பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமை

396

ஆமை

உள்ளிழுக்கவும் வெளியே விடவும் உதவுகின்றன. தொண்டையிலுள்ள ஹையாய்டு எலும்பும் அதைச் சேர்ந்த பகுதிகளும் இயங்குவதனால் விழுங்குவது போன்ற செய்கை நடைபெறுகிறது இதனால் காற்று நுரையீரலுக்குள் அழுத்தப்படுகிறது. நீராமைகள் பலவற்றில் ஆசனத்துக்கு அருகில் குடலின் கடைசியிலிருந்து பை போன்ற இரண்டு உறுப்புக்கள் வளர்ந்திருக்கின்றன. இந்த ஆசனப்பைகளின் உட்புறப் படலத்தில் இரத்த நாளங்கள் நிறைந்துள்ளன. பைகளுக்குள் நீரை இழுக்கவும் வெளியே பீச்சவும் முடியும். நீரில் கரைந்துள்ள காற்றைச் சுவாசிக்க இந்த அமைப்பு உதவுகிறது. தொண்டைக்கு அருகிலும் சில இடுக்குக்கள் இம்மாதிரி நீரிலுள்ள காற்றைப் பயன்படுத்த ஏற்றவையாக இருக்கின்றன. பல ஆமைகள் மூச்சுவிடாமல் நெடுநேரம் இருக்கமுடியும். நீருக்குள் முழுகி இரண்டு மூன்று மணிநேரம் இருக்கும். ஆமைக்கு வெளிமூக்குத் தொளை முகத்தில் ஒன்றுதான் உண்டு.

ஆமைக்குக் கண் சிறியது. ஆயினும் பார்வை கூர்மையானது. காதும் நன்றாகக் கேட்கும். ஆமைகள் உஸ் என்று சீறுவதுண்டு. இணைகூடும் பருவத்தில் குழலொலிபோல ஒலிப்பது, உருமுவது அல்லது குரைப்பது போலச் சத்தம் செய்வதும் உண்டு. ஒருவர் தோட்டத்தில் வைத்திருந்த ஆமைகள் அருகில் மேளவாத்திய இசை கேட்டதும் அந்தத் திசையில் தோட்டச் சுவரருகே போய்த் தலையையும் கழுத்தையும் உயர்த்தி அசைவற்று நின்று கேட்குமாம். செவித்தொளை வெளியே தெரியாது. செவிப்பறை அல்லது தோல் மூடியிருக்கும். கடலில் ஆழத்தில் முழுகும்போது நீர் அழுத்தத்தைத் தாங்குவதற்காகக் கடலாமைகளின் செவித்தொளையில் மொத்தமான தோல் வளர்ந்து அடைத்துக்கொண்டிருக்கும். ஆமைகள் சுவையை நன்கு அறியும். பழம், காபேஜ் முதலியவற்றை விரும்பி நாடிச்சென்று உண்ணும். தடித்த ஓடு மூடியிருந்தாலும், ஆமையின் ஓட்டை மெல்லத் தொட்டாலும் அதற்குத் தெரிந்துவிடும். கேடகங்களுக்கெல்லாம் நுண்ணிய நரம்புக்கிளைகள் வருகின்றன.

ஆமைகள் முட்டையிடும். பெரும்பாலானவை சில முட்டைகளே இடும். கடலாமைகள் 100-200 இடுவதுண்டு. சாதாரணமாகக் கோழி முட்டையளவும் சற்றுச் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். சில உருண்டையாகவும், சில நீள்வட்டமாகவும், சில அண்ட வடிவாகவும் இருக்கும். ஒரே தாயின் முட்டைகளிலும் அளவிலும் வடிவிலும் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகைகளில் முட்டை தோல்போன்ற மெல்லிய உறையுள்ளது. சிலவற்றில் சுண்ணாம்பாலான உறுதியான பளபளப்பான ஓடு இருக்கும். ஆமை தரையில் வாலாலும் பின்காலாலும் குழிதோண்டி முட்டையிட்டுக் குழியை நன்றாக மண்ணால் நிறைத்துக் காலால் தட்டியும், உடம்பால் இடித்தும், இட்ட இடந்தெரியாமல் செய்துவிட்டுப் போகும். கடலாமைகள் சஞ்சாரமில்லாத கரைகளுக்கு வந்து, அலைநீர் வரும் எல்லைக்கு அப்பால் சென்று, குழிதோண்டி முட்டையிட்டு, மூடி விட்டு, வந்த வழியே திரும்பாமல் வேறு வழியாகப் போகும். முட்டை பொரிக்கச் சில மாதங்கள் செல்லும். சூரிய வெப்பத்தினால் அது பொரிக்கும். குஞ்சுகள் வெளிவரும்போது அவை பறவை, விலங்கு, மீன் முதலிய பல பிராணிகளுக்கு இரையாகும். ஆமை முட்டையையும் பல பிராணிகள் தேடி அலையும் ; மனிதரும் அலைவார்கள்.

ஆமைகளில் பல மிகப் பெரிதாக வளரும். தோணி ஆமை 6, 6½ அடி நீளம் வளரும் ; முக்கால் டன் எடை இருக்கும். பெருந்தலை ஆமை 500 இராத்தல் இருக்கும். முதுகெலும்புப் பிராணிகளிலெல்லாம் நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருப்பவை ஆமைகளே எனத்தெரிகிறது. பெரிய தரை ஆமைகளிற் சில 250 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கின்றன.

கடலாமைகள் : அயனமண்டலம், சமதட்ப வெப்ப வலயம் இவற்றிலுள்ள கடல்களில் உலகஞ் சுற்றிலும் இவை உலவுகின்றன. எனினும் சில இடங்களில் மிகுதியாக இருக்கின்றன. இவற்றுள் தோணியாமை இப்பொழுது வாழும் ஆமைகளிலெல்லாம் மிகப் பெரியது. இது அருமையாகவே காணப்படுகிறது. இதன் ஓடு நூற்றுக்கணக்கான சிறிய எலும்புகளாலானது. அது தோல் போலவே காண்பதால் இந்த ஆமை தாலாமை எனப்படும். இந்த எலும்புகளிற் சில சற்றுப் பெரியவாகி, உடம்பின் நீளத்தில் வரி வரியாக அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் ஆமையின் முதுகில் ஏழு உண்டு. ஆதலால் இது ஏழுவரியாமை எனவும்படும். இலங்கைக் கரையில் முட்டையிட வரும். இந்தியக் கரைக்கும் அருமையாக வருவதுண்டு. பேராமை அல்லது பச்சையாமை 3, 4 அடி வளரும். 3 அந்தர் எடையிருக்கும். இது பாசி முதலியவற்றை யுண்ணும். இதன் இறைச்சியும் கொழுப்பும் ஓட்டுக்குக் கீழே தோலுக்கு அடியில் வளரும் இணைப்புத் திசுவும் உயர்ந்த உணவுப்பொருள் எனப்படும் ஆமை ரசம் செய்ய உதவும். பருந்தின் அலகு போன்ற அலகுள்ள அழுங்காமையின் கொம்புக் கேடகங்களே உலகப் புகழ் பெற்ற ஆமையோடு. இந்தியக் கடல்களில் அகப்படும் மற்றொன்று பெருந்தலையாமை அல்லது பங்குனியாமை எனப்படும். இது பங்குனி மாதத்தில் பெரும் பாலும் முட்டையிட வருவதால் இப்பெயர் பெற்றுள்ளது.

தரையாமைகளில் தென்னிந்தியாவிலுள்ள ஓர் இனம் மஞ்சள் நிறமான நட்சத்திரம் போன்ற பூப் போட்டது. இந்தியப் பெருங்கடலில் சிஷேல் முதலிய தீவுகளிலும், பசிபிக் பெருங்கடலில் கலபகாஸ் தீவுகளிலும் உள்ள தரையாமைகள் மிகப் பெரியவை. இவற்றில் பெரும்பாலானவை அற்றுப்போய்விட்டன. மனிதன் அழித்துவிட்டான். இவற்றுள் சில 4½ அடி இருக்கும். இவை 150 ஆண்டுகளும், அதற்கு மேலும் உயிர் வாழும். மூன்று வரைகள் உள்ள ஆமை ஒன்றைக் கேணிகளிலும் கிணறுகளிலும் விட்டு வைப்பதுண்டு. இது இருநதால் பூச்சி, புழு, பாசி முதலியவையின்றி நீர் சுத்தமாக இருக்குமென்று எண்ணப்படுகிறது.

ஆமை ஓடு

நன்னிராமைகளில் பாலாமையின் உடல் மீது கொம்பாலான கேடகங்கள் இல்லை. இப்போது காணப்படுவதைப் பண்டைக் காலத்தில் பெரியனவாக இருந்த இச்சாதி ஆமைகளின் பாசில்கள் சிவாலிக் மலையில் காணப்படுகின்றன.

மனிதர் ஆமை முட்டையை உண்கின்றனர். சில இடங்களில் முட்டையிலிருந்து எண்ணெயெடுத்துக்-