பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகப்பொருள்

11

அகப்பொருள்

புடையராதல் வேண்டும். இல்லையேல். அவ்வாழ்க்கை ஒரு நெறிப்பட்டு நடைபெறாது. இல்லற வாழ்வில் தலைப்படும் ஒருவன் ஒருத்தியென்னும் இருவருடைய உள்ளங்களில் தோன்றும் ஒத்த அன்பின் விளைவாகிய உணர்ச்சிகளையும், அவ்வுணர்ச்சிகள் ஒற்றுமைப்பட்ட நிலையில் அவர்கள் எய்தும் இன்பப் பேற்றினையும், பின்னர் மணஞ் செய்துகொண்டு நடத்தும் மனையறங்களையும், உலகியல் இன்பங்களைத் துய்த்துக் கழித்தபின் அவர்கள் உள்ளத் துறவு மேற்கொண்டு ஒழுகும் இயல்பினையும் உள்ளவாறு எடுத்துக் கூறுவதே அகப் பொருள்பற்றிக் கூறுவதாகும். இஃது உலக நலம் கருதியதாதலின் இறையனார் முதலிய ஆன்றோரும் அகப் பொருள் இலக்கணம் வகுக்க முற்பட்டனர். இக்காதலொழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக் கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப்பெருஞ் சிறப்பாகும். நல்லிசைப் புலமைத் தொல்லாசிரியர்களும், தெய்வப் புலமைத் திருவள்ளுவரும், திருவருட் செல்வர்களான மெய்யடியார் பலரும் இந்த அக ஒழுக்கமாகிய அன்பு நெறி பற்றி இன்பம் எய்தும் வழி கூறும் இலக்கணங் களும் இலக்கியங்களும் பல இயற்றியுள்ளமையால் இதனை இழிந்த காமமென்று ஒதுக்குதல் பொருந்தாது. பேரின்பத்தைச் சொல்லால் விளக்குதற்கு இதுவே சிறந்த வழி என மெய்யடியார் கொண்டுள்ளனர்.

உலகிற் பிறந்த மக்கள் எய்துதற்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு எனப்படும். அவற்றுள், வீடென்பது, துறவாகிய காரணவகையாற் கூறப்படுவதன்றி இலக்கண வகையாற் கூறப்படாதது ஆதலின், ஏனைய மூன்றுமே நூல்களாற் கூறப்படும். அவற்றுள் இன்பத்தை அகமென்றும், ஏனை இரண்டையும் புறமென்றும் அடக்கிக் கூறுதல் தமிழ் மரபு. அவற்றுள் அகமாவது, ஒத்த அன்பினையுடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறக்கும் இன்பமாகும். இஃது, அக்கூட்டத்தின் பின்னர் இவ்வாறு இருந்ததென அவ்விருவராலும் ஒருவர்க்கொருவர் எடுத்துக்கூற முடியாததாய் உள்ளத்து உணர்வாலே நுகர்ந்து இன்பமுறுவதொன் முகலின் அகமெனப்பட்டது. இனி, ஒத்த அன்புடையாராலேயன்றி எல்லோராலும் துய்த்து உணரப்படுவனவாய், இவ்வாறு இருந்தனவெனப் பிறர்க்கு எடுத்துக் கூறப்படுவனவாய், இருத்தலால் அறமும் பொருளும் புறமெனப்பட்டன:

அவ்வகப் பொருளானது கைக்கிளை, (முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும்) ஐந்திணை, பெருந்திணை என எழுவகைப்படும். இவற்றுள் கைக்கிளையாவது, ஒருதலைக் காமம்; அஃதாவது இன்ப நுகர்ச்சிக்கு உரிய இருபாலாருள் ஒருவரிடம் மட்டும் தோன்றும் உணர்ச்சியாகும். இது சிறுமையுறவென்றும் கூறப்படும். வடநூலார் கூறும் பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்னும் எண்வகை மணத்துள், ஆசுரம் முதலிய மூன்றும் இக்கைக்கிளையின் பாற்படும். இனி, ஐந்தினையாவது, குலம் குணம் வடிவம் செல்வம் இளமை அன்பு முதலியவற்றால் தம்முள் ஒத்த ஒருவனும் ஒருத்தியும், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். இது மேற் கூறிய காந்தருவ மணத்துடன் ஒத்த இயல்புடையது. பெருந்திணையாவது, ஒத்த அன்பின்றி மிக்கும் குறைந்தும் உள்ள அன்புடையார் கூடும் ஒழுக்கமாகும். மண மக்களுடைய மன நிலைகளை அறிந்தும் அறியாமலும் அவரவருடைய பெற்றோர்களே உடன்பட்டுச் செய்து வைக்கும் மணமாதலால் இவ்வொழுக்கத்தில் அன்பின் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் உண்டு. மேற் குறித்தவற்றுள் ஏனைய நான்கு மணங்களும் இத்திணையின் பாற்படும்.

அகத்தின் கூறாகிய இவற்றுள் ஒத்த அன்புடையார் கூட்டமாகிய ஐந்திணை மணமே நூல்களாற் பாராட்டப்படுவதாயிற்று. இவ்வைந்திணை, முதற்பொருள், கருப்பொருள் உரிப்பொருள் என்பவை பற்றிக் கூறப்படும். நிலமும் காலமும் முதற் பொருள். தெய்வம், உணவு, மரம், விலங்கு, புள் முதலானவை கருப் பொருள்கள். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஒழுக்கங்கள் ஐந்தும் உரிப்பொருள்களாகும். இவற்றுள், முதற்பொருள் கருப்பொருள்கள் வாராமலும் அகப்பொருட் செய்யுள் பாடப்படலாம். உரிப்பொருளாகிய ஒழுக்கம் கூறாத அகப் பொருட் செய்யுளே இல்லை. ஒருதலையான அன்புடைய கைக்கிளையும், ஒவ்வாத அன்புடைய பெருந்திணையும் இன்பக் குறைபாடு உடைமையால் அகப்புறமெனவும் வழங்கப்படும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்கும் முறையே இருத்தல் புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் ஒழுக்கங்கள் உரியன. நிலமாகிய முதற்பொருள் மயங்காது. காலமும் கருப்பொருளும் உரிப்பொருளும் தமக்கு உரிய திணைகளை விட்டுப் பிற திணைகளோடு மயங்கியும் வரும். தனக்கென நிலமில்லாத பாலையொழுக்கமும் கைக்கிளை யும் பெருந்திணையும் முல்லை முதலான நான்கு நிலத்தும் நிகழும்.

அகப்பொருளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் முதன்மையிடம் பெறுதற்குரியவர் தலைவன், தலைவி, தோழி என்பவராவர். பாங்கன், செவிலி, நற்றாய், பாணன், அறிஞர், கண்டோர் முதலான பிறரும் ஆங்காங்கு இடம் பெறுவர். இவருள் தலைவன் தலைவி என்னும் இருவர்க்கும் சிறப்பாக இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன, அறிவும், ஆற்றலும், ஆராய்ச்சியும், பண்பும், நண்பும், பழிபாவம் அஞ்சுதலும், கடைப் பிடியும், நிறையும், கலங்காது துணிதலும் தலைவனுக்கு உரிய இலக்கணங்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பன எப்பொழுதும் தலைவியை விட்டு நீங்காமல் இருத்தற்குரியன. அடக்கம், நிறை, நேர்மை முதலியனவும் தலைவியினிடம் இருக்கவேண்டும் பண்புகள். தோழி என்பவள் செவிலி மகள்; இளம்பருவ முதலே தலைவியைவிட்டு விலகாதிருப்பவள். இவள் குற்றேவல் மகளெனக் கூறப்படினும் காலத்திற்கேற்ற அறிவும், சொல்லாற்றலும் பெற்றிருப்பள்.

ஐந்திணையொழுக்கம் களவு கற்பு என இருவகைப்படும். களவாவது, தலைவனும் தலைவியும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது. இக்களவு பிறர்க்குரிய பொருளை அவர் அறியாமற் கவர்ந்து கொள்ளுங் களவுபோலத் தீயது அன்று. அத்தலை மக்கள் பின்பு மணஞ் செய்துகொண்டு மனையறம் பேணிவருவதால் அறமாகவே கருதப்படும். இக்களவு இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என நான்கு வகையால் நடைபெறும். இயற்கைப் புணர்ச்சியாவது, ஒத்த அன்புடையார் இருவர், கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது. இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன், மீண்டும் தலைவியைக் காணலாமென்னும் ஆசை மிகுதியால் அடுத்தநாள் அவ்விடத்திற்குச் சென்று, தன்னைப்போலவே காதல் மீதூரப் பெற்று வந்து நின்ற தலைவியைக் கூடுதல். பாங்கற் கூட்டமாவது, குறியிடத்துத் தலைவி வந்து நின்ற சிலையைப் பாங்-