பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராக்கேரியா

419

ஆரிகுலேரியா

ஆஸ்திரேலியா, நியூகாலிடோனியா, நியூகினி, நார் போக்குத் தீவு முதலிய இடங்களில் உள்ளது. இதில் 15 இனங்களுண்டு. சிலி நாட்டு ஆராக்கா மாவட்டத்தில் முதன்முதல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. சிலி நாட்டுக்குரிய குரங்குச் சிக்கல் (Mcnkey Puzzle) என்னும் ஆராக்கேரியா இம்பிரிக் கேட்டாவின் விதையைத் தின்னலாம். பிரேசில் பைன் தென் பிரேசில் நாட்டில் ஏராளமாக இருக்கிறது.

ஆராக்கேரியா மரம்
உதவி : குப்புராம், பெங்களுர்.

குவீன்ஸ்லாந்திலுள்ளது பன்யா-பன்யா பைன். இதன் விதையும் உணவாகும். ஆராக்கேரிய எக்செல்ஸா மிக அழகானது. சிறு செடியைத் தொட்டிகளிலே வைத்து வீட்டில் வளர்ப்பதுண்டு. ஆராக்கேரியா இனங்களில் பலவற்றை அழகுக்காகத் தோட்டங்களில் வைக்கிறார்கள். இவை 150-200 அடி உயரம் வளரும். அடுக்கடுக்காகக் கிளைகளை வட்டவொழுங்கில் கிடைமட்டமாகச் சமமாக எல்லாத் திக்குகளிலும் விட்டுக்கொண்டு, கோபுரம் போலவும் தேர்போலவும் இம்மரங்கள் கம்பீரமாக உயர்ந்து நிற்பது காண்பதற்கு இனிதாக இருக்கும்.

ஆராக்கேரியா மரங்கள் எல்லாமே வேலைக்குப் பயன்படும். மரம் ரெசினுள்ளது. மஞ்சள் கலந்த வெண்ணிறம். ரேகைகள் நேராக அமைந்திருக்கும். எளிதாக வேலை செய்யத்தக்கது. வீட்டிற்குள் வைக்கக்கூடிய சாமான்கள், பெட்டி முதலியவை செய்யப்பயன்படும். காகிதம் செய்ய உதவும். ரெசினிலிருந்து டர்ப்பென்டீன் எடுக்கின்றனர். சிலவற்றின் விதைகள் உணவாகின்றன.

ஆராவமுதாச்சாரியார் (20ஆம் நூ. முற் பகுதி) இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருச்சுழியல் என்னும் ஊரினர். திருச்சுழியற் புராணம் பாடியவர்.

ஆராஸ் பிரான்சின் தலைநகரான பாரிசிற்கு 120 மைல் வடக்கே ஸ்கார்ப் நதிக்கரையில் உள்ள ஊர். இவ்வூர் எழில் மிக்க திரைச்சீலைகளைச் செய்வதில் பெயர் பெற்றது. இதிலிருந்து திரைச்சீலையைக் குறிக்க ஆங்கிலத்தில் ‘ஆராஸ்’ என்னும் பெயரே ஏற்பட்டுவிட்டது. சோளம் இங்குப் பெரிதும் சாகுபடியாகிறது. முதல் உலக யுத்தத்தில் இங்குப் பெரும்போர் நடந்தது. மக் : 33,345 (1946).

ஆரிகன் (Oregan): இப்போது கொலம்பியா என்று வழங்கும் ஆற்றின் பழைய பெயர் ஆரிகன். இந்த ஆறு பாயுமிடமாதலால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றாகிய இது இப்பெயர் பெறலாயிற்று. பரப்பு: 96,981 ச.மைல். மக்: 15.21.341 (1950). உயர்ந்த சிகரம் ஹுட் (11,253 அடி). இம்மாகாணம் பசிபிக் கடற்கரையிலுள்ளது. கொலம்பியா ஆற்றுப் பாசனத்தினால் இந்த இராச்சியம் பெரும் பயன் அடைகிறது. இதன் நீரைக் கட்டுப்படுத்தப் பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டமொன்று நிறுவப்பட்டுள்ளது. கிரேட்டர் ஏரி மிகவும் அழகான இடம். உலகத்தின் மரவேலைக்கு உகந்த மரம் மிகுதியாகக் கிடைக்குமிடங்களில் இது ஒன்று. இங்குக் கிடைக்கும் மீன்களுள் முக்கியமானது சாமன். மொத்தப் பரப்பில் சுமார் 40% மேய்ச்சல் நிலம். ஆகையால் கால்நடை வளர்ப்பு முக்கியமாக உள்ளது. இங்கு விளையும் ஆப்பிள் உலகப் புகழ்பெற்றது. வேறு பலவகைப் பழங்களும் பயிராகின்றன. சாராயம் இறக்குவதற்குப் பயன்படும் ஹாப் பயிர் மேற்குப் பகுதியில் 22,000 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. மெல்லிய மயிர்களுள்ள விலங்குகளை வளர்க்கும் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. நாட்டில் கிடைக்கும் ரசத்தில் பெரும்பகுதி இந்த இராச்சியத்திலிருந்து பெறப்படுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவை மற்ற முக்கியமான கனியங்கள்.

ஆரிகா (Auriga) என்னும் நட்சத்திர மண்டலம் வடக்கே பெர்னியர் நட்சத்திரத்திற்கும் ஜெமினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ளது. ஆரிகா என்னும் லத்தீன் சொல்லின் பொருள் சாரதி என்பதாகும். அவன் வலக்கையில் ஒரு கடிவாளத்தையும், இடத்தோளில் ஆட்டையும் வைத்திருப்பதாகக் கூறுவர். இதிலுள்ள பிரம இருதயம் (Carella) ஓர் இரட்டை நட்சத்திரம். 53 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. இரட்டைகள் ஒன்றையொன்று 104 நாட்களில் சுற்றுகின்றன. இவை சூரியனைப் போல் 105 மடங்கும் 80 மடங்கும் ஒளியுடையன. பெரியது சூரியனைப்போல் 11 மடங்கும்; சிறியது 5 மடங்கும் பெரியது. இவை இரண்டும் மஞ்சள் நிறமானவை. இவற்றில் சூரியனில் காணப்படும் உலோகங்கள் காணப்படுகின்றன.

பீட்டா ஆரிகா ஓர் இரட்டை நட்சத்திரம். இது சூரியனை விடப் பெரியது. சூரியனைப்போல் 50 மடங்கு ஒளியுடையது. ஒன்றையொன்று நான்கு நாட்களில் சுற்றுகின்றது. சுற்றும்போது ஒன்றுடன் ஒன்று சமாகமம் ஆகிறது. நூறு ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. ஆர். எல். கா.

ஆரிகுலேரியா ஹலொதூரியா என்னும் கடல் வெள்ளரி வகுப்பு முள்தோலியின் இளம் பருவம்