பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்சனிக்கு

409

ஆர்டென்

திடீரென்று குளிர்வித்தால் மஞ்சள் ஆர்சனிக்கு (λ Arsenic) கிடைக்கிறது. இது ஒரு நிலையற்ற பொருள்; இதுகார்பன் டைசல்பைடில் கரையும்; வெளிச்சம் பட்டால் பழுப்பு ஆர்சனிக்காக மாறும். 2. ஆர்சனிக்கு ஆவிதானே குளிர்ந்து திடப்பொருளாக மாறினால் கறுப்பு ஆர்சனிக்கு (β Arsenic) கிடைக்கும். 3. பழுப்பு ஆர்சனிக்கு (y Arsenic) நொறுங்கும் தன்மையுடையது; வெப்பத்தைக் கடத்தக்கூடியது.

பண்புகள் : இதன் ஒப்பு அடர்த்தி 5.7. மற்றெல்லா அலோகங்களைக் காட்டிலும் இது கனமானது. இதன் ஆவி வெள்ளைப்பூண்டு வாசனை உடையது : 180° வெப்ப நிலைக்குச் சூடு செய்தால் இது நீலநிறச் சுடருடன் எரிந்து ஆர்சனிக்கு ஆக்சைடாக மாறும். குளோரினுடன் சாதாரண வெப்ப நிலையிலே கூடும். இதர உப்பீனிகளுடனும் கந்தகத்துடனும் நேரடியாகக்கூடும். நீர்த்த கந்தகாமிலமும், நைட்ரிக் அமிலமும் ஆர்சனிக்கைக் கரைப்பதில்லை. அனால் அடர் கந்தகாமிலத்திலும் நைட்ரிக அமிலத்திலும் ஆர்சனிக்குக் கரையும்.

பயன்கள்: ஆர்சனிக்குப் பல உலோகக் கலவைகளைச் செய்வதற்குப் பயன்படுகிறது. காரீயத்துடன் இதைச் சிறிதளவு சேர்த்தால் காரீயம் கெட்டிப்பட்டுத் துப்பாக்கிக் குண்டு முதலியன செய்யப் பயன்படுகிறது. மற்றும் ஆர்சனிக்குச் சேர்ந்த கூட்டுப் பொருள்கள் பல வர்ணச் சேர்க்கைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளாகவும் பயன்படுகின்றன. ஆர்சனிக்குக் கொடிய நஞ்சானாலும் இதைச் சிறிய அளவில் உட்கொள்ளப் பழக்க படுத்திக்கொண்டால், தேகம் பருத்து, நிறமும் தேஜசும் விருத்தியாவதோடு சுவாசித்தலும் சீரடையும். இதை உட்கொள்வோர் மற்ற நஞ்சுகளால் வேதனைப்படுவதில்லை. மேனாட்டு முறைகளிலும் ஆயுர்வேத முறைகளிலும் ஆர்சனிக்குப் பல மருந்துகள் செய்யப் பயன்படுகிறது.

மார்ஷ் சோதனை: ஆர்சனிக்கைக் கண்டறிந்து மதிப்பிட இது முக்கியமானது. இதில் ஆர்சனிக்குக் கூட்டைக் கொண்டதாகக் கருதப்படும் பொருளை நீரில் கரைத்துச் சுத்தமான ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலப்பார்கள். இதை ஹைடிரஜனால் வினைப்படுத்தினால் ஆர்சீன் வாயு தோன்றும். காரீய அசிடேட்டையும் சோடாச் சுண்ணாம்பையும் கொண்ட குழலின் வழியே இதைச் செலுத்திச் சூடேற்றினால் ஆர்சீன் சிதையும். குழலை ஆங்காங்குக் குறுகலாக அமைத்தால் அவ்விடங்களில் ஆர்சனிக்குப் படியும். இதை நிறுத்துப் பொருளிலிருந்த ஆர்சனிக்குக் கூட்டின் அளவைக் கணக்கிடலாம். அன்டிமனி கூட்டுக்களிலும் இதேமாதிரியான கருமையான படிவு தோன்றலாம். ஆனால் இப்படிவைச் சோடியம் ஹைபோகுளோரைட்டுக் கரைவில் கரைத்தால் ஆர்சனிக்குக் கரையும்; அன்டிமனி கரையாது. நஞ்சுண்டு இறந்தோரது வயிற்றிலுள்ள பொருளை எடுத்து இவ்வகையில் ஆராய்ந்து, சாவு ஆர்சனிக்கால் விளைந்ததா என அறிய இச்சோதனை பயனாகிறது.

ஆர்சனிக்கின் கூட்டுக்கள்

ஹைடிரைடு (As, H3): இது ஆர்சீன் எனவும் வழங்கும். ஆர்சனிக்கின் கூட்டுக்களில் ஜனித ஹைடிரஜனைச் செலுத்தியாவது, நாகம் அல்லது சோடியத்துடன் ஆர்சனிக்கைக் கலந்து சூடேற்றி, நீர்த்த அமிலத்தில் கரைத்தாவது இதைத்தயாரிக்கலாம். கொடிய நஞ்சான இவ்வாயு வெள்ளைப்பூண்டின் மணமுள்ளது. எரியுந்தன்மையது; குறைக்கும் தன்மையது. இது உப்பீனிகளுடன் கூடும். உலோகங்களை இவ்வாயுவில் சூடேற்றினால் அவை ஆர்சனைடுகளை அளித்து ஹைடிரஜனைத் தோற்றுவிக்கும்.

ஹாலைடு : ஆர்சனிக்கு நான்கு உப்பீனிகளுடன் கூடி ஹாலைடுகளை அளிக்கிறது. ஆர்சீனியஸ் குளோரைடு நிறமற்ற எண்ணெய் போன்ற திரவம். ஆர்சீனியஸ் புரோமைடும் அயோடைடும் படிக வடிவான திரவங்கள். இவை மருத்துவத்தில் பயனாகின்றன.

ஆக்சைடுகள் [ஆர்சீனியஸ் ஆக்சைடு (As4, O6)]: இது வெண்மை ஆர்சனிக்கு எனவும் அழைக்கப்படும். இந்தியாவில் இது வெள்ளைப் பாஷாணம் என வழங்குகிறது. இது படிக வடிவில் சில கனியங்களில் காணக் கிடைக்கும். இது சுமார் 190° வெப்பத்தில் பதங்கமாகிறது. இது ஒரு கொடிய நஞ்சு. பல உலோகங்களைப் பிரித்தெடுக்கும்போது இது ஓர் அசுத்தமாகக் கிடைக்கிறது. இது நீரில் அவ்வளவாகக் கரையாது. கண்ணாடியின் நிறத்தை நீக்கவும், ஆர்சனிக அமிலத்தின் தயாரிப்பிலும், நிறப் பொருள்களிலும், பூச்சிகொல்லிகளிலும் இது பயனாகிறது.

ஆர்சனிக பென்டாக்சைடு (As2, O3) : ஆர்சீனியஸ் ஆக்சைடை ஆக்சீகரணித்து இதைப் பெறலாம். இது நீரை ஈர்க்கும் இயல்புள்ள படிகம். இதைச் சூடேற்றினால் இது ஆக்சிஜனை இழந்து ஆர்சீனியஸ் ஆக்சைடாக மாறும்.

ஆர்சீனியஸ் ஆக்சைடுடன் சம்பந்தமுள்ள ஆர்சீனியஸ் அமிலம் (H3AsO3) இதுவரை தனியே பிரிக்கப்படவில்லை. ஆனால் இதன் உப்புக்களான ஆர்சனைட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. கார ஆர்சனைட்டுகள் நீரிற் கரையும். தாமிரக ஆர்சனைட்டுக் காலிகோ துணியில் அச்சிடவும் சுவரில் ஒட்டும் காகிதங்களிலும் பயனாகிவந்தது.

ஆர்சனிக பென்டாக்சைடு நீரிற் கரைந்து ஆர்சனிக அமிலத்தை (H3AsO4 ) அளிக்கும். சாயப் பொருள் தயாரிப்பில் இது முன்னர்ப் பயனாகி வந்தது. ஆர்ச னேட்டுகள் தம் பண்புகளில் பாஸ்பேட்டுகளை ஒத்திருக்கும்.

சல்பைடுகள் : அரிதாரம் (Orpiment) என்ற கனியமும், மனோசிலை (Realgar) என்ற கனியமும் இயற்கையிற் கிடைக்கும் சல்பைடுகள். இவை வாணத் தொழிலிலும் நிறப் பொருளாகவும் பயனாகின்றன.

கரிமக் கூட்டுக்கள் : ஆர்சனிக்கின் கரிமக் கூட்டுக்கள் பல மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளைப் பாஷாணத்தையும், பொட்டாசியம் அசிட்டேட்டையும் கலந்து சூடேற்றிக் காக்கோடில் ஆக்சைடு (Cacodyl oxide) என்ற பெயருள்ள கூட்டைப் பெறலாம். இதிலிருந்து பெறப்படும் பல பொருள்கள் க்ஷயம், நீரிழிவு, குஷ்டம், மேகக்கிரந்தி முதலிய நோய்களுக்கு மருந்தாகின்றன. அனிலீன் ஆர்சனேட்டை 180°க்குச் சூடேற்றினால் கிடைக்கும் அமிலத்தின் சோடிய உப்பு அட்டாக்சில் (Atoxyl) என்ற பெயருள்ள கூட்டு. இது மேகக்கிரந்திக்கும் தூக்க நோய்க்கும் மருந்தாகப் பயனாகிறது. அறுநூற்று ஆறு சோதனைகளுக்குப் பின்பு பால் எர்விக் கண்டறிந்த சால்வர்சான் என்ற மருந்தும் ஆர்சனிக்குக் கூட்டேயாம். இதைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நியோசால்வர்சான் என்ற மருந்து இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மேகக்கிரந்திக்குத் தலைசிறந்த மருந்து. பார்க்க: ஆர்ஸ்பினமீன்.

ஆர்டென் (Ardennets) வடபிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய பகுதிகளிலுள்ள மலைகளும் காடுகளுமாகும். சராசரி உயரம் 1,611 அடி.. ஐரோப்பாவிலுள்ள சில பெரிய ஒக் மரக் காடுகளும் பீச் மரக் காடுகளும் இங்கே இருக்கின்றன. மியூஸ் ஆறு பாய்கிறது. வட-