பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்ஜென்டீனா

414

ஆர்ஜென்டீனா

பால் கொடுக்கும்போது தாய் மல்லாந்து படுத்துக் கொண்டு, இரண்டு குட்டிகளையும் தன் வாலாலும் கால் கைகளாலும் மார்பில் அணைக்கும். அவை பால் வரும் இடத்தை நக்கிப் பால் குடிக்கும்.

ஆர்ஜென்டீனா தென் அமெரிக்காவில், தெற்கில், அட்லான்டிக் சமுத்திரத்தை அடுத்துள்ள நாடு. பரப்பு: 1,0,79,965 ச. மைல்.

இந்நாடு மலைப்பாங்காகவும் மேடுபள்ளங்களுடையதாகவும் இருக்கிறது. சராசரி 13,000 அடி உயரமுள்ள ஆண்டீஸ் மலைத்தொடர் இந்நாட்டின் ஒரு முக்கிய அமிசம். போனஸ் அயர்ஸுக்குத் தெற்கே விரிவான மலைப்பிரதேசம் இருக்கிறது. வடக்கேயும் கிழக்கேயும் செழிப்புள்ள பள்ளத்தாக்குக்கள் உள்ளன. இங்குள்ள புல்வெளிகள் விவசாயத்திற்கும் மேய்ச்சலுக்கும் மிகவும் பயன்படுகின்றன. இவற்றிற்குப் பாம்பாப் புல்வெளிகள் என்று பெயர். தென் ஆர்ஜென்டீனாவிற்குப் பெட்டகோனியா என்பது பெயர். இங்குள்ள முக்கியமான ஆறு பிளேட் ஆறு.

இந்நாட்டின் தென்கோடி அன்டார்க்டிக்கின் அருகேயிருப்பதால் மிகுந்த குளிர்ப்பிரதேசமாயிருக்கிறது. ஆயினும் பெட்டகோனியாவின் கிழக்குப் பக்கம் அட்லான்டிக் நீரோட்டத்தால் சிறிது வெப்பமடைகிறது. வட ஆர்ஜென்டீனாவில் கோடைகாலத்தில் வெப்பம் மிகுதியாயிருக்கிறது. சில சமயங்களில் 105° பா.வரை வெப்பநிலை உயர்கிறது.

ஆர்ஜென்டீனா

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மழை மிகுதியாகப் பெய்கிறது. ஆண்டுதோறும் இங்கு 40 அங்குலம் முதல் 60 அங்குலம் வரை மழை பெய்கிறது. தென் பகுதியில் மழை மிகக் குறைவாயிருக்கிறது. மத்திய ஆர்ஜென்டீனாவில் 20 முதல் 39 அங்குலம் வரை மழை பெய்கிறது. இங்குள்ள வெப்ப மண்டலத்தில் அயன மண்டலத் தாவரங்கள் மிகுதியாக உள்ளன. வட பகுதியில் பனையும் இடையிடையே வேலைக்கான பல வகை மரங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆண்டீஸ் மலையடிப் பிரதேசங்களைத் தவிரப் பெட்ட கோனியாவின் பிற பகுதிகள் விவசாயத்திற்குப் பயனின்றி இருக்கின்றன.

இங்குள்ள கரிசல் மண் இந்நாட்டின் செல்வத்திற்கு ஆதாரமாயிருக்கிறது. எருப்போட்டு வளப்படுத்த வேண்டாதவாறு இப்பூமி வளமுடையதாயிருக்கிறது. தோல் பதனிடுவதற்கு உபயோகப்படும் கெப் ராக்கோ என்னும் ஒருவகை மரம் இங்கு மிகுதியாக விளைகிறது.

டங்ஸ்டன், வெள்ளீயம், நாகம், செம்பு, வெள்ளி, பொன் ஆகியவை சிறிது கிடைக்கின்றன. முக்கியமான விளைபொருள்கள் கோதுமை, சோளம், ஆளி விதை, புகையிலை முதலியன. செய்பொருள்கள் சிமென்டு, சவர்க்காரம், தட்டுமுட்டுச் சாமான்கள், கண்ணாடிச் சாமான்கள், செருப்பு, துணிமணி முதலியன. கானடாவிற்கு அடுத்தபடியாகக் கோதுமையும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மக்காச் சோளமும், ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாகக் கம்பளி மயிரும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

இந்நாட்டின் மக்: சு. 1,71,80,000 (1950) இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் வெள்ளையர்கள். இவர்களிலும் மிகுதியானவர்கள் ஸ்பானியர் அல்லது இத்தாலியர் மரபில் வந்தவர்கள். சுதேசிகளான அமெரிக்க இந்தியர்கள் சுமார் 30,000 பேருக்குக் குறைவாகவே இருக்கின்றனர். நாட்டு மொழி ஸ்பானிய மொழிதான். இந்நாட்டில் ஆடுமாடுகளும் செழிப்பான விளைநிலங்களும் நிரம்ப இருப்பினும், மக்களில் பகுதியினர் பெரிய நகரங்களிலேயே வசிக்கின்றனர். 1½ லட்சம் மக்கள் ஆலைகளில் வேலை செய்கின்றனர். இங்குப் பல இருப்புப்பாதைகளும் பெரிய சாலைகளும் இருக்கின்றன. தலைநகரமான போனஸ் அயர்ஸ், மக் : 30,00,371 (1947). அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்தபடியாகப் பெரிய துறைமுகப்பட்டினமாகும். ரோசேரியோ, மக் : 7,61,300, கார்டோபா மக்: 3,51,644, லாபிளாட்டா, மக்: 2,68,000 என்பவை முக்கியமான பிற நகரங்கள்.

வரலாறு: 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆர்ஜென்டீனாவின் வரலாறு அங்கிருந்த ஆதிக்குடிகளின் வரலாறே. 1516-ல் ஜுவான் டெ சோலிஸ் என்னும் ஸ்பானிய மாலுமி ஆர்ஜென்டீனாவைக் கண்டு பிடித்தான். 1535-ல் ஸ்பெயின் மன்னனால் அனுப்பப்பட்டு ஆர்ஜென்டீனாவிற்கு வந்த டான் பிட்ரோ மெண்டோசா என்பவன் போனஸ் அயர்ஸ் குடியேற்றத்தை நிறுவினான். இக்குடியேற்றத்தை நாட்டு மக்களான ஆதிக்குடிகள் போரிட்டு அழித்துவிட்டனர். அங்கிருந்த ஐரோப்பியர்கள் பரானா ஆற்றின் வழியே சென்று, ஆசூன் சியோன் என்னுமிடத்தில் 1537-ல் குடியேறினர்.

சில ஆண்டுகட்குப் பிறகு டொமினோ மார்ட்டினெசு என்பவர் முதல் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1810 வரையில் ஆர்ஜென்டீனா ஸ்பெயின்