பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்

397

ஆயத்தொலைகள்

கறி சமைக்கவும் விளக்கெரிக்கவும் உபயோக்கின்றனர். சில ஆமைகளின் இறைச்சியை உண்கன்றனர். அழுங்காமையோடு அருமையான பொருளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. மிகப் பழைய காலந்தொட்டே இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக இது ஐரோப்பாவுக்குப் போயிருக்கிறது. இதிலிருந்து பெட்டிகளுக்கு மேலே மெல்லிய தகடுபோல ஒட்டுவதும், சிமிழ், பொடி டப்பி, கத்திப்பிடி, சீப்பு முதலிய செய் வதும் உண்டு. தந்தம் போலச் செதுக்குப் பதிவு வேலைக்கும் உதவும்.

ஆமையைப் பிடிப்பது பலவிதமாக நடைபெறுகிறது. பல நாடுகளில் வாழும் நாட்டுக் குடிகள் நீருக்குள் இருக்கும் ஆமையை அம்பினால் எய்கின்றனர். ஈட்டியால் குத்துகின்றனர். நீருக்குள் முழுகிப் பற்றிக்கொண்டு வருவதுமுண்டு. திறமை விளங்கும் இச் செயல்களன்றி வலைபோட்டும் பிடிப்பார்கள். மடகாஸ்காரிலும், கியூபாவிலும், டாரெஸ் ஜலசந்தியிலும் உள்ள நாட்டு மக்கள் எக்கெனைஸ் என்னும் மீனைக் கொண்டு பேராமையைப் பிடிக்கின்றனர். இந்த மீனுக்குத் தலையிலும் கழுத்திலும் பெரிய ஒட்டுறுப்புக்கள் உண்டு. ஆமை மேயும் இடத்துக்குப் படகில் சென்று, இந்த மீன்களின் வாலில் கயிற்றைக்கட்டி விடுவார்கள். இவை பாதுகாப்பான இடத்துக்குத் தப்பியோட முயன்று, நீரின் அடியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆமையின் ஓட்டில் உறுதியாக ஒட்டுறுப்பால் பற்றிக் கொள்ளும். கயிற்றின் உதவியால் ஆமையை மெல்ல வெளியே தூக்குவார்கள். உணவாக மனிதர் விரும்பும் சில வகை ஆமைகளை வளர்க்கப் பண்ணைகள் வைத்திருக்கின்றனர். சில ஆமைகளை வீட்டில் நாய், பூனை போலச் செல்லமாக வளர்க்கின்றனர்.

ஆய்: பார்க்க: அண்டிரன்.

ஆய்: இவர் மைசூர் இராச்சியத்திலுள்ள திரு நாராயணபுரத்தில் வாசஞ் செய்தவர். திருப்பாவைக்கு ஈராயிரப்படி, நாலாயிரப்படி என்னும் இரண்டு வியாக்கியானங்களும், ஆசாரிய இருதயம், ஸ்ரீவசன பூஷணம் என்னும் இவ்விரு நூல்களுக்கும் வியாக்கியானங்களும் அருளிச்செய்தவர். பு. ரா. பு.

ஆய் எயினன் சிறந்த வள்ளல்; வேளிர் மரபினன். தன்னைப் பாடுவோர்க்கு யானையையுங் கொடுத்துள்ளான் (அகம். 208). ‘வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்’ (அகம். 208) என வருவதால் இவன் தந்தை வெளியன் என்றாவது, இவனுக்கு வெளியன் என்ற மற்றொரு பெயருண்டென்றாவது கொள்ளலாம். இவன் பறவைகளையும் காப்பாற்றிய இரக்கமுடையவன் என்று தெரிகிறது. ‘நன்னன்’ என்பானுக்குப் படைத்துணையாக நின்றபோது ‘மிஞிலி’ என்பானாற் கொல்லப்பட்டானென்றும், அப்போது பறவைகள் அவனுக்கு வெயிலின் வெப்பம் படாமல் வானிலே குவிந்து கவிந்து நிழல் தந்தன என்றும் கூறப்படுகின்றது (அகம். 181,208,396).

ஆய்க்கன், ருடால்ப் கிறிஸ்டோப்(Eucken, Rudolph Christoph, 1846-1926) ஜெர்மன் தத்துவ சாஸ்திரி. இவர் முதன் முதல் இயற்றிய தத்துவ சாஸ்திரக் கலைச்சொற்கள் வரலாறு என்னும் நூல் மிக்க பயன் தருவதாகும். அவர் 1908-ல் வாழ்க்கையின் பொருளும் பயனும் என்னும் நூலுக்காக நோபெல் இலக்கியப் பரிசு பெற்றார். அவருடைய நூல்கள் மதப்பற்றுடன் கூடிய மன எழுச்சி உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

ஆய்குடி ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊர்; பொதிகை மலைச்சாரலிலுள்ளது. இப்போதும் இருந்துவருகிறது. பார்க்க : அண்டிரன்.

ஆய்ப்பன், மால்மடி (Eupen and Malmedy) ஜெர்மனிக்கும் பெல்ஜியத்துக்கு மிடையிலுள்ள இரண்டு எல்லைப்புற மாவட்டங்கள். முதல் உலக யுத்தம் முடிந்தபின் 1919-ல் இவை பெல்ஜியத்துக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் ஹிட்லர் 1940-ல் இவற்றை ஜெர்மனியுடன் சேர்த்துக்கொண்டார். இப்பொழுது இவை மீண்டும் பெல்ஜியத்திடமே இருந்து வருகின்றன. மக் : சு. 60,000. அவர்களுள் பதினாயிரம் பேர் பிரெஞ்சு பேசும் வாலூன் சாதியார்; எஞ்சியவர் ஜெர்மானியர்.

ஆய்மா (ஆவிமா,கும்பி) பெரிய மரம். 30-60அடி வளரும். இந்தியாவில் நெடுக இருக்கிறது. மலைகளில் 5,000 அடி வரையில் காணலாம். மரம் பலவித சாமான்கள் செய்ய உதவும். பட்டை பழுப்புக் காகிதம் செய்யவும் கயிறு திரிக்கவும் உதவும்; இருமல், சளிப்பு, சுரம் முதலியவற்றிற்கு மருந்து; வைசூரிக்கும் இதைக் கொடுப்பதுண்டாம். கனி மணமுள்ளது; தின்னத்தக்கது. இலை பீடி, சுருட்டுச் சுற்ற உதவும்; தஸ்ஸர் பட்டுப்புழு வளர்க்கத் தீனி. குடும்பம் : லெசிதி டேசீ (Lecythidaceae). இனம்: காரெயா ஆர் போரியா (Careya arborea).

ஆயத்தொலைகள் (Co-ordinaes): ஒரு தளத்திலோ, முப்பரிமாண இடவெளியிலோ உள்ள புள்ளிகளின் இருப்பிடத்தைக் குறிப்பிட்ட ஆயங்களிலிருந்து அவற்றின் தொலைவைக் கொண்டு குறிப்பிடும் இம்முறை முதலில் டேகார்ட் (Descartes) என்ற கணித வல்லுநரால் 1637-ல் வெளியிடப்பட்டது.

படத்தில் உள்ளபடி தளத்தில் OX, OY என்ற குறிப்பிட்ட திசைகளில் உள்ள இரு கோடுகளை ஆயமாகக் கொள்கிறோம். P என்ற ஒரு புள்ளிக்கு இந்த

ஆயங்களிலிருந்து உள்ள தூரங்களான x,y என்ற தள அல்லது ரிண எண்களை கொண்டு P உள்ள இடத்தை குறிக்கலாம். x, y என்பன கார்டீசிய ஆயங்கள் எனப்படும். மற்றொரு வழி யாதெனில் தளத்தில் என்ற ஆதியையும், அதன் வழியே செல்லும் OX என்றதொரு குறிப்புத் திசையையும்