பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளிச்செடி

459

ஆளுபர்

பார்கள். ஆளி வளர்த்தல் சீன தேசத்தில் மிகப் பழைய காலந்தொட்டு நடந்துவந்திருக்கிறது. இத்தாலியில் கி.மு.100 வாக்கில் இதைச் செய்யத் தொடங்கினர். கே. வீ.

ஆளிச்செடி (Flax) நாருக்காகவும் வித்திற்காகவும் சாகுபடி செய்யப்படும் ஒரு செடி. இதன் விஞ்ஞானப் பெயர் லைனம் யுசிட்டாட்டிசிமம் (Linum usitatissimum). கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் இது ஆதியில் வளர்ந்தது எனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் பழங்காலத்திலேயே நாருக்காக இதைப் பயிரிட்டார்கள். ஆனால் தற்காலத்தில் இது இங்கு வித்திற்காகப் பயிரிடப்படுகிறது. மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ஐதராபாத் ஆகிய இராச்சியங்களில் இது அதிகமாகப் பயிராகிறது. 1948–49-ல் இது சுமார் 39 இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராயிற்று. அவ்வாண்டில் இதன் உற்பத்தி சுமார் 3 இலட்சம் டன். இந்தியாவைத் தவிர ஆர்ஜென்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, ரஷ்யா ஆகிய இடங்களிலும் வித்தைத் தரும் ஆளிச்செடி பயிராகிறது.

நாருக்காகப் பயிரிடப் பெறும் ஆளிச்செடி மிதவெப்பப் பகுதிகளிலும், உப அயன மண்டலப் பகுதிகளிலும் பயிராகிறது. மற்ற நாடுகளைவிட ரஷ்யாவில் இது அதிகமாகப் பயிராகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும் இதைப் பயிராக்கத் தொடங்கினார்கள்.

ஆளிச்செடி சுமார் 12–40 அங்குலம் நீளமுள்ள நேரான தண்டுகளையும் பல கிளைகளையும் உடையது. இதன் ஆணிவேர் அதிக ஆழம் செல்வதில்லை. இது குறுகலான ஈட்டி போன்ற, மாறியமைந்த இலைகளையும், வெள்ளை அல்லது நீலநிறப்பூக்களையும் கொண்டது. நார் தரும் வகைளில் விதைகள் அதிமாகக் கிடைப்பதில்லை. விதைக்காகப் பயிரிடும் ஆளிச்செடி வகைகள் குட்டையானவை. ஆளிவிதை நல்ல பழுப்பு நிறமும் பளபளப்பும் உடையது.

சாகுபடி: ஆளிச்செடி களிமண் நிலத்தில் நன்கு வளர்கிறது. மணற்பாங்கான நிலம் இதற்கு ஏற்றதன்று. கோதுமைக்கும் கடலை வகைகளுக்கும் ஏற்ற நிலத்தில் இதைப் பயிராக்கலாம். இந்தியாவில் பருவமழை நிற்கு முன்னரே செப்டம்பர் மாதத்தில் நிலத்தைப் பண்படுத்திப் பருவ மழையின் முடிவில் இது விதைக்கப்படுகிறது. விதைகளை நிலத்தில் தூவி உழுது விடுகிறார்கள். முளைக்கும் நிலையில் இதற்கு நீர் தேவையாகிறது. ஆனால் பூப்பூக்கும் நிலையிலும், காய்கள் பழுக்கும் நிலையிலும் மழை பெய்தால் பயிருக்குக் கேடு விளையும். இச்சமயத்தில் வெயில் அதிகமாக இருந்தால் விளைச்சல் குறைவதோடு வித்திலுள்ள எண்ணெயின் அளவும் குறையும். விதை விதைத்த ஐந்து மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிறது. ஐரோப்பா, கானடா முதலிய சில மித வெப்பப் பகுதிகளில் இது இளவேனிற் காலத்தில் விதைக்கப்பட்டுச் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் அறுவடை செய்யப்படுகிறது.

பயிர் முற்றியவுடன் அறுவடைசெய்து, அதைத் தடி கொண்டு அடித்து வித்தைப் பிரித்தெடுக்கிறார்கள். செடியின் தண்டு அடுப்பெரிக்கப் பயன்படுகிறது. ஆளிவிதை பழங்காலத்தில் பல நாடுகளில் உணவாகப் பயனாயிற்று. இன்றும் சில நாட்டினர் இதை வறுத்து உண்கிறார்கள்.

நார் ஆளிவகைகள் வளமுள்ள நிலத்தில் பயிரிடப்படுகின்றன. கரிமப் பொருளை அதிகமாகக் கொண்ட நிலம் இதற்கு ஏற்றதன்று. இதைப் பயிரிடும் நிலத்தை மிக நன்றாகப் பண்படுத்த வேண்டும். பயிர் நன்றாக முற்றுவதற்கு முன்னர் அறுவடை செய்யப்படுகிறது.

ஆளி விதை எண்ணெய்: சுத்தப்படுத்தப்பட்ட ஆளிவிதைகளை நன்றாக அரைத்துப் பிழிந்தால் பொன்னிறமான எண்ணெய் கிடைக்கிறது. இது உணவாகப் பயனாகிறது. அரைத்த வித்துக்களை 160° வெப்ப நிலைக்குச் சூடேற்றிப் பிழிவதால் இன்னும் அதிகமான எண்ணெயைப் பெறலாம். இதைச் சேமித்து வைத்தால் காலப்போக்கில் இதிலுள்ள நீரும் பிசின் பொருளும் பிரிகின்றன. இவ்வாறு பெறப்படும் எண்ணெய் கலங்கலாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். பல ஆண்டுகள் இவ்வாறு வைக்கப்பட்ட எண்ணெய் உயர்ந்த ரகமானது எனக் கருதப்படுகிறது. எண்ணெயை இம்முறையில் தூய்மையாக்குவதற்குப் பதிலாக 1–2% அடர்வுள்ள கந்தகாமிலத்தைக் கலந்தும் அசுத்தங்களைப் பிரிக்கலாம். ஆளிவிதை எண்ணெய் ஒருவகையான கெட்ட மணமுள்ளது. இதை ஒரு பரப்பில் இலேசாகப் பூசிக் காற்றுப்பட வைத்திருந்தால், இது ஆக்சிஜனை ஏற்றுச் சிறிதளவு நெகிழ்வுள்ள ரப்பர்ப் பிசினையொத்த பொருளாகிறது. காரீய மஞ்சளைப் போன்றதொரு பொருளை இத்துடன் கலந்து கொதிக்க வைத்தால் இது பிசின் போன்ற பொருளாகிறது.

ஆளிவிதை எண்ணெய் வர்ணங்களும் மெருகெண்ணெய்களும் தயாரிக்க ஏராளமாகப் பயனாகிறது. தூய ஆளிவிதை எண்ணெயை ஓவியர்கள் பயன்படுத்துகிறார்கள். வர்ணங்களிலும் மெருகெண்ணெய்களிலும் பயன்படுத்த இதனுடன் காரீய மஞ்சள் போன்ற பொருளைச் சேர்த்துக் கொதிக்கவைக்கிறார்கள். அச்சு மைகளின் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. ஆளிவிதைப் பிண்ணாக்குக் கறவைப் பசுக்களுக்கு மிகச் சிறந்த உணவாகும். மற்றத் தீனிகளைவிட இது கால்நடைகளை நன்றாகக் கொழுக்க வைக்கும்.

ஆளிச்செடி நார்: உலரவைத்த ஆளிச்செடியிலிருந்து நார் எடுக்குமுன் அதை அழுக வைக்கவேண்டும். இதைச் செய்யப் பத்து நாட்களிலிருந்து பல வாரங்கள் வரை செல்லலாம். ரஷ்யாவில் இதை மழையிலும் பனியிலும் அழுக வைக்கிறார்கள். மற்ற நாடுகளில் நீரில் ஊறவைத்து அழுக வைக்கிறார்கள். தண்டின் மேற்பட்டையை எளிதாக உரிக்கவரும் பதத்தில் அதை எடுத்துக் கட்டுக்கட்டி உலரவைக்க வேண்டும். உலர்ந்த தண்டுகளை நசுக்கி நாரைப் பிரித்தெடுக்கிறார்கள்.

ஆளி நாரை நூற்றுப் பல துணி வகைகளாக நெய்யலாம். உயர்ந்த ரக ஆளி நார் நேர்த்தியான லினன் துணியாகத் தயாரிக்கப்படுகிறது. மட்டரக நார் நூலாகவும், கயிறாகவும், சமக்காளமாகவும் தயாரிக்கப்படுகின்றது.

ஆளுபர் (ஆளுவர்) 7 முதல் 11ஆம் நூற்றாண்டு வரை கன்னட நாட்டில் வனவாசிச் சீமையின் சில பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர்கள். இவர்களில் சிலருடைய பெயர்கள், இரண்டாம் புலிகேசி (609-642), விநயாதித்தன் (681-696) ஆகிய சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டுக்களிலும், இரட்ட மன்-