பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமணக்கு

393

ஆமெசான் ஆறு

நலம். பெரும்பாலும் இது புன்செய் நிலப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள், வெங்காயம், மிளகாய் முதலிய வேறு பயிர்களோடு கலந்து இதைத் தோட்டக்காலில் சாகுபடி செய்வதும் உண்டு. நல்ல வளமும் பாய்ச்சலுமுள்ள மணற்பாங்கான நிலம் இப்பயிருக்கு ஏற்றது. களிமண் நிலத்தில் இது செழித்து வளர்வதில்லை; வளம் குறைவான நிலங்களில் இது தனிப் பயிராகவும், செழிப்பான நிலத்தில் கேழ்வரகு, சோளம், மொச்சை முதலியவற்றுடன் கலப்புப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

நன்றாக உழுது பண்படுத்திய நிலத்தில் தேவையான அளவு கால்நடை எரு அல்லது கழிவு எருவை இட்டு, 1 அடியிலிருந்து 3 அடிவரையுள்ள இடைவெளியில் வரிசையாக விதைகளை ஊன்றி மூடுகிறார்கள். வரிசைகளுக்கிடையே 2-லிருந்து 3 அடி தொலைவு இருக்குமாறு அமைக்கவேண்டும். செடிகள் இளமையாக இருக்கும்போது வயலில் நீர்த்தேக்கம் இருக்கக்கூடாது. நீர் தங்கினால் இளஞ்செடிகள் அழுகிவிடும். விதைகளை நட்ட 1 மாதத்திலிருந்து 3 மாதங்களுக்குள் பூக்கள் தோன்றத் தொடங்கும். இதற்கு ஒரு மாதத்திற்குப்பின் செடிகளில் காய் காய்க்கும். காய்கள் முதிரும்போது அவ்வப்போது பறித்துவிட வேண்டும். இல்லையேல் காய்கள் வெடித்து விதைகள் சிதறிவிடும். ஆகையால் விதைகளை நட்டதிலிருந்து 3-லிருந்து 4 மாதங்களில் தொடங்கும் அறுவடை கடைசிவரை நீண்டுகொண்டே போகும். காய்களைக் காயவைத்துத் தடிகொண்டு அடித்து விதைகளை எடுக்கிறார்கள். சென்னை இராச்சியத்தில் தனி ஆமணக்குச் சாகுபடியில் ஓர் ஏகராவில் சராசரி விளைச்சல் சுமார் 225 ராத்தல்.

ஆமணக்கெண்ணெய்: ஆமணக்கு வித்திலிருந்து பல வகைகளில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. வித்தை எந்திரத்தில் அரைத்து, அரைத்த வித்தைக் கோணிப் பைகளில் கட்டிப் பிழிந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். அல்லது வித்தை வறுத்தோ, வெயிலிற் காயவைத்தோ, நீரில் கொதிக்கவைத்து மேலே மிதக்கும் எண்ணெயைப் பிரித்தெடுக்கலாம். ஓர் இரவு முழுதும் வித்தை நீரில் ஊறவைத்து அரைத்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் முறைகளில் உயர்ந்தரக எண்ணெய் கிடைக்கிறது.

ஆமணக்கெண்ணெய் பேதி மருந்தாகவும், பல மருந்துகளிலும் பயனாகின்றது. உள்ளெரி எஞ்சின்களுக்கு இது சிறந்த உயவாகிறது. தாழ்ந்த வெப்பத்தில் இது இறுகுவதில்லை. உயர்ந்த வெப்பத்திலும் இதன் பிசுபிசுப்புக் குறைவதில்லை. இக்காரணங்களால் இது விமான எஞ்சின்களுக்கு உயவிட மிகவும் ஏற்றது. துருக்கிச் சிவப்பு எண்ணெய் (Turkey Red Oil) என்ற ரசாயனப் பொருளின் தயாரிப்பில் இது பயனாகிறது. சவர்க்கார வகைகள் ஆமணக்கெண்ணெயினால் தயாரிக்கப்படுகின்றன. தொன்றுதொட்டே இதை விளக்கேற்றப் பயனாக்கி வந்திருக்கிறார்கள். ஆமணக்கெண்ணெய் விளக்கில் கரிப்புகை தோன்றுவதில்லை. மெழுகுவர்த்திகள், செயற்கை ரப்பர், பீளாஸ்டிக்குகள், மெருகெண்ணெய்கள் ஆகியவற்றின் தயாரிப்பிலும் இது பயனாகிறது.

ஆமணக்குப் பிண்ணாக்கு நல்ல எருவாகிறது. இதை உரமாக இட்டால் இது கரும்புப் பயிரைச் செல் அரிக்காமல் தடுக்கும். ஆகையால் கரும்புச் சாகுபடிக்கு இது மிகவும் ஏற்றது. ஆமணக்குப் பயிரில் ஜம்புப்புழு, புகையிலைப்புழு. செஞ்சிலந்தி முதலியவை விழுவதுண்டு. சீ. ஆர் .சே.

ஆமன் கிரீசைச் சேர்ந்த தீப்ஸ் நகரில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுள். கார்னாக்கிலுள்ள கோவிலிலும் இவர் வடிவமேயிருக்கிறது. இக்கடவுளே பண்டைய எகிப்தியர்களுக்கும் கடவுள். அவர்கள் இக்கடவுளைச் சூரியனாகக் கருதி வழிபட்டதுண்டு. சாதாரண மனிதர்களைப்போல இக்கடவுளுக்கு உருவம் அமைக்கப்பட்டது. லிபியா பாலைவனத்தில் இவருக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்தது. இவருக்கு உரிய வாகனம் ஆடு. இக்கடவுளின் மனைவி பெயர் முட் என்பது. எகிப்திய மன்னர்கள் இக்கடவுளின் சம்மதம் பெற்றே அந்நாட்டை யாண்டு வந்ததாகக் கருதினார்கள். இதையொட்டியே எகிப்தை வென்ற மகா அலெக்சாந்தரும் ஆமன் கோவிலுக்குச் சென்று வந்தார். தே. வெ. ம.

ஆமுண்ட்ஸென் (1872-1928) : இவர் நார்வே நாட்டவர்; முதன் முதலில் ஆர்க்டிக் சமுத்திரம் வழியே சென்று வடமேற்காக வழியுண்டு என்று கண்டுபிடித்து வடதுருவத்தைச் சுட்டிக்காண்பித்தவர். 1911-ல் இவர் அன்டார்க்டிக் கடலைக் கடந்து முதன் முதலில் தென் துருவத்தை யடைந்தார். 1926-ல் வட துருவத்தின் வழியாக, விமானத்தில் சென்றார். 1928-ல் மீண்டும் அந்தப் பிரதேசத்திற்கு யாத்திரை சென்றார். ஆனால் இவர் ஏறிச் சென்ற விமானம் ஆர்க்டிக் கடலில் எங்கோ அகப்பட்டு அழிந்து போகவே, அதன் பிறகு அவரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. கே. ஆர். ஸ்ரீ.

ஆமூர்க்கவுதமன் சாதேவனார் கடைச்சங்கம் மருவிய புலவர். ஆமூர்வானவனைப் பாடினவர் (அகம்.159).

ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன். உறையூர்ச்சோழன் தித்தன் மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியாற் போர்புரிந்து கொல்லப்பட்டவன். பொழுது மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரம் ஆமூர் நாட்டில் இருந்ததென்று டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் குறிப்பிடுகின்றனர் (புறம்.80).

ஆமூர் முதலி ஆமூரிலிருந்த பிரபு(சு. 15ஆம் நூ.). இவர் தம்மைப்பற்றிக் காளமேகப் புலவர் பாதி வெண்பா பாடியவுடனேயே பரிசளித்தார். இவர்க்குக் களப்பாளர் என்ற பெயரும் உண்டு.

ஆமெசான் பண்டைக் காலத்தில் ஆசியா மைனர் நாட்டிலுள்ள தெர்மோடன் ஆற்றின் கரையில் வசித்த வீரமகளிர் சாதியாகும். அவர்கள் வில்லையும் அம்பையும் உபயோகிப்பதற்கு அனுகூலமாக இருக்கத் தங்கள் வலது தனத்தைத் தீய்த்து விடுவார்களாம். தாங்கள் சிறையாக்கும் ஆண்களைத் தங்கள் அடிமைகளாக வைத்து நடத்துவார்களாம். இது கிரேக்கர் புராணங்கள் கூறுவது.

ஆமெசான் ஆறு தென் அமெரிக்காவிலுள்ள ஆறு. நீளம் 4.000 மைல். அமெசான் என்னும் கிரேக்கப் புராண வீரப் பெண் பெயரை ஸ்பானியர்கள் இட்டதாகக் கூறுவர். அதற்குக் காரணம் அவர்களை எதிர்த்த இந்தியர்களுள் பலவீரப் பெண்கள் சேர்ந்திருந்ததேயாம். இந்த ஆறு சில இடங்களில் மிகுந்த அபாயகரமாயிருப்பதால் அதன் பெயர் அமெரிக்க இந்தியச் சொல்லாகிய அமசானா (தோணி அழிப்பது) என்பதிலிருந்து உண்டாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாயும் நீரின் அளவிலும், வடிநிலத்தின் பரப்பிலும் உலகிற் பெரிய ஆறு இதுவே. டோகான்டின்ஸ் நதியை வேறாகக் கொண்டால் இதன் வடிநிலத்தின்