பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலா டாக்

444

ஆவர்த்த விதி

மிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்றக் காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப்

ஆலா

பிடித்துத் தின்னும். ஆற்றுக் குருவியையும் ஆலா என்பதுண்டு. பார்க்க : ஆற்றுக்குருவி. மா. கி.

ஆலா டாக் (Ala Dagh) தென் துருக்கியிலுள்ள ஒரு மலைத்தொடர். உச்ச உயரம் 11,000 அடி. கிழக்குத் துருக்கியிலும் இப்பெயருள்ள மலையுண்டு ; உச்ச உயரம் 11.500 அடி.

ஆலிபீன்கள் (Olefines) : பார்க்க: ஹைடிரோக்கார்பன்கள்.

ஆலியார்: சோழ நாட்டின் பகுதியான ஆலி நாட்டின் தலைநகராகிய ஆலியில் இருந்த கடைச்சங்கப் புலவர். ஆலி இப்பொழுது திருவாலி என்று வழங்கும். சில பிரதிகளில் ஆவியார் என்றும் காணப்படுகிறது (புறம் 298).

ஆலை மலைகள் சோவியத் யூனியனில் கிர்கிஸ் குடியரசிலுள்ள ஒரு மலைத்தொடர். டயோன்ஷான் தொடரின் ஒரு பகுதி. உயர்ந்த சிகரங்கள் 16,000-18,000 அடி.

ஆவணி அவிட்டம் இந்தியப் பண்டைக்காலக் கல்வி முறையில் ஒரு முக்கியமான திட்டம். இது இந்நாளில் குறுகிய அளவில் ஒரு நினைவு அடையாளமாக மட்டுமே நடந்துவருகிறது.

ஆவணி வந்ததும் கார்காலம் வந்துவிடுவதால் அது முதல் நான்கு மாதங்கள் வெளியே போக முடியாது. பண்டைக் காலத்திலிருந்தவர்கள் தாம் கற்ற கல்வியை மறந்து போகாமல் மனத்தில் நிலைத்து நிற்கும்படி செய்வதற்கு மனப்பாடம் செய்யும் காலமாக இந்தக் காலத்தைப் பயன்படுத்தினர். இந்தக் காலம் ஆவணி மாதம் பூர்ணிமையில் திருவோண நட்சத்திரத்திலோ, அவிட்ட நட்சத்திரத்திலோ துவங்கும். அதனாலேயே இந்த ஓதல் துவக்கத்தைச் சிராவணம் என்றும், ஆவணி அவிட்டம் என்றும் கூறுவர். துவக்கம் என்னும் பொருளுடைய உபாகர்மம் என்னும் சொல்லாலும் இதைக் குறிப்பதுண்டு.

இந்த விழாவைத் துவக்கும்போது, வேதங்கள் முதலியவற்றிற்கு ஆதாரமான முனிவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் செய்வார்கள். கல்வியின் தேவதைகளான மேதை, சிரத்தை முதலியவற்றைத் துதித்து ஓமம் செய்வார்கள். பூணூலைப் புதுப்பித்துக் கொள்வார்கள். இந்த விழாவிற்கு ரிக் வேதிகளுக்குத் திருவோண நட்சத்திரம் முக்கியம் ; யஜூர் வேதிகளுக்குப் பௌர்ணிமை திதி முக்கியம் ; சாமவேதிகள் புரட்டாசி அஸ்த நட்சத்திரத்தில் இதைச் செய்வார் கள். கார் காலம் முடிவடைந்தபின், தை, மாசியில் உத்சர்ஜனம் (அதாவது முடிவுச் சடங்கு) செய்து ஓதலை முடித்துக்கொள்வார்கள். இது பண்டைய முறை.

ஆனால், இக்காலத்தில், ஆண்டு முழுவதும் ஓதல் நடைபெறுவதாக வைத்து, முடிவுச் சடங்கை ஆவணி அவிட்டத்தன்று முதலில் செய்துவிட்டுத் துவக்கச் சடங்கைச் செய்துவருகிறார்கள். வே. ரா.

ஆவர்கள் டான், வால்கா ஆற்றுப்புறங்களிலிருந்து ஹூணர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 6ஆம் நூற்றாண்டில் புகுந்த ஒரு கூட்டத்தினர். டான்யூப் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வந்து தங்கிய இக் கூட்டத்தவர் ரோமானியப் பேரரசனாயிருந்த ஜஸ்டீனியனுக்கு உதவியாயிருந்தனர். லம்பார்டியர்களுக்கு உதவிசெய்து பன்னோனியாப் பிரதேசத்தைப் பெற்றுக்கொண்டனர். பால்கன் தீபகற்பத்திற் புகுந்து சூறையாடினர். இவர்களுடைய ஆதிக்கம் கருங்கடல் வரை எட்டிற்று. ஆயினும் 8ஆம் நூற்றாண்டில் பால்கன் பிரதேச மக்கள் தங்களுடைய கூட்டுமுயற்சியால் இவர்களுடைய ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்தனர். அந்நூற்றாண்டின் இறுதியில் ஷார்லிமேனால் ஒடுக்கப் பட்டபின் இவர்கள் வரலாறு முடிவடைகின்றது. இவர்கள் ஜெர்மானியர்களோடும், பல்கேரியர்களோடும் கலந்து விட்டனர்.

ஆவர்த்த விதி (Perindic Law) : ஒன்றற்கொன்று தொடர்பற்ற பல விஷயங்களையும், பல்வேறு வகையான சீரற்ற விளைவுகளையும் கண்டு மனித உள்ளம் திருப்தியடைவதில்லை. பன்மையில் ஒருமை காணமுயல்வதே அறிவியலின் அடிப்படையான நோக்கம். ரசாயனத்தில் கையாளப்பட்ட பகுப்பு முறையின் நேரடியான விளைவாகவே டால்டனின் அணுக்கொள்கை தோன்றியது. இக் கொள்கையின்படி, பொருளனைத்தும் சில தனிமங்களால் ஆனவை. இத்தனிமங்கள் எல்லாம் அணுக்கள் என்னும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய துகள்களால் ஆனவை. ஒரு தனிமத்தின் இயல்புகள் அதன் அணுக்களின் தன்மையைப் பொறுத்தவை. தனிமங்களின் பொதுவான தோற்றுவாயைக் காட்டி, அவற்றை ஒன்றாக இணைக்கும் தொடர்புகள் உண்டு என்ற கருத்தைப் பிரவுட் (Prout) என்னும் ஆங்கில மருத்துவர் 1815ஆம் ஆண்டில் வெளியிட்டார். மற்ற அணுக்களின் நிறைகள் ஹைடிரஜனின் அணுநிறையின் முழு மடங்குகளாக இருப்பது எல்லாப் பொருள்களுக்கும் ஹைடிரஜனே மூலமாக இருந்திருக்கவேண்டும் எனக் காட்டுகிறது என்று இவர் வாதாடினார். ஆனால் இவரது கருதுகோளை மற்ற அறிஞர்கள் ஏற்கவில்லை. ஆனால் இக் கருத்து ஆராய்ச்சியாளரது மனப்பான்மையை மறைமுகமாகப் பாதித்துத் தனிமங்களின் பாகுபாட்டைத் தோற்றுவித்தது.

திரயவிதி (Rule of Triads) : இதற்கான முதற் பணியைச் செய்தவர் டேபரைனர் (Dobereiner.1780- 1849) என்னும் விஞ்ஞானி. எல்லாப் பொருள்களையும் ஒத்த தனிமங்கள் மூன்று கொண்ட தொகுதிகளாக அமைக்கலாமெனவும், இம்மூன்றின் அணுநிறைகளுக்கு இடையே கணக்கியல் தொடர்புள்ளதென்றும், இத் தொகுதிகளிலுள்ள பொருள் அணுநிறைகளுக்கும் ரசாயன இயல்பிற்கும் நெருங்கிய தொடர்புள்ள தென்றும் இவர் காட்டினார். இதை அவர் திரயவிதி யென அழைத்தார். ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள