பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவர்த்த விதி

445

ஆவர்த்த விதி

தனிமங்களை அவற்றின் அணுநிறைகள் அதிகரிக்குமாறு வரிசைப்படுத்தினால், முதலாவது, மூன்றாவது தனிமங்களின், அணுநிறைகளின் சராசரி இரண்டாவதற்குத் தோராயமாகச் சமமாகுமெனக் காட்டினார். டாபரைனர் இதற்காகக் காட்டிய மேற்கோள்களில் ஒன்று பின்வருமாறு :

கால்சியம் - 40
ஸ்ட்ரான்ஷியம் 88
பேரியம் - 137
முதலாவது, மூன்றாவது தனிமங்களின் சராசரி அணுநிறை 88.5. இரண்டாவதன் அணுநிறை 88.

பெட்டன்காபர் தொடர்பு(Pettenkoffer's Rela-tion). மற்றப் பொருள்களுக்கு ஏற்பத் திரயவிதியைப் பலர் விவரிக்க முயன்றது பயனில்லாது போயிற்று. ஆனால் பெட்டன் காபரின் பணியைமட்டும் இங்குக் குறிப்பிடவேண்டும். 1850-ல் ஒரு கட்டுரையில் இவர் ஒத்த பொருள்களின் சமவலு நிறைகளின் வேற்றுமைகள் ஒரே எண்ணின் முழுமடங்காக இருப்பதைக் காட்டினார். திரயத் தொகுதிகளிலுள்ள பொருள்களில் மட்டுமின்றி வேறு பெரிய தொகுதிகளிலும் இது உண்மையாகும் என்பதை இவர் அறிவுறுத்தினார். கீழ்வரும் அட்டவணை அதைக் காட்டும்:

சமவலு நிறைகளின் வேற்றுமைகள்

தனிமம் சமவலுநிறை வேற்றுமை தோராய மடங்கு
லிதியம் 6.51 -
சோடியம் 22.97 16·46 2× 8
பொட்டாசியம் 39.11 16·16 2x 8
மக்னீசியம் 12.07 -
கால்சியம் 20 00 7.03 1x 8
ஸ்ட்ரான்ஷியம் 43 92 23.92 3X 8
பேரியம் 68.54 24-62 3x 8
ஆக்சிஜன் 8 -
கந்தகம் 16 8 1x 8
செலினியம் 39.62 23-62 3X 8
டேலூரியம் 64.14 24-52 3x 8
நைட்ரஜன் 14 - -
பாஸ்வரம் 32 18 1x 18
ஆர்சனிக் 75 43 -
அன்டிமனி 129 54 3x 18

கடைசித் தொகுதியிலுள்ள நான்கு பொருள்களின் சமவலுநிறைகளும் அணுநிறைகளும் சமமெனக் கொள்ளப்பட்டுள்ளன.

1853-ல் கிளாட்ஸ்டனும் (Gladstone), 1857-ல் ஒட்லிங்கும் (Odling) செய்த ஆராய்ச்சிகள் இதையே விரிவுபடுத்தி, ஒத்த பொருள்களின் அணுநிறைகளிலுள்ள ஒழுங்கை அறிய உதவின. அப்போது தெரிந்திருந்த பொருள்களில் ஒரேவகையானவற்றை இவர்கள் பிரித்து ஓர் அட்டவணையில் அமைத்தனர். இவர்களது அமைப்புத் தற்காலப் பாகுபாட்டையே மிகவும் ஒத்திருந்தது.

த ஷான்கோர்த்வா சுருள் (De Chancourtois Helix) : 1862-ல் த ஷான்கோர்த்வா என்பவர் சுருள் வடிவான வளைவொன்றில் தனிமங்களை அவற்றின் அணுநிறைப்படி அமைத்து, வளைவை நேர்குத்தான பகுதிகளாகப் பிரித்து, ஒத்த பண்புகளுள்ள தனிமங்கள் நேர்குத்தான ஒரே வரிசையில் அமைவதைக் கண்டார். மேலும் இச்சுருளில் ஒவ்வோர் ஆவர்த்தத்திலும் பதினாறு தனிமங்கள் இருந்தன. இவ்வாறு முதன்முதலாகத் தனிமங்களின் அணுநிறைகளுக்கும் அவற்றின் இயல்புகளுக்கும் ஆவர்த்தத் தொடர்பு ஒன்று இருப்பதை இவர் தெளிவாக்கினார். ஆனால் 1916ஆம் ஆண்டுவரை இது ஒருவர் கவனத்திற்கும் வரவில்லை.

நியூலாண்ட்ஸ் அஷ்டம விதி (Newland's Law of Octaves): 1865-ல் நியூலாண்ட்ஸ்' என்னும் ரசாயன அறிஞர் கானிசாரோவின் (Conizzaro) அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, அணுநிறை மிகும்படிப் பொருள்களை வரிசைப்படுத்தினால் ஒத்த பண்புகளுள்ள பொருள்கள் ஆவர்த்த முறையில் அமைவதைக் கண்டார். இதனால் ஒவ்வோர் எட்டாவது பொருளும் ஒரேமாதிரியான இயல்புகளைக் கொண்டிருக்கும் இசை நாதங்களின் வழக்குப்படி. இவர் இதற்கு அஷ்டமவிதியெனப் பெயரிட்டார். இவ்வாறு இவர் ஒரே இயல்புள்ள பொருள்கள் ஒரு தொகுதியில் உள்ளவாறு அவற்றை ஏழு தொகுதிகளாகப் பகுத்தார். ஆகவே ஆவர்த்த விதியின் உண்மையை முதன் முதல் கூறியவர் இவரேயாவர்.

ஆவர்த்தப் பாகுபாடு : லோதர் மெயர், மெண்டலீபு விருவரது பணியால் ஆவர்த்தப் பாகுபாடு செம்மையுற்றது. 1864-ல் லோதர் மெயர் சம பொருள்களை ஒரே தொகுதியில் அமைத்து, அவற்றின் அணுநிறைகளின் வேறுபாடுகள் சமமாகவோ, ஏதோவொரு எண்ணின் மடங்குகளாகவோ இருத்தலைக் கண்டார். 1868-ல் அவர் பொருள்களைப் பதினாறு பத்திகளில் அமைத்து அட்டவணையொன்றைத் தயாரித்தார். 1869-ல் மெண்டலீபு என்னும் ரஷ்ய அறிஞரும் இவ்வாறே அணுநிறைக்கேற்பத் தனிமங்களை வரிசைப்படுத்திப் பத்தொன்பது பத்திகளில் அவற்றை அமைத்து, ஆவர்த்த விதியொன்றை வகுத்தார். ஒரு தனிப்பொருளின் இயல்புகள் அதன் அணுநிறையின் ஆவர்த்தச் சார்பாகும் என்பதே இவ்விதி.

மெண்டலீபின் முடிவுகளால் ஊக்கமடைந்த லோதர் மெயர் 1870-ல் முன்னர்த் தாம் வெளியிட்டதை மாற்றி, ஏழு நேர்குத்தான தொகுதிகளும், இரு துணைத் தொகுதிகளும் கொண்ட ஓர் அட்டவணையைத் தயாரித்தார். அதே ஆண்டில் மெண்டலீபும் தமது புகழ் பெற்ற கட்டுரையில் இருவகை நீளமுள்ள ஆவர்த்த அட்டவணைகளை வெளியிட்டார். இவை இன்றுவரை மாறுதலின்றி வழங்குகின்றன. இவ்வட்டவணைகளில் தனிமங்கள் அணுநிறை வரிசையிலும், சம அணு வலுவான ஒரே வரிசையில் உள்ளவாறும் அமைக்கப்படுகின்றன. அணுநிறைகளை அடிப்படையாகக் கொண்டு மெண்டலீபு பல பொருள்களின் பெளதிக ரசாயன இயல்புகளை ஆராய்ந்தார். மேலும், பின்னர்க் கண்டு பிடிக்கப்படவிருந்த தனிமங்களுக்குங்கூட இவர் காலியிடங்கள் விட்டுவைத்தார். அப்போது அறியப்படாத இப்பொருள்களின் இயல்புகளை இவர் முன்கூட்டிக் கூறியது வியக்கத்தக்கதாகும். ஆகையால் தனிமங்களின் ஆவர்த்தப் பாகுபாடு அவருடைய பெயரால் வழங்குவது முற்றிலும் பொருந்தும். அடுத்த இரண்டு பக்கங்களில் காணப்படும் அட்டவணைகளில் முதலிரண்டும் மெண்டலீபு அமைத்த அட்டவணையின் தற்கால வடிவங்கள்.

ஆவர்த்த அட்டவணைகள்: நெடு ஆவர்த்த அமைப்பில் அணுநிறை வரிசையில் தனிமங்கள் அமைக்கப்படும். இதில், முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு தனிமத்தையும் ஆராய்ந்துகொண்டே சென்றால் முதலாவதையொத்த இயல்புகள் கொண்ட தனிமமொன்று மீண்டும் தோன்றும். இது ஒரு தொடர் முடிவடைந்து புதுத்தொடர் ஒன்று துவங்குவதைக் காட்டுகிறது. நேர்குத்தான ஒவ்வொரு தொகுதியிலும் ஒரே வலுவெண்ணும், ரசாயன பௌதிக இயல்புகளில் ஒற்றுமையும் காணப்படும். ரூதர்போர்டு, போர் ஆகிய இருவரின் தந்பால அணுவமைப்புக் கொள்கைக்கு இது முற்றிலும் பொருத்தமாக உள்ளது.