பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்

434

ஆல்ப்ஸ்

சயனைடுடன் கூடித் தொகுப்பு ரசாயனத்திற்கு முக்கியமான சயன்ஹைடிரின்களாகின்றன.

சயன் ஹைடிரின்

அசிட்டால்டிஹைடு போன்ற சில சாமானிய ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கூடி ‘ஆல்டிஹைடு அம்மோனியா’ என்றழைக்கப்படும் பொருள்களாகின்றன. இவை நிலையானவை. ஆனால் பெரும்பான்மையான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் சம்பந்தப்பட்டவரையில் இம் மாறுபாட்டைத் தொடர்ந்து சிக்கலான வேறு சில வேறுபாடுகளும் நிகழ்கின்றன.

இவை ஹைடிராக்சிலமீனுடன் வினைப்பட்டு, ஆக்சைம்களையும், பினைல் ஹைடிரசீனுடன் வினைப்பட்டுப் பினைல் ஹைடிரசோன்களையும், செமிகார்பசைடுகளுடன் வினைப்பட்டு செமிகார்பசோன்களையும் அளிக்கும்.

இம் மூன்று வகைப் பொருள்களும் படிக வடிவுளளவை. ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தூய்மையாக்கவும், அவற்றின் அமைப்பை அறியவும் இவை பயனாகின்றன.

ஆல்டால் தொகுப்பு (Aldol Condensation). இரண்டு ஆல்டிஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறுகளினிடையே கார ஊக்கிகளின் உதவியால் ஏற்படும் ஒரு மாறுதலுக்கு ஆல்டால் மாறுதல் என்று பெயர். இம்மாறுபாட்டில் ஒரு மூலக் கூற்றிலுள்ள கார்பனைல் தொகுதிக்கு அடுத்த கரியணுவுடன் கூடியுள்ள ஹைடிரஜன் அணு மற்ற மூலக்கூற்றின் கார்பனைல் தொகுதியிலுள்ள ஆக்சிஜன் அணுவுடன் கூடுகிறது. எஞ்சிய மற்றப் பாகம் இரட்டை இணைப்பின் மறு கோடியிலுள்ள கரியணுவுடன் கூடுகிறது. இப்படி ஆல்டிஹைடுகளினின்று தோன்றும் கூட்டுக்கள் பண்புகளில் ஆல்கஹால்களையும் ஆல்டிஹைடுகளையும் ஒத்திருப்பதால் 'ஆல்டால்கள்' என்றழைக்கப்படுகின்றன.

இப்படி ஏற்படும் பண்டங்கள் பெரும்பாலும் நிலையற்றவை. எனவே அவை மேலே காட்டப்பட்டிருப்பதுபோல் தண்ணீரை இழந்து அபூரிதப் பொருள்களாக மாறுகின்றன. தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் சக்தி வாய்ந்த கந்தகாமிலம் போன்ற பொருள்கள் இம் மாறுதலுக்கு ஊக்கிகளாக இயங்கும்.

ஆல்டிஹைடுகளுக்கும் கீட்டோன்களுக்கும் உள்ள வேறுபாடுகள்

1. ஆல்டிஹைடுகள் எளிதில் கூட்டுறுப்பாகுந் தன்மையுடையன (பார்க்க: பார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு). கீட்டோன்களுக்கு இத்திறன் இல்லை. 2. ஆல்டிஹைடுகள் காரங்களுடன் கலந்திருக்கும் போதும், பீனால்களுடன் சேர்ந்தும் கெட்டியான பிசின்களாக மாறுகின்றன. கீட்டோன்கள் இவ்வித மாறுபாட்டில் ஈடுபடுவதில்லை. 3. ஆல்டிஹைடுகள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுகின்றன. ஆக்சிகரணித்தலால் ஏற்படும் பொருளில் ஆல்டிஹைடைப் போல் சம எண்ணிக்கையுள்ள கரி அணுக்கள் இருக்கும்.

இப்பண்பின் காரணத்தால் ஆல்டிஹைடுகள் குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. ஆல்டிஹைடுகள் அம்மோனியாவுடன் கலந்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைவை வெள்ளியாகக் குறைக்கின்றன. இம் முறையால் கண்ணாடியில் பளபளப்பான வெள்ளிப் பூச்சை ஏற்றலாம். ஆல்டிஹைடுகள் நீல நிறமான பெலிங்க் கரைவை (Fehling's Solution) குறைத்துச் செந்நிறமான செம்பு ஆக்சைடு படிவைத் தரும்.

கீட்டோன்கள் எளிதில் ஆக்சிகரணிக்கப்படுவதில்லை. மிகுந்த வீரியமான ஆக்சிகரணிகளால் தங்களைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்ட அமிலங்களின் கலவையாக இவை மாற்றப்படுகின்றன.

4. கந்தக டையாக்சைடால் நிறமிழந்த புக்சீன் (Fucsine) என்ற சாயக் கரைவுக்கு ஷிப்ஸ் வினைப்பொருள் எனப் பெயர். இத்துடன் ஆல்டிஹைடுகளைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றும். கீட்டோன்களைச் சேர்த்தால் மறுபடியும் சிவப்பு நிறம் தோன்றாது.

முக்கியமான ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. ஏ. பி. ம.

ஆல்தீயா பலநிறமான அழகிய பூக்களுள்ள செடி. தோட்டங்களில் வளர்ப்பது. பூ வெண்டைப்பூப் போல இருக்கும். ஷேரான்ரோஜா, ஹாலிஹாக் என்றும் பெயர் உண்டு. இது ஆல்தீயா ரோசியா (Althaea rosea) எனப்படும். ஆல்தீயா அபிஷினாலிஸ் (Marsh Mallow) என்பது அழகாக இருப்பதோடு இலையும் வேரும் மருந்து செய்ய உதவும். இது பஞ்சாப், காச்மீர் முதலிய பிரதேசங்களில் வளர்கின்றது. ஆல்தீயா வெண்டைக் குடும்பமாகிய மால்வேசீ (Malvaceae) யைச் சேர்ந்தது.

ஆல்ப்ஸ்
உதவி : கவிட்ஸர்லாந்து தூதுவர் நிலையம், புதுடெல்லி.

ஆல்ப்ஸ் நடு ஐரோப்பாவிலுள்ள பெரிய மலைத்தொடர். பனி மூடிய அதன் சிகரங்கள், ஐரோப்பாவில்