பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரஞ்சு சுதந்திர நாடு

417

ஆரம்பவாதம்

சிட்ரஸ் சாதிச் செடிகளைப் பற்றி எலுமிச்சை, கடாரை, கொழிஞ்சி, பம்பளிமாசு முதலிய தனிக் கட்டுரைகளுண்டு.

ஆரஞ்சு சுதந்திர நாடு: இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்திலுள்ள ஒரு மாகாணம். ஆங்கிலேயர்கள் 1820 க்குப் பிறகு பெரிய எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவில் வந்து குடிபுகத் தொடங்கினர். இதனால் தென் ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் இருந்த போயர்கள் அங்கிருந்து பெரிய வெளியேற்றம் ஒன்றைத் தொடங்கி, வடக்கு நோக்கிச் சென்று புது இடங்களில் குடியேறத் தொடங்கினர். 1836-ல் இவர்கள் ஆரஞ்சு நதியைக் கடந்து, ஆரஞ்சு நதிக் குடியேற்றத்தை அமைத்தனர். 1854லிருந்து இக்குடியேற்றம் சுதந்திரம் பெற்று, ஆரஞ்சு சுதந்திர நாடு என்று வழங்கி வருகிறது. இக்குடியேற்றம் டிரான்ஸ்வால் ஜனாதிபதிபால் குரூகருக்கு உதவியாக இரண்டாம் போயர்யுத்தத்தில் 1899-ல் பிரிட்டனுடன் போர்புரிந்தது. ஆனால் அந்த யுத்தத்தில் பிரிட்டன் வெற்றியடைந்ததால் ஆரஞ்சு சுதந்திர நாடு 1900-ல் பிரிட்டனுடைய உடைமையாயிற்று. 1909 முதல் இது தென் ஆப்பிரிக்க ஐக்கியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள பெரும்பாலோருக்குத் தொழில் கால்நடை வளர்த்தல். இங்கு மழை குறைவு. தலைநகரம்: புளும்பான்டேன் (த.க.); பரப்பு : 49,647 ச. மைல் : மக் : 10.18.207 (1951). பெரும்பாலோர் சுதேசிகள் எம். வீ. சு.

ஆரஞ்சு நதி தென் ஆப்பிரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஆறுகளுள் மிகப் பெரியது. ஆரஞ்சு என்ற டச்சு அரச குடும்பத்தாருடைய பெயரை இடப் பெற்றது. அங்குள்ள சுதேசிகளான ஹாட்டன்டாட்டுக்கள் அதைக் கரீப் அதாவது பெரிய நதி என்று அழைக்கிறார்கள். இது மேற்கு நோக்கி 1.300 மைல் ஓடி அட்லான்டிக் சமுத்திரத்தில் சேர்கிறது. இதன் பெரிய கிளை வால்நதி என்பதாகும். பல நீர்வீழ்ச்சிகள் இருப்பதாலும், நதிமுகத்தில் மணல் திட்டு இருப்பதாலும், கப்பல் போக்குவரத்துக்கு வசதியில்லை. ஆனால் இது நீர்ப்பாசனத்துக்குப் பயன்பட்டு வருகிறது.

ஆரணி சென்னை இராச்சியத்தில் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள பட்டணம். கோட்டை ஒன்று இருக்கிறது. சிலகாலம் சேனை இருந்த இடம். பட்டு, பஞ்சு, ஜவுளி நெசவு நடக்கிறது.

ஆரணியகம் என்னும் சொல்லின் பொருள் அரணியத்தைச் சார்ந்தது என்பதாகும். வேதம், மூலசுலோகங்கள் அடங்கிய சங்கிதைகளாகவும், அவற்றின் விரிவுரைகள் அடங்கிய பிராமணங்களாகவும் பிரிக்கப்படும். சில வேதங்களிலுள்ள பிராமணங்களின் இறுதிப் பாகங்களே ஆரணியகங்கள் எனப்படும். உபநிடதங்களில் பல இந்த ஆரணியகங்களின் பகுதிகளே யாகும். பிராமணங்கள் மூல சுலோகங்களுக்கு வேள்வி முறையை அனுசரித்து விரிவுரை செய்கின்றன. பிராமணங்களின் பின்னுள்ள ஆரணியகங்களில் தத்துவ ஆராய்ச்சி மிகச் சிறிய அளவே காணப்படுகின்றது. ரிக்வேதத்தில் ஐதரேய, கௌஷீதகி என இரண்டு பிராமணங்கள் உண்டு. ஐதரேய பிராமணத்திலுள்ள ஐதரேய ஆரணியகத்தில் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன. அவை ஐந்து சருக்கங்களாகப் பிரிக்கப்படும். முதல் சருக்கத்தில் சோம் யாகமும், இரண்டாவது சருக்கத்தின் முற்பகுதியில் பிராணன், ஆன்மா இரண்டையும் பற்றிய தத்துவ விசாரணையும் காணப்படுகின்றன. இந்தத் தத்துவ விசாரணை உபநிடதங்களில் காணப்படும் முறையையே அனுசரித்ததாக இருக்கிறது. இதில் காணும் பல கருத்துக்கள் பின்னர் உபநிடதத்திலும் காணப்பெறுகின்றன. இரண்டாவது சருக்கத்தின் பிற்பகுதியே ஐதரேய உபநிடதமாகும். மூன்றாவது சருக்கம் ரிக்வேதத்தைப் பலவிதமாகப் பாராயணம் செய்வதின் உட்பொருள்களைக் கூறுகிறது. மற்ற இரண்டு சருக்கங்களும் சடங்குகளைப்பற்றிக் கூறும் சூத்திரங்கள்போல் இருக்கின்றன.

கௌஷீதகி ஆரணியகத்தில் கௌஷீதகி உபநிடதம் காணப்படுவதைத் தவிர இந்த ஆரணியகத்துக்கும் ஐதரேய ஆரணியகத்துக்கும் அதிக வேறுபாடு இல்லை.

கிருஷ்ண யஜுர் வேதக்திலுள்ள தைத்திரீய சாகையில் தைத்திரீய பிராமணமும் தைத்திரீய ஆரணியகமும் இருக்கின்றன. இந்த ஆரணியசுத்தின் இறுதிப் பாகமே தைத்திரீய உபநிடதமும் மகாநாராயண உபநிடதமும் ஆகும். பிருகதாரணியக உபநிடதம் சுக்கில யஜுர் வேதத்திலுள்ளது. பிருகதாரணியகம் என்ற சொல்லானது ஆரணியகமும் உபநிடதமும் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடுகிறது. ஆரணியகம்போலவே வேள்வி முறைகளைச் சுவானுபூதி நோக்கத்துடன் விரிவுரை செய்வதாயிருக்கின்றது.

பிராமணங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வீடுகளில் நடத்தும் சோமயாகம் போன்ற வேள்விகளைக் குறித்து விரிவுரை செய்கின்றன. உலகத்தைத் துறக்காமலும், வேள்விகள் செய்வதை விட்டு விடாமலும், காட்டுக்குச் சென்று பரம்பொருளைத் தியானிப்போர்க்காகச் செய்யப்பட்டவை ஆரணியகங்கள். ஆகவே அவை பிராமணங்கட்கும் உபநிடதங்கட்கும் இடையிலுள்ள நிலையைக் குறிப்பனவாகும். சீ. கு.

ஆரபூரக் கடல் (Arafura) நியூகினியின் மேற்குப் பகுதிக்கும் ஆஸ்திரேலியாவின் வடகரைக்கும் இடையிலுள்ள பசிபிக் சமுத்திரத்தின் ஒருபகுதியாகும்.

ஆரம்ப வாதம் என்பது உலகில் காணப்படும் பொருள்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றியுள்ள பல கொள்கைகளுள், நையாயி சுரும், வைசேடிகரும் மேற்கொள்ளும் கொள்கையாகும். அனாதி காலம் தொட்டு நித்தியமாகவுள்ள பரமாணுக்கள் ஈசுவரானுக்கிரகத்தால் ஒன்றோடொன்று சேர்ந்து அணுக்கள் ஆகிப் பின்னர் அவை சேர்ந்து பொருள்கள் உண்டாகின்றன என்று அவர்கள் பொருள்களின் உற்பத்திபற்றிக் கூறுகிறார்கள். காரணமின்றிக் காரியமில்லை என்பதையும், காரணமும் காரியமும் வேறுபட்டவை என்பதையும் தங்கள் கொள்கைக்கு ஆதாரத் தத்துவங்களாகக் கூறுகிறார்கள்.

ஆடை, குடம் என்ற காரியங்கள் முன்னர் இல்லாமலிருந்து பின்னர் முறையே நூல், களிமண் என்ற காரணங்களால் புதிதாக உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு பொருள்கள் புதிதாக உண்டாவதால் இந்தக் கொள்கை ஆரம்ப வாதம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. காரியமானது தன்னுடைய உற்பத்திக்குப் பின் காரணத்தில் இல்லாததால் 'அசத் காரியவாதம்' என்றும் அழைக்கப்படுகிறது.

காரணமும் காரியமும் வேறுபட்டவை என்ற சித்தாந்தம் கீழ்வரும் யுக்திகளால் நிலைநாட்டப்படுகிறது. (1) இதை ஏற்காவிடின் இது நூல், இது ஆடை என்ற வேறுபட்ட விவகாரத்துக்கு இடமில்லை.(2) நூல்கள் பல வகையாகவும், அவற்றால் ஆக்கப்பட்ட ஆடை ஒன்றாகவும் இருப்பதால் எண் வகையாலும் காரணமும் காரியமும் வேறுபட்டவை. (3) நூல்கள் நெய்யவும், ஆடை அணியவும் பயன்படுவதால், பயன்படுகையாலும் வேறுபட்டவை. (4) நூல் முன்னரும், ஆடை பின்னரும்