பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரேசீ

423

ஆரேசீ

விழுதுகள் பற்றுவேர்கள் என்றும் உறிஞ்சுவேர்கள் என்றும் இரண்டுவகையாக இருக்கும். பற்றுவேர்கள் புவிநாட்டமில்லாதவை. ஒளியினின்றும் மறையும்குணம்

ஆரம் என்னும் சேம்பு வகை

1. செடி, 2. பூக்கொத்து, a. பெண் பூக்கள். b.ஆண் பூக்கள், c. மலட்டுப் பூக்கள், 3. கனிகள்.

மிகுந்துள்ளவை. இக் குணங்களால் இவை, தமக்கு ஆதாரமாக இருக்கும் மரத்தின் மேலே, சுவர்,பாறை முதலியவற்றின் மேலே, கிடைமட்டமாக வளர்ந்து, அவற்றிலுள்ள இடுக்குக்களில் புகுந்து ஆதாரத்தை இறுகப் பற்றிக்கொள்ளும். உறிஞ்சு வேர்கள் புவிநாட்டம் மிகுந்துள்ளவை; ஒளியினால் பாதிக்கப்படுவதில்லை. இவை நேராகக் கீழிறங்கி, நிலத்துவ் புகுந்து, கிளைகள் விட்டு உணவை உறிஞ்சும். இவ்வேர்கள் அயனமண்டல மழைக்காடுகளிலே 100 அடிக்கு மேலும் நீளமாகத் தொங்குவதுண்டு. தொற்றுச்செடிகளில் சிலவற்றின் வேர் நிலத்துள் இறங்காமல் சன்னல் பின்னலாக வளர்ந்து, செடியில் விழுந்து தங்கியுள்ள மரப்பட்டை, இலை முதலியவற்றின்மட்கில் (Humus) இருக்கும் உணவையும் பனி நீரையும் மழை நீரையும் உறிஞ்சும்.சிலவகைகளில் இந்த விழுதுகளின் மேற்புறணியில் உள்ளீடில்லாத அணுக்கள் வெலாமென் எனப்படும் வேர்ப்போர்வையாக வளர்ந்து நீரை உறிஞ்ச உதவும். ஆர்க்கிடுகளிலும் இவ்வித அமைப்புக்கள் உண்டு. (பார்க்க: ஆர்க்கிடு). இலைகள் பலமாதிரியாக இருக்கும். தனி முழு இலைசளும், பிரிவிலைகளும், கூட்டிலை களும் உண்டு. சில செடிகளில் ஒரே இலையுண்டாகும் (கருணை). அதன் காம்பு தண்டுபோலத் தோன்றும். பல செடிகளில் இலைக்காம்பு பருத்து, அதனுள்ளே யிருக்கும் அணுவிடை வெளிகளில் படிந்திருக்கும் கோழையின் உதவியால் மழை நீரைச் சேகரித்து வைத்து நீர்நிலைபோலச் செடிக்கு உதவும்.

பூக்கள்: சாதாரணமாக உருளை வடிவான சதைப்பற்றுள்ள ஒரு பூத்தண்டு ஆண்டுக்கு ஒன்று உண்டாகும். அதில் பல பூக்கள் திருகல் அமைப்பில் தோன்றும். இந்த மஞ்சரியைப் பெரிய இலைபோன்ற ஒரு பூவடிச் சிற்றிலை சூழச் சுற்றிக்கொண்டு காக்கும். இந்த இலைக்கு மடல் என்று பெயர். இதனால் இந்தப் பூக்கொத்து மடல் மஞ்சரி எனப்படும். பூக்களில் இரு பாலினவும் உண்டு; ஒரு பாலினவும் உண்டு. ஒருபாற் பூக்கள் பெரும்பாலும் ஓரகத்தின. அரிசீமா சாதியில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. இதழ் உள்ள பூ வகைகளுண்டு ; இதழில்லாப் பூ வகைகளுமுண்டு. கேசரம் இந்தக் குடும்பத்துக்கு இருக்க வேண்டியது ஆறு. சாதாரணமாகக் குறைவாகவே இருக்கும். ஒரே கேசரம்கூட இருக்கும். அப்படியென்றால் ஒரு கேசரமே ஒரு பூவாக இருக்கும். கேசரங்கள் போலியாகி மயிர்போன் றிருப்பதுண்டு. சூலகத்தில் பெரும்பாலும் ஒரு சூலிலையே இருக்கும். கனி சதைக்கனி. பலவற்றில் விதையின் வெளியுறையே சதைப்பற்றுள்ளதாக இருக்கும்.

பெண்பூக்கள் அல்லது பூக்களிலுள்ள பெண் உறுப்புக்கள் முதலில் முதிரும். பல சாதிகளில் பூ ஒருவகை நாற்றமுள்ளது.புலாலை விரும்பும் ஈக்கள் இந்த மஞ்சரிகளுக்கு வரும்.

இவற்றுள் மகரந்தச்சேர்க்கை நிகழ்வதை விளக்கச் சேம்புபோன்ற செடிகள் நல்ல உதாரணமாம். பூக் கொத்தைச் சூழ்ந்திருக்கும் மடல் அடியில் கிண்ணம் போல முழுவதும் சுற்றிலு மூடியும் இடையில் சிறுத்து அடிப்பாகத்தை ஓர் அறைபோலச் செய்தும், மேலே விரிந்து அகன்று பசுவின் காதுபோலக் குவிந்து இருக்கும். இந்த மடல் கண்ணைக் கவரக்கூடிய வண்ணமுடையதாகவும் இருக்கும். பூத்தண்டின் அடியில் மடலின் அடிப்பாகத்திலுள்ள அறையில் கீழே பெண்பூக்களும், மேலே ஆண் பூக்களும், இவற்றிற் கிடையே மலட்டுப் பூக்களாகிய மயிரும் இருக்கும். மயிர் கீழ்நோக்கியிருக்கும். பூத்தண்டின் மேற்பாகத்திலும் மலட்டுப்பூக்கள் மயிர்போல இருக்கும். இந்த மேற்பாகம் சிலவற்றில் அழகான நிறமுடையதாகவும் இருக்கும். இதிலிருந்து புலால் நாற்றம் அடிக்கும். ஈக்கள் நாற்றத்தை நாடி வந்து அறைக்குள் புகும். குளிர்நாடுகளில் பூக்கொத்தின் அறை வெளியிலுள்ள வாயுவைவிடச் சற்று வெப்பம் மிகுந்திருக்கும். இந்தக் கதகதப்பை விரும்பியும் ஈக்கள் அறைக்குள் செல்லும். பெண்பூக்கள் முதலில் முதிரும். ஆதலால் கீழறைக்குள் போகிற வழியில் முதிராத ஆண்பூக்களே இருக்கும். ஆண் பூ முதிர்ந்த இந்த இனச்செடி வேறொன்றிலிருந்து ந வருமாயின், அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தப் பொடியுடன் உள்ளே செல்லும். மயிர்கள் கீழ்நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையில்லாமல் கீழே சென்று, அங்குள்ள பெண்பூக்களின் மேல் படும்போது அயல் மகரந்தச் சேர்க்கை நிகழும். அது நிகழும்வரை மயிர்கள் ஈயை வெளிவராமல் தடுக்கும். அது நிகழ்ந்த பிறகு மயிரெல்லாம் வாடிவிடும். அதற்குள் மேலிருக்கும் ஆண்பூக்கள் முதிர்ந்து, அவற்றிலுள்ள மகரந்தம், வெளியே வரும் ஈயின் உடலில் ஒட்டிக்கொள்ளும். இதே மாதிரி மகரந்தச்சேர்க்கை அரிஸ்டொலோக்கியா (பார்க்க: ஆடுதீண்டாப்பாளை) குடும்பத்திலும் நிகழ்கிறது.

கனி முதிர்ந்தால் சதைப்பற்றும் நல்ல நிறமும் உள்ளதாக இருக்கும். முதிரும் காலத்திற்குள் மடல் வாடிக் காய்ந்துவிடலாம். கண்ணுக்கு அழகாகத் தெரியும் பழங்களைப் பறவைகள் கொத்தித் தின்று விதை பரவ உதவுகின்றன. தொற்றுச்செடி விதைகள் மரங்களில் விழுந்து, அங்குச் செடிகள் உண்டாகும். இவற்றில் விதைகள் உண்டானாலும், செடிகள் பெரும்பாலும் தரைக் கீழுள்ள மட்டத் தண்டு, கிழங்கு, வேர் முதலியவற்றாலே பல்கும். சில செடிகளில் பூ உண்டாவதே அருமை.

ஆரேசீ அயன மண்டலக் காடுகளில் வளரும் தாவரங்களில் முதன்மையான குடும்பங்களில் ஒன்று.