பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரிய சமாஜம்

420

ஆரியர்கள்

(லார்வா). மிகச் சிறியது. கடல் நீரில் மிதப்பது. பார்க்க: முள்தோலி, ஹாலொதூரியா.

ஆரிய சமாஜம் என்பதன் பொருள் சான்றோர் கழகம் என்பதாகும். ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி என்பவர். அவருடைய இயற்பெயர் மூல்சங்கர், அவர் 1825ஆம் ஆண்டு குஜராத் நாட்டில் டங்காரா என்ற ஊரில் சைவப் பிராமண குலத்தில் பிறந்தார். சிறுவராக இருந்தபோது தந்தை முதலியவர்கள் கோயிலில் போய்ச் சிவராத்திரி விரதம் இருந்தபோது இவரும் அவர்களுடன் இருந்தார். எல்லோரும் உறங்கிவிட்டார்கள். இவர் மட்டும் உறங்கவில்லை. சிவலிங்கத்தின்மீது எலிகள் ஓடுவதைக் கண்டதும் இவர் கடவுளா என்று ஐயுற்றுத் தந்தையை எழுப்பிக் கேட்டார். தந்தை கூறிய விடை அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. அதுமுதல் ஐயம் அதிகரிக்கவே, சில ஆண்டுகளுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறித் துறவிகளை அணுகினார். இறுதியில் விரஜானந்தர் என்னும் பிறவிக்குருட்டுத் துறவி இவருக்கு நான்மறைப் பொருளைக் காட்டி, அதுவே உலகத்தை உய்விக்க வல்லது என்று உபதேசித்தார். உலக மக்கள் எல்லோரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் தயானந்தர் ஆரிய சமாஜத்தை 1875-ல் நிறுவினார்.

கொள்கைகள்: வேதங்கள் இறைவனுடைய அருள்வாக்கு. வேதங்களுக்கு மாறுபட்டவை நம்பத் தக்கனவல்ல. சகல மக்களையும் ஒரே சமுதாயமாக இணைக்கவல்ல சாதனம் வேத உபதேசமே. வேத சம்மதமின்மையால் உருவ வழிபாடு தவறு. கடவுள் ஒருவரே. அவர் குண, கரும சுபாவங்கட்கு ஏற்பப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கடவுள், சீவன். இயற்கை ஆகிய மூன்றும் நித்தியமானவை. இவற்றின் கூட்டுறவால் ஆக்கல், அளித்தல், அழித்தல் நடைபெறுகின்றன. வேத வாழ்க்கையே விமோசனம் அளிப்பதால் பிற மதத்தினரைச் சுத்தி செய்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். மக்கள் அனைவரும் ஒரே இனமாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும். இவைகளே ஆரிய சமாஜத்தின் முக்கியமான மதக் கொள்கைகள்.

ஆரிய சமாஜம் சாதி மத வேற்றுமைகளை ஒப்புக் கொள்வதில்லை. இளம்பெண் மணத்தையும் பலதார மணத்தையும் கண்டிக்கிறது. இளங் கைம்பெண் மணத்தையும் ஏகதார மணத்தையும் ஆதரிக்கிறது. பழங்காலக் குருகுலக் கல்வி முறையைப் பரவும்படி செய்ய விரும்புகிறது. பல இடங்களில் அத்தகைய குருகுலங்களை நடத்தி வருகிறது. சமஸ்கிருத மயமான இந்தியே இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. இந்தி மொழிக்கு நாகரி எழுத்துக்களை முதன் முதலில் பயன்படுத்தியவர் தயானந்தரேயாவர். ஜீ. க.

ஆரியங்காவு திருவிதாங்கூரில் செங்கோட்டைத் தாலுகாவில் திருநெல்வேலியிலிருந்து ஐம்பதாவது மைலில், திருநெல்வேலி கொல்லம் இருப்புப் பாதையில் மலைக் கணவாயில் உள்ளது. கணவாய் 18 மைல் நீளமும் பார்க்க அழகிய காட்சிகளும் உடையது. காப்பி, தேயிலைத் தோட்டங்களும் பரசுராமர் கட்டியதாகச் சொல்லப்படும் சாஸ்தா கோயிலும் உள்ளன.

ஆரியப் படை தந்த நெடுஞ்செழியன் வடநாட்டரசரை வென்றதால் இப்பெயர் பெற்றான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனவும் பெறுவான். கோவலனைக் கொல்வித்தது தவறு என்று கண்டு அரியணைமீதே உயிர்விட்டதால், 'அரசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்' என்றும் கூறப்படுவான். இவனுடைய கோப்பெருந்தேவியும் உடனே மாய்ந்தனர் (சிலப்.). சேரன் செங்குட்டுவன் காலத்தவன் (புறம்.183).

ஆரியப்பப்புலவர் இவர் திருக்குடந்தையிற் பிறந்த வேளாளர். செவ்வைச் சூடுவார் தமிழில் பாடிய பாகவத புராணத்தை இவர் பாடினார் என்று தவறாக வழங்கி வருகின்றார்கள்.

ஆரியபட்டர் இந்தியக் கணக்கியல் பரம்பரையைத் தோற்றுவித்த பெரியார் எனலாம். இவர் சு. 476-ல் தற்காலத்தில் பாட்னா என்னும் நகருக்கருகிலிருந்த குசுமபுரம் என்னும் ஊரிற் பிறந்தார்; கேரளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுவோரும் உண்டு. இவர் எழுதிய நூல்களுள் முக்கியமானது ஆரியபட்டீயம் எனப்படுவது. இது கீதிகம், கணிதம், காலக்கிரியை, கோளம் என்ற நான்கு பிரிவுகள் கொண்டது. இவற்றுள் கீதிகம் என்பது வானவியல் அட்டவணைகளின் தொகுப்பு. சைன் (Sine) அளவுகளைக் கண்டுபிடிக்கும் முறையையும், சைன் அட்டவணையையும் அவர் இதில் தந்திருக்கிறார். கணிதம் என்பது எண் கணித நூல். காலக்கிரியை. கோளம் ஆகியவை வானவியலுடன் தொடர்புள்ள நூல்கள்.

இவரது வானவியற் புலமை இவருக்குப் புகழைத் தந்தது. இவர் இத்துறையில் திருத்தமான கருத்துக்கள் பலவற்றை வழக்கத்திற்குக் கொண்டுவர முயன்றார். இவரது நூல் 33 ஈரடிச் செய்யுட்களால் ஆனது. இவர் எண் வரிசைகளிலிருந்து தொடங்கி, அடுக்குக் கணிப்பு, மூலக் கணிப்பு, பரப்பு, பருமன் ஆகியவற்றை விவரிக்கிறார். வானவியல் பிரிவில் இவர் வட்டம், நிழற் கணக்குக்கள் போன்ற பலவற்றைக் கூறுகிறார். விருத் திகள், சர்வசமங்கள், முதற்படி அநிச்சிதச் சமகரணங் கள் போன்ற இயற்கணிதக் கணக்குக்களும் (Algebra) இவற்றில் உள்ளன. வியக்கத்தக்க திருத்தத் துடன் π ன் மதிப்பு 3 (= 3.1416) என இவர் குறிக்கிறார். ஆனால் இதை இவர் எங்கும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இவரது சிறு நூல் பல கணக்கியல் முடிபுகளைக் கொண்டு பிற்காலத்தில் தோன்றிய அறிஞருக்கு வழிகாட்டியாக அமைந்தது.

இதே பெயருள்ள இன்னொரு கணக்கியல் அறிஞரும் பழங்காலத்தில் வாழ்ந்தார் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. பார்க்க: கணிதவியல் வரலாறு-இந்தியக் கணிதவியல் வரலாறு.

ஆரியர்கள் : ஜெர்மானிக், கெல்டிக், கிரேக்க, ஆர்மீனிய, ஸ்லவானிய, பாரசீகம் முதலிய பல மொழிகளும் ஒரே தாய் மொழியினின்று கிளைத்திருக்க வேண்டுமென்பது அறிஞர்களின் துணிபு. இத் தாய் மொழியைப் பேசியவர்கள் பண்டைய ஆரியர்கள். அவர்களுடைய ஆதி இடம் எது என்பது நிச்சயமாகத் தீர்மானிக்கப்படவில்லை. இது மத்திய ஆசியா, ரஷ்யாவின் தெற்குப் பாகம், டான்யூப் ஆற்றுப் பிரதேசம் என்று பலவாறாக யூகிக்கப்படுகிறது. ஆனால் மத்திய ஆசியாவே என்பது பல ஆசிரியர்களின் துணிபு. மேற்கு ஆசியாவில் காபடோசியா நாட்டில் உள்ள ஒரு கல் வெட்டிலிருந்து (கி. மு. 1380) இவர்களின் வாழ்க்கை நிலை சிறிது தெரியவருகிறது. மித்திரன், இந்திரன், நாசத்தியன் என்ற இந்தியத் தெய்வங்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் காணப்படுகின்றன. வேதகாலத்திலுள்ள இந்தியாவிலிருந்த ஆரியர்களுக்கும் ஈரானிய ஆரியர்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்களின் முதல் நூல் ரிக்வேதம். இவ்வேதத்தில் சொல்லப்படும் நிலப்பரப்பு, சிந்து நதி,