பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவியர்

453

ஆழ்கடல் விலங்குகள்

டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே.

ஆவியர் : ஆவியர்குடி தமிழ்நாட்டுக் குடிகளுள் ஒன்று. (புறம்.147). கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் ஆவியர் மரபினன் (சிறுபாண்.86-7)

ஆவியாகு வெப்பம் (Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறையுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப்படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதிராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும்.

ஆவிரை : பார்க்க: ஆவாரை.

ஆவுடை அம்மாள் (19ஆம் நூ.பிற்பகுதி) செங்கோட்டையினர். வேதாந்தப்பள்ளு என்னும் நூலையியற்றியவர்.

ஆவுடையார்கோவில்: தஞ்சை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து எட்டாவது கல்லில் உள்ள பேர்பெற்ற சிவத்தலம். மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம். கல்வெட்டுக்களிலும் மாணிக்கவாசகர் நூல்களிலும் திருப்பெருந்துறை என்று கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் மிக அழகானது. அதனுள் மேளம் வாசிப்பதில்லை. கோயிலினுள்ளே சுவாமி, அம்மன், நந்தி சிலைகளாவது கொடி மரமாவது இல்லை. மாணிக்கவாசகர் விக்கிரகந்தான் விழாக் காலங்களில் ஊர்வலமாக வரும். கோயில் மேற்பார்வை திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது.

ஆவூர்கிழார் கடைச்சங்கப் புலவர். பல ஆவூர்கள் உள்ளன. இவர்க்கு ஆவூர் அழகியார் எனவும் பெயர் காணப்படுகிறது (புறம்.322).

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்: இவர் ஆவூர் கிழார் மகனார் கண்ணத்தனார் எனவும் பெறுவர்.கடைச்சங்கப் புலவர் (அகம் 202).

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவாயிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159).

ஆவூர்க் கௌதமன் சாதேவன் : பார்க்க : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்.

ஆவூர் மூலங்கிழார் கடைச்சங்கப் புலவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுளர் (புறம். 38, 40, 166, 177--8, 196, 261, 301; அகம். 24, 156).

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224)

ஆவொசெட் நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மையாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந்திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனிதனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25, விதை, இலை முதலியன 35 சதவீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலியவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா.

ஆழ்கடல் விலங்குகள்: கடல் விலங்குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரிகடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர்கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங்களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக்கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில்

ஆழ்கடல் மீன்கள்
1. மாக்ரொயூரஸ், 2. கோனோஸ்டோமா. 3. அபிஸ்தொ
பிராக்ட்டஸ். 4. மிக்ட்டேபம், 5. லினொப்ரைனி.

சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதியில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்கு முதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை