பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர்

9

அகநானூறு

அது 12,000 சூத்திரங்களால் ஆகியது என்றும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைப் பற்றியும் கூறுவது என்றும் அறிகின்றோம். உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்தாளப்படுகின்ற சில சூத்திரங்களைத் தவிர நூல் முழுமையும் கிடைத்திலது.

இடைச்சங்க காலத்தும் ஓர் அகத்தியரைக் காண்கின்றோம். இக்காலத்தும் அகத்தியமே தமிழ் மொழிக்கு இலக்கணமாக அமைந்துள்ளது. தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார் முதலிய பன்னிருவரும் அகத்தியர் மாணவர் என்றும், இவர்கள் இயற்றிய நூலே பன்னிரு படலம் ஆயிற்று என்றும் புறப் பொருள் வெண்பா மாலை, பன்னிரு படலம் என்ற நூல்களின் பாயிரத்தால் அறிகின்றோம். முதற் சங்கத்திற்கும் இரண்டாஞ் சங்கத்திற்கும் இடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்துள்ளமையின் இரு சங்கங்களிலும் இருந்தவர் இருவேறு அகத்தியர் எனக் கொள்ளுதலே அமைவுடைத்தாம்.

இவர்களைத் தவிர வேதகால அகத்தியர், பாரதகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் என்று பல அகத்தியர்களைப் பற்றியும் கேள்விப்படுகின்றோம். மற்றும் எத்துணையோ அகத்தியர்களைப் பற்றிக் குறிப்புக்கள் கந்த புராணம், காஞ்சிப் புராணம் என்ற புராணங்களிலும், இன்னும் பிற தலபுராணங்களிலும் வருகின்றன. இமயமலையில் சிவபெருமான் இமவான் மகளாகத் தோன்றிய பார்வதி தேவியாரை மணந்தபோது வடதிசையில் யாவரும் கூடியதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அவ்வாறு உயர்ந்த தென்னாட்டைச் சமன் செய்ய அகத்திய முனிவரை இந்நாட்டிற்குச் சிவனார் அனுப்பிவைத்தார் என்றும், வரும் வழியில் விந்த மலையினை அடக்கி விந்தம் அடக்கிய வித்தகர் எனப் பேரும் பெற்றார் என்றும் அறிகின்றோம். கந்த புராணத்தில் அகத்தியர் விதர்ப்பர்கோன் மகளாகிய உலோபாமுத்திரையை மணந்து சித்தன் என்னும் புதல்வனையும் அளித்தார் என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வான்மீகி இராமாயணத்தும் அகத்தியர் பொதிய மலையில் வாழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிலிருந்து அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும், இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் வாழ்ந்து தமிழ் வளர்த்து வந்தார் என்பதும் பெறப்படுகின்றன. அவர் தமிழ் அகத்தியரேயாவர்; தமிழ் நாட்டவரேயாவர்.

பிற்காலத்தே பதினெண் சித்தர்களுள் ஒருசில அகத்தியரைக் காண்கின்றோம். அவர்கள் வைத்திய நூல்கள் பல இயற்றியுள்ளனர். நமது நாட்டில் பிற்காலத்தில் வந்த புலவர்கள் தாங்கள் எழுதிய நூல்களுக்கெல்லாம் தங்கள் பெயரை இடாமல் அகத்தியர் பெயரையே இட்டனர்; அதனால்தான் இன்று நூற்றுக்கு மேலான நூல்கள் அகத்தியர் இயற்றியனவாக ஓலைச் சுவடிகளாக இன்னும் அச்சிடப்பெறாமல் இருக்கின்றன. அத்தகைய நூல்களின் பல பெயர்கள் கீழ்க் கலைக் கையெழுத்துப் பிரதி நூல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அகத்தியர் சித்த வைத்தியம், ஆறெழுத்தந்தாதி, கருப்ப சூத்திரம், வாகடம், பூசா விதி, ரஸவாத சூத்திரம் எட்டு, அகத்தியர் ஞானம் பன்னிரண்டு போன்ற எண்ணிறந்த நூல்கள் இருக்க இந்த நூல்களின் தமிழ் நடையும், கூறும் பொருளும் இவற்றைப் பாடியவர்கள் புலமை மிக்கவர் அல்லர் என்பதைக் காட்டுகின்றன.

சுருங்கக் கூறின், அகத்தியர் என்ற பெயருடைய தமிழ் முனிவர் ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தார்; அவர் தலைச்சங்கப் புலவராக விளங்கினார்;

அகத்தியம் என்ற நூலை இயற்றியருளினார். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பியர் ஆசிரியரும் அகத்தியர் ஆவர்; இவர்களைத் தவிர வடநாட்டு அகத்தியர் சிலரும் இருந்தனர் எனலாம். தமிழ் நாட்டில் அகத்தியர் என்பாரே இல்லை என்றும் வடநாட்டு அகத்தியரைப் பார்த்துத் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அகத்தியர் ஒருசிலரைப் படைத்துக் கொண்டனர் என்றும் ஆரிய அகத்தியருக்குக் கூறப்பட்டவற்றை எல்லாம் தமிழ் அகத்தியருக்கு ஏற்றிக் கூறுகின்றனர் என்றும் சிலர் கூறுவர்; இது பொருந்தாக் கூற்றாகும். குறுகிய வடிவம் கொண்டவர். கடல் நீரைக் குடித்தவர், குடத்தில் பிறந்தவர், மித்திரனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர் போன்ற கதைகள் எல்லாம் பின்னர் எழுந்த புனைகதைகளாகும். இப்புனைகதைகளுக்கு முடிசூட்டுமாறு பல புலவர்கள் அகத்தியர் என்ற பெயரால் நூல் பல இயற்றி எல்லோரையும் மயங்கவைத்து விட்டனர்.

அகத்தியாச்சிரமம் பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள புண்ணியத் தலம்; நாசிக் என்னும் இடத்துக்கு இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ளது. இப்போது சத்தியபுரி என்று வழங்குகிறது.

அகத்தியான் பள்ளி தஞ்சாவூர் ஜில்லா திருமறைக்காட்டுக்குத் தெற்கே ஒரு மைலிலுள்ளது. அகத்தியர் உறைந்து வழிபட்ட தலம். அவருடைய உருவச்சிலை கோயிலில் இருக்கிறது, இத்தலம் திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சுவாமி: அகத்தீச்சுரர். அம்மன்: பாகம்பிரியா நாயகி.

அகநானூறு சங்க இலக்கியமாகிய எட்டுத் தொகையுள் ஒன்று; மற்ற ஏழு தொகை நூல்களைவிட அளவால் பெரியது; அகப்பொருள் பற்றிய தொகை நூல்களுள் சிறந்தது; அதனாலேயே அகம் என்ற பெயரும் பெற்றது. அளவால் குறுகிய அடிகளையுடைய நானூறு பாட்டுக்களைக் கொண்ட குறுந் தொகைக்கு மாறாக நெடுந்தொகை என்னும் பெயரும் இதற்கு உண்டு. பதின்மூன்று அடிமுதல் முப்பத்தோரடிவரையில் கொண்ட பாட்டுக்கள் இதில் அமைந்துள்ளன. பாட்டுக்கள் எல்லாம் ஆசிரியப் பாவால் இயன்றவை.

இந்த நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மன்; தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இப்பாண்டியனும் புலமை நிரம்பியவன் என்பது இவன் பாடிய செய்யுளால் (அகம்-24) அறியலாம்.

மற்றைத் தொகை நூல்களுக்கு இல்லாத சிறப்புகள் சில இதற்கு உண்டு. அவற்றுள் ஒன்று இந்நூல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்று பகுதியாக அமைந்திருப்பது. ஒவ்வொரு பகுதியும் தனி நூல் போலவே உரையாசிரியர்களால் எடுத்துரைத்து மேற்கோள் காட்டப் படுகிறது. அதனாலேயே அகநானூறு மிகச் சிறப்பாகப் போற்றிக் கற்கப்பட்டது என்னும் உண்மை விளங்குகிறது. களிற்றியானைநிரை என்பது, முதல் நூற்றிருபது பாட்டுக்களை உடையது. அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் மணிமிடைபவளம் எனப்படும். இறுதி நூறு பாட்டுக்கள் நித்திலக்கோவை எனப்படும். பொருட் சிறப்புக் காரணமாகக் களிற்றியானைநிரை என்ற பெயரும், செய்யுளும் பொருளும் ஒவ்வாத அமைப்பால் மணிமிடைபவளம் என்ற பெயரும், செய் யுளும் பொருளும் ஒத்த அமைப்பால் நித்திலக்கோவை என்ற பெயரும் வழங்கியதாகக் காரணம் கூறப்படும்.