியப் பிரிவினராவர். அதனால் ஆப்பிரிக்க மொழிகளும் ஒவ்வொரு மக்கட்பிரிவுக்கும் ஒரு மொழிப் பிரிவாக நான்கு பிரிவுகளாகும். நீக்ரோக்கள் சூடானியர் என்றும் பான்டூ என்றும் இரு குழுவினராவர். அதனால் ஆப்பிரிக்க மொழிகளின் பிரிவுகள் புஷ்மன், சூடானிக், பான்டூ, ஹாமிட்டிக், செமிட்டிக் என ஐந்தாம்.

செமிட்டிக் மொழிகள் அபிசீனியாவில் பேசப்படும். இவற்றுள் அரபு மொழியே வட ஆப்பிரிக்காவிலும் கிழக்குச்சூடானிலும் அரசியல் மொழியாகும். இஸ்லாத்துடன் சேர்ந்ததால் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் சூடானிலும் இதுவே இலக்கிய மொழியாக ஆயிருக்கின்றது.

புஷ்மன் மொழிகள் புஷ்மன் மக்கள் பேசுவன. இவற்றின் முக்கியமான அமிசம் இழுத்து உச்சரித்தலாகும். பிக்மி மொழி என்று ஒன்றில்லை. பிக்மிகள் பக்கத்து மக்களுடைய மொழியையே பேசுபவர்களாயிருக்கிறார்கள்.

சூடான் மொழிகள் அட்லான்டிக் சமுத்திரத்திற்கும் அபிசீனியாவின் மேற்குப் பகுதிக்குமிடையில் பேசப்படுவன. இவை பல வகைகளாகப் பிரிந்துள. சூடான் பல முறை வேற்றுமொழியினரால் படையெடுக்கப்பட்டு வந்திருப்பதால், அதன் மொழிகள் பலவிதமான மாறுதல்கள் அடைந்துள்ளன.

பான்டூ மொழிகள் ஆப்பிரிக்காவின் தென்பாதியில் வழங்குகின்றன. இழுத்து உச்சரித்தல் என்பது இதில் காணப்படவில்லை. இம்மொழிகளை ஹோம்பர்கர் என்பவர் பத்து வகைகளாகப் பிரித்துளார்.

ஹாமிட்டிக் மொழிகள் செமிட்டிக் மொழிகள் வகையை ஒட்டியவை.

புஷ்மன் மொழிகள் 11, சூடானிக் 264. பான்டு 182, ஹாமிட்டிக் 47, செமிட்டிக் 10 என்று ஸ்ட்ரக் என்பவர் கூறுகிறார். இவற்றுள் சுமார் 12 மொழிகளே பத்து இலட்சம் மக்களால் பேசப்படுபவை.

ஆப்பிரிக்க இலக்கியம் என்பது சகாராவின் தெற்கேயுள்ள ஆப்பிரிக்கப் பகுதியிலும் வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலுமுள்ள நீக்ரோ மக்களுடைய நாடோடி இலக்கியமே யாகும். அது கதைகளாகவும் பிதிர்களாகவும் பழமொழிகளாகவுமே காணப்படுகிறது. இதுவரை ஆப்பிரிக்காவில் மட்டும் ஏறக்குறைய ஐயாயிரம் கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் அமெரிக்காவிலும் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. கதைகளைப் போலவே பழமொழிகள் முதலியனவும் மிகுதியாக இருக்கின்றன. ஆப்பிரிக்கக் கதைகளும் அமெரிக்கக் கதைகளும் அடிப்படையில் ஒற்றுமை உடையனவாகவே காணப்படுகின்றன. நீக்ரோ மக்களுள் ஒரு கூட்டத்தினரின் இடையே காணப்படும் கதைகள் முதலியன அக் கூட்டத்தினரின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதற்கு ஓரளவு பயன்படுகின்றன.

நீக்ரோ நாடோடி. இலக்கியத்தைச் சேர்ந்த கதைகள் பெரும்பாலும் விலங்குகளைப் பற்றிய கதைகளாகவே உள்ளன. ஆனால் விலங்கு பற்றியனவல்லாத கதைகளும் நீக்ரோக்களிடையே உண்டு. விலங்குக் கதைகள் பலவற்றில் விலங்குகளுடன் மனிதர்களும் காணப்படுகின்றனர். எங்கும் பரவியுள்ள ஒரு கதை மனிதனுக்கு விலங்குகளின் மொழி கடவுளால் கற்றுக்கொடுக்கப்பட்டதாயும், கடவுள் கட்டளையை மீறி அவன் பிறர்க்குக் கற்றுக் கொடுத்ததால் துன்புற்றதாயும் கூறுகிறது.

மனிதக் கதைகளில் பல புராணக் கதைகளும், அறவழி கூறும் கதைகளும் காணப்படுகின்றன. அங்கோல மக்கள் கதைகளுள் சில வரலாற்றுக் கதைகளும், சில கவிதையும் இசையும் கூடியனவாகவுமுள்ளன. கம்பா மக்கள் கதைகளுள் சில வாழ்க்கையைச் சித்திரிப்பன. தோங்கா மக்கள் கதைகளுள் சில நடந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக உடையன.

ஒவ்வொரு நீக்ரோக் கூட்டத்தாரிடையிலும் கடவுளரைப் பற்றிய புராணக் கதைகள் காணப்படுகின்றன. அவை கூட்டத்திற்குக் கூட்டம் வேறுபட்டனவாக இருக்கின்றன. இந்தக் கதைகள் பிரபஞ்சத்தின் தோற்றம், கடவுளர் தோற்றம், கடவுளர் செயல்கள், அவர்கள் உறவுகள், அவர்களுக்கும் மனிதர்க்குமுள்ள உறவுகள், மந்திரத்தின் பண்புகள், ஆற்றல் ஆகியவற்றைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் கூறுகின்றன.

அமெரிக்காவில் பிரேசில், ஹெயிட்டி, கூபா, டச்சு, கயானா ஆகிய பகுதிகளில் தவிர, மற்றப் பகுதிகளில் ஆப்பிரிக்க நீக்ரோக் கதைகள் காணப்படுவதில்லை. கத்தோலிக்க நாடுகளிலுள்ள நீக்ரோக்கள், ஆப்பிரிக்கக் கடவுளரைக் கிறிஸ்தவ முனிவர்களாக ஆக்கியுள்ளனர். புரோட்டஸ்டன்டு நாட்டு நீக்ரோக்களும் விவிலியக் கதைகளைத் தங்கள் ஆப்பிரிக்க முறையிலேயே வியாக்கியானம் செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒழுக்கமுறை பற்றிய வாக்கியத்துடனேயே முடியும். இவ்வாறின்றி அத்தகைய வாக்கியங்கள் தனித்துப் பழமொழிகளாக நிற்பதுமுண்டு. கதைகள் சொல்லத் தொடங்குமுன் பிதிர்களைப் பயில்வார்கள். பழமொழிகள் நீக்ரோ மக்களுடைய வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்பது அவர்களிடையே ஏராளமான பழமொழிகள் காணப் படுவதிலிருந்து தெரியவரும். பொதுவாக அவை சுருங்கச் சொல்வதாக இருக்கும். சில செய்யுள் வடிவத்துடனுமிருக்கும். பெரும்பாலும் வழக்கிலில்லாத சொற்களும் காணப்படும். நீக்ரோக்கள் அன்றாட வாழ்க்கையில் பழமொழிகளை மிகுதியாகக் கையாள்கிறார்கள். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்துக்குத் துணையாகப் பழமொழிகளைப் பயன்படுத்துவார்கள். அதைப் பயில்பவர் புலமை உடையவராகக் கருதப்படுவர். மற்றவற்றைவிடப் பழமொழிகளே நீக்ரோக்களுடைய பண்பாட்டை மிகுதியாக விளக்குவனவாகும்.

ஒருவன் வேலை செய்ய மறுத்துவிட்டு நன்றாக உண்ணும்போது, “சோம்பேறி சுருக்கமாக உண்பான்” என்ற பழமொழியைக் கூறி, அவனை நாணமுறச் செய்வர். அளவுக்கு மிஞ்சிச் செலவு செய்பவனிடம், ”எடுத்ததைப் போட்டால் எதுவும் காலியாகாது” என்னும் பழமொழியைக் கூறி அறிவு கொளுத்துவர். ”ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு” என்று நாம் கூறுவதை அவர்கள் ”ஆத்திரப்பட்டு எய்தால் அம்பு குறியை அடியாது” என்பர்.

பிதிர்கள் கேள்வி உருவத்தில் இரா. ”தலைவர் தலைமை வகித்தார்; மக்கள் சூழ்ந்திருந்தனர்” என்னும் பிதிர் திங்களையும் விண்மீன்களையும் குறிக்கும். ”சிறுவன் ஓடப் பெரியவன் பிடிக்க முயன்றும் முடியவில்லை” என்பது சக்கரத்தையும் வண்டிக் கூண்டையும் குறிக்- .