பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்க்கிடு

403

ஆர்க்கிடு

தளச்சமச்சீரில் அமைந்திருக்கும். உள் வட்டத்தின் மேலிதழ் மற்றெல்லா இதழ்களையும்விட மிகப் பெரிதாகவும் பலமாகவும் வளர்ந்திருக்கும். அதற்கு உதடு (Labellum) என்று பெயர். பூவின் மற்றப் பாகங்களுக்கு அடியில் இருக்கும் கீழ்ச்சூலறையானது (Inferior ovary) அரைவட்ட அளவு அதாவது 180° முறுக்கிக் கொள்வதனாலே, பிறப்பின்படி மேற்பாகத்தில் இருக்கவேண்டிய இந்த உதட்டிதழானது பூவின் கீழ்ப்பாகத்திற்கு வந்து விடுகிறது. இது பூந்தேனைப் பருகப் பறந்துவரும் பூச்சி இறங்கும் இடமாக உதவுகிறது. சில சாதி ஆர்க்கிடுகளிலே உதட்டின் கீழிருந்து ஒரு பூந்தேன் குழாய் வளர்ந்திருக்கும்.

தொற்று ஆர்க்கிடு வேர்
(மேலே) தொற்றார்க்கிடு விழுதின் குறுக்குவெட்டு. 1. வெலாமென். 2. வெளிப்புறத் தோற்படை. 3. புறணி. 4. நடுவுருளை. (கீழே) விழுதின் குறுக்குவெட்டு வெளிப்பகுதியின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. வெலாமென் ஆறு, ஏழு அடுக்குக்கள் உள்ளது. 2. வெளிப்புறத் தோற்படை யணுக்கள் நான்கு தெரிகின்றன. 3. வெலாமென் உறிஞ்சும் நீரை வேரினுள்ளே கடத்தும் மெல்லிய சுவருள்ள வழியணு.

ஆண்பாகம் மூன்றடுக்கு வட்ட முறைப்படி மூன்று கேசரங்கள் உள்ளதாக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பூக்களில் சாதாரணமாக நன்றாக வளர்ந்த கேசரம் ஒன்றும், வளராத போலிக்கேசரங்கள் இரண்டும் இருக்கின்றன. உதாரணமாக ஆர்க்கிஸ். சைப்பிரிபீடியம் சாதியிலும் அதைச் சேர்ந்த சிலவற்றிலும் இரண்டு கேசரங்களும் ஒரு போலிக் கேசரமும் உண்டு. இந்தப் பண்பினாலே ஆர்க்கிடுகள் ஒரு கேசரமுள்ளவை, இரு கேசரமுள்ளவை என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆர்க்கிஸ் பூவின் ஆதானம் பூவின் நடுவே மேலே நீண்டு வளர்ந்திருக்கிறது. அதற்குத் தம்பம் என்று பெயர். கேசரங்கள் அந்தத் தம்பத்துக்கு இணைந்து வளர்ந்திருக்கின்றன. இதே தம்பத்தின் உச்சியில்தான் இந்தப் பூவின் மூன்று சூல்முடிகளும் இருக்கின்றன. ஆகவே ஆர்க்கிடுகளில் கேசரம் சூலகத்துடன் ஒட்டியிருக்கிறது. கேசரம் அப்படி நிற்கும் நிலை சூலணைகேசரநிலை எனப்படும். ஆர்க்கிடுகளில் பெரும்பாலும் மகரந்தப் பையறையிலுள்ள தூள்கள் ஒன்று சேர்ந்து மகரந்தத் திரள்களாகின்றன. பிசின் போன்ற நுண்மையான இழைகள் இந்த மகரந்தத் தூள்களை ஒட்ட வைக்கின்றன. இந்த இழைகள் கூடித் திரளின் அடியில் ஒரு காம்பு போல ஆகின்றன. ஒவ்வொரு காம்பும் சற்று அகன்று ஒட்டிக் கொள்ளும் வில்லையில் முடிகிறது. ஒரு கேசரத்தின் மகரந்தப் பையின் இரண்டு அறைகளிலும் அறைக்கு ஒன்றாக இரண்டு திரள்கள் இருக்கின்றன. இரண்டு திரள்களின்

ஆர்க்கிஸ் சாதி
A. ஆர்க்கிஸ் மாஸ்குலா : பூவின் பக்கப் பார்வை: உதட்டிதழ் தவிர மற்றப் புறவிதழ் அகவிதழ்களையெல்லாம் நீக்கியிருக்கிறது. உதட்டிதழின் அரைப்பாகமும், தேன் குழாயின் மேற்பாகமும் கத்தரித்திருக்கின்றன. 1. மகரந்தப்பை இரண்டு அறைகளும் அவற்றுள் இரண்டு மகரந்தத் திரள்களும். 2. ராஸ்டெல்லம். 3. உதட்டிதழ். 4. தேன் குழாய் 5. உள்ளடங்கிய சூலகம். 6. சூல்முடி

B. ஆர்க்கிஸ் மாக்குலேற்று : பூவின் முன் பார்வை. 1,4,5, புறவிதழ்கள். 2,3,6. அகவிதழ்கள். அவற்றில் 6. உதட்டிதழ். 7. உதட்டிதழிலிருந்து வளர்ந்திருக்கும் தேன் குழாயின் வாய். 8. மகரந்தப்பை : இரண்டு அறைகளும் அவற்றுள் மகரந்தத் திரள்களும் தெரிகின்றன. 9,9. சூல் முடிகள்.

C. ஒரு மகரந்தத்திரள். 1. திரள். 2. காம்பு. 3. ஒட்டிக் கொள்ளும் வில்லை.

D. ஆர்க்கிஸ் மாஸ்குலா மகரந்தத்திரள். 1. பென்சில் முனையால் அதையெடுத்தவுடன் அது நிமிர்ந்து நிற்கும் நிலை. 2. சற்று நேரம் சென்றதும் காற்றுப்படுவதால் உலர்ந்து முன்னுக்கு வளைந்து நிற்கும் நிலை.

E. பூ வெட்டுப் படம் : பூ முறுக்கிக்கொண்டு மேல்கீழாகத் திரும்புவதற்கு முன்னுள்ளது போலக் காட்டியிருப்பது. கரும் புள்ளி மேல்பாகத்தைக் குறிக்கிறது. வெளியிலிருந்து உள்ளுக்கு முறையே பூக்காம்பிலை ஒன்று. புறவிதழ் மூன்று, அகவிதழ் மூன்று. மேற்பக்கத்திலுள்ளது உதட்டிதழ். கேசரச் சுற்றில் ஒரு கேசரம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அதன் இருபுறமும் வளராத போலிக் கேசரங்கள். நடுவில் மூன்று சூலிலைகளாலான ஒரே சூலறையுள்ள சூலகம். மூன்று சுவரொட்டுச் சூலடுக்குக்கள்.

A.C.D. டார்வினையும், B. மக்லியோடையும். E. ஐக்லரையும் தழுவியவை.

காம்புகளின் நுனியிலுள்ள இரண்டு வில்லைகளும் சூல் முடிகள் மூன்றில் மலடான ஒரு சூல்மூடியின் மேலே