பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிள்

386

ஆப்பிள்

கும். “ஒரு கண்ணும் ஓர் அடியும் உடையது” ஊசியாகும். பலர் உட்கார்ந்து கேட்க இந்தப் பிதிர் ஆட்டம் நடைபெறும். பிதிர்கள் அறிவைக் கூர்மை செய்யும் என்று எண்ணிக் குழந்தைகளைக் கற்கும்படி சொல்வார்கள்

கதைகள் இரவிலேயே கூறப்பெறும். இரவு கண் விழிப்பதற்கும் இது பெரிதும் துணை செய்கின்றது. பகலில் கதை சொன்னால் பிதிரர் கதை சொல்பவர்க்குத் தீங்கு விளைப்பார்கள் என்பர். கதை சொல்லும்போது அதைச் சொல்லுவோர் அதிலுள்ள பாத்திரங்களாக நடிக்கவும் செய்வர். கதை நடுவில் பாடல் வரும் போது கேட்போரும் சேர்ந்து பாடுவர். கதை சொல்பவர் இடையில் கேள்விகள் கேட்பர். கேட்போர் விடை கூறுவர்.

கதைகள் கல்விக்குப் பெருந்துணை என்பது நீக்ரோக்கள் கருத்து. “நீங்கள் புத்தகங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் கதைகளைக் கூறிக் கற்றுக் கொடுக்கிறோம்” என்று அவர்கள் ஐரோப்பியரிடம் கூறுவார்களாம். குழந்தைகள் விலங்குக் கதைகளையும், பெரியவர்கள் காதற் கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியவற்றையும் பயில்வர். இவர்கள் கதைகள் பெரும்பாலும் பஞ்சதந்திரக் கதைகளையும், சீனாவின் ஜாதகக் கதைகளையும், ஈசாப் கதைகளையும், பிலிப்பீன் கதைகளையும் ஒத்திருப்பதால் இந்த நாடுகளிலிருந்து சென்றிருக்கக்கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இங்கிருந்து அங்குப் போயினவா, அல்லது அங்கிருந்து இங்கு வந்தனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலாது.

நீக்ரோக்களுடைய கதைகள் பாத்திரச்சித்திரத்திலும், நிகழ்ச்சி உச்சநிலையடையும் முறையிலும் மிகுந்த இலக்கியத் திறமை உடையனவாகக் காணப்படுகின்றன. நாடகச் சுவையும் கற்பனா சக்தியும் மிகுதியாக உள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க ஐக்கியம், வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் மேற்கு ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவைகளைப்பற்றியும், இத்தியோப்பியா, எகிப்து முதலான முக்கிய நாடுகளைப் பற்றியும் தனிக்கட்டுரைகள் உண்டு.

ஆப்பிள்: (சீமை இலந்தம்பழம்,சேபு): உலகத்தின் பல பாகங்களிலே மிகுதியாகப் பயிராவதும் மிக்க பயன்படுவதுமான மரக்கனி ஆப்பிள் பழமே. இது வரலாற்று முன் காலந்தொட்டே பயிர் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏழு வகையான ஆப்பிள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க, எபிரேய, ஐரோப்பிய மக்களுடைய பழங்கதைகளிலும் பாடல்களிலும் சமய நூல்களிலும் இந்தப் பழத்தைப்பற்றிய பேச்சு உண்டு. மரத்தின் அழகையும் பழத்தின் பண்பையுங் குறித்துப் புலவர் பாடியிருக்கின்றனர்.

ஆப்பிளில் சில காட்டு வகைகள் இருக்கின்றன. அவற்றுள் மாலஸ் புமிலா முதன்மையானது. பாரசீகம் முதல் கருங்கடற் பிரதேசம் வரையில் காக்கசஸ் மலைத்தொடர்களுக்குத் தெற்கே ஆசியாவின் தென்மேற்கு, ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதிகளிலே இருப்பது. இதிலிருந்தே பயிர்செய்யும் ஆப்பிள் பெரும்பாலும் உண்டாயிருக்கிறது. ஆதலால் பயிர் செய்துவரும் ஆப்பிளுக்கும் மாலஸ் புமிலா என்பதே விஞ்ஞானப் பெயராக வழங்கி வருகிறது. மற்றக் காட்டினங்களும் சிலவகை ஆப்பிள் பரம்பரையில் கலந்திருக்கலாம்.

இந்தக் காட்டு ஆப்பிள் வளரும் பகுதியிலேயே முதன்முதல் நல்ல ஆப்பிள் பயிர் செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவிற்று. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர் அமெரிக்காவுக்குக் குடியேறினபோது இதை அங்குப் பயிராக்கினர். நாளடைவில் இது தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து முதலிய இடங்களுக்குச் சென்று நன்றாகப் பல்கி வருகின்றது. ஆசியாவில் சீனா, ஜப்பான் இந்தியாவிலும் இது பயிராகின்றது.

ஆப்பிள் பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் 30° 60° நெடுக்கு வரைகளுக்கு உட்பட்ட சம

ஆப்பிள் பறித்தல்
நேஷனல் பிலிம் போர்டு, கானடா அரசாங்கம்.

தட்பவெப்ப வலயத்தில் மிக நன்றாக விளைகின்றது. நடுக்கோட்டுக்கு அருகிலும்கூடக் கடல் மட்டத்திற்கு 2,500-3,000 அடிகளுக்கு மேல் உயரமான இடங்களில்