பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்போ மலை

388

ஆபு

செதில்கள் காம்புடன் ஒட்டாமல் தனித்திருக்கும். இலை விடும் தண்டு நெடிதாக வளரும். இலைக் கணுச்சந்திலிருந்து குறுகிய கிளைகள் உண்டாகும். அவற்றில் சிறிய இலைகளும் பூக்களும் தோன்றும். பூவிற்கு 5 புற விதழ்களும், 5 அகவிதழ்களும், சுமார் 20 கேசரங்களும், 5 சூலிலைகளும் உண்டு. சூலகம் 5 அறைகளுள்ளது. ஓரறைக்கு 2 சூல்கள் இருக்கும். சிலவற்றில் அதிகமிருக்கலாம். ஆப்பிள் பழத்தில் நாம் தின்னும் பாகம் அதன் உண்மையான கனியன்று. பொய்க்கனி. உண்மையான கனி பழத்தின் நடுவில் சுவையின்றிச் சக்கையாக முருந்துபோல இருக்கும் பகுதியே. உண்ணத்தக்க சதைப்பகுதி பூவின் உறுப்புக்கள் வளர்வதற்கு இடமாயுள்ள பூக்காம்பின் முனையாகிய ஆதானமே. பூவிலிருந்து காய் வளரும்போது ஆதானம் பக்கங்களிலே வளர்ந்து செல்கிறது. அதனோடு புறவிதழ், அகவிதழ், கேசரங்கள் ஆகியவற்றின் அடிப்பாகங்களும் சேர்ந்து வளர்கின்றன. இவை சூலகத்தைச் சுற்றி வளர்ந்து அதை மூடிக்கொள்கின்றன. இவ்விதமாக உண்டாகும் பொய்க் கனியை போம் (Pome) என்று அழைப்பர்.

ஆப்பிள் பழம் மிக நல்ல உணவுப் பொருள். இதைப் பச்சையாகத் தின்பதல்லாமல் வேக வைத்தும் பலவகையாகச் சமைத்தும் உண்கின்றனர். இதிலிருந்து சாறு, குழம்பு, பாகு, வெண்ணெய் என்னும் பல உணவுகள் செய்கின்றனர். பழத்தைத் துண்டாக்கி உலர்த்தியும், சர்க்கரைப் பாகில் ஊறவைத்தும், வேறு வகைகளில் அமைத்தும் சேமித்து வைக்கின்றனர். பழத்தைக் குளிர்வித்தும், பாரபின் மெழுகு தடவியும், காகிதத்தில் சுற்றியும் பலவிதமாகப் பத்திரப்படுத்தி மிக்க விளைவுள்ள நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர். ஆப்பிள் விளைவில் பேரளவானது சிடர், ஒயின், பிராந்தி முதலிய மதுவகைகள் செய்யவும் காடி செய்யவும் பயனாகிறது.

ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, பீச், ஏப்ரிக்காட், ஆல்பகோடா,பிளம் முதலிய பழ மரங்களுக்கு உறவானது. இவையெல்லாம் ரோஜாச்செடிக்குச் சொந்தம். காட்டு ஆப்பிள் பழத்தைப் பார்த்தால் காட்டு ரோஜாவின் பழம் போலவே தோன்றும். இவை ரோசேசீ குடும்பத்தின.

ஆப்போ மலை பிலிப்பீன் தீவுகளிலுள்ள மிகவும் உயர்ந்த எரிமலை; இப்போது பல ஆண்டுகளாக எரியாதிருந்து வருகிறது.

ஆபிரகாம் (Abraham): எபிரேய சாதியை ஏற்படுத்தியவர்; அதன் முதல் தலைவர். ஊர் (Ur) என்னும் நகரத்தில் பிறந்து கடவுள் ஆணைப்படி கானான் நாட்டுக்கு வந்து குடியேறினார். அவருடைய பக்தியைச் சோதிக்க அவருடைய மகனைப் பலியிடுமாறு கடவுள் பணிக்க, ஆபிரகாம் அவ்வாறே செய்யப்போகும்போது கடவுள் மகனுக்குப் பதில் ஆட்டை நிறுத்தினார். ஆபிரகாம் பற்றிய கதைகள் விவிலிய வேதநூலில் காணப்படும். ஆபிரகாமின் ஒரு மகனான இஷ்மேல் சில அரபு இனத்தார்க்கு மூதாதை. மற்றொரு மகனான ஈசாக்கு இஸ்ரவேல் வகுப்பினரின் மூதாதை.

ஆபிரகாம் பண்டிதர், ராவ் சாகிப், மு.: (1859-1919) திருக்குற்றாலத்தின் மருங்கே சாம்பூர் வடகரை என்ற சிற்றூரில், முத்துசாமி என்னும் இந்தியக் கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவருடைய மக்கள் ஒன்பது பேர். அவர்களுள் மூத்தவர் ஆபிரகாம் என்ற சீலர். இவர் 1859 ஆகஸ்டு இரண்டாம் நாளிற் பிறந்தார். இவர் 8ஆம் வகுப்புவரை படித்துத் தேறிப் பின் தம் 4ஆம் ஆண்டில் திண்டுக்கல்லிலிருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிற் சேர்ந்து படித்து, 1876-ல் அதே பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் இயல்பாகவே மிக்க சுறுசுறுப்பும் நுண்ணறிவுமுடையோராகலின் ஒழிவு நேரங்களில் ஆரூடம், கோள் நூல், மனைநூல் முதலியன கற்றும், இசை பயின்றும், பிடில் இசைக்கப் பழகியும், பச்சிலை முதலியவற்றைச் சேர்த்து மருந்துகள் செய்து மருத்துவம் செய்தும், இசை கற்பித்தும் வருவார்.

ஆபிரகாம் பண்டிதர்

1877ஆம் ஆண்டில் சுருளிமலை சென்று, அதுபோது அங்குத்தவம் புரிந்து வந்த கருணாநந்த சித்தரைக் கண்டு, அவரது அருளும் நட்பும் பெற்றார். 27-12-1882-ல் இவர் நெல்லை சென்று, தம் பெற்றோர் விருப்பப்படி, ஞானவடிவு பொன்னம்மாள் என்ற குணவதியை மணந்து, அவருடன் திண்டுக்கல்லிற்கு வந்து, ஓராண்டளவு ஆசிரியர் தொண்டாற்றிப் பின், 1883-ல் தஞ்சைக்கு வந்து, அங்குள்ள லேடி நேப்பியர் பெண் பள்ளியில் ஆசிரியர் பணி ஈராண்டளவு ஆற்றியும், மருத்துவம் செய்தும் வந்தார். மருத்துவத் துறையில் இவருக்கு வருவாய் மிகுந்தமையின் ஆசிரியர் பணியினை நீத்துக் ‘கருணாநிதி வைத்தியசாலை’ என்றொரு மருத்துவச் சாலையினை அமைத்து, மிக்க புகழையும் பொருளையுமடைந்தார். கிறிஸ்தவச் சமய மறையினை விளக்க நன்மறை காட்டும் நன்னெறி என்ற அரிய நூலை இயற்றினார். பண்ணமைப்புக்கள் தாய்மொழியில் பாடப்பெற்றால் மாத்திரமே மக்கட்கு உள்ளத்தமைதியும் களிப்பும் ஏற்படும் எனக் கூறிப் பல தமிழ்ப் பண்கள் நிறைந்த கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற இசைநூலை 1907-ல் இயற்றினார். 1911-ல் இவருடைய மனைவி இறக்கவே 5-2-1912-ல் இசை இலக்கணத்திலும், யாழ் இசைப்பதிலும் புலமை வாய்ந்த பாக்கியம் அம்மையாரை மணந்தார். ஆபிரகாம் பண்டிதர் இசையில் மிகச் சிறந்த அறிவாளி. ஒரு தான நிலையில் (ஸ்தாயியில்) உள்ள சுருதிகள் 24 என்றும், புது இராகங்களையும், புது வர்ண மெட்டுக்களையும் உண்டாக்கிக்கொள்ளும் முறைகள் இவை என்றும் இவர் எடுத்துக்காட்டினார். இவற்றை விளக்கும் கருணாமிர்த சாகரம் என்ற அரும்பெருநூலினை இயற்றி, இரு தொகுதிகளாக 1917-ல் வெளியிட்டார். 1912-லேயே இசைக்கென மாநாடுகளைத் தம் சொந்தச் செலவில் கூட்டி நடத்தினார். இவர் நடத்திய இசை மாநாடுகள் எட்டு. 1916-ல் பரோடாவில் நடந்த முதல் அகில இந்திய இசை மாநாட்டிற்கு இவரும் இவர் மனைவியும் அழைக்கப்படவே, இவர்கள் அங்குச் சென்று, முத்தமிழ் நாடே இசை பிறந்தவிடமென்றும், தமிழனின் இசை இலக்கணமே மிக்க மேன்மை பெற்றதென்றும் கூறி உண்மையை நிலைநாட்டினார். இசைக்கென இவராற்றிய பிற பணிகளும் பலவுள, இவர் 31-8-1919-ல் இறையடி சேர்ந்தார்.

ஆ. அ. வ.

ஆபு அர்-புத்த என்பதன் சிதைவாகும். அதன் பொருள் அறிவுக்குன்று என்பது. மான்ஸ் காப்பிடாலியா என்று பிளினி கூறுவது இதுவே என்று கருதுகிறார்கள். இது பம்பாய் இராச்சியத்திலுள்ள ஆரவல்லி மலையில் தனித்து நிற்கும் ஒரு சிகரம். இதன்