பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளுமை

461

ஆளுமை

மனிதனும் சூழ்நிலையும் இழைந்தமைந்த முழுநிலையே ஆளுமை என்பதாகும்.

நடத்தைக் கொள்கையினர் கருத்து: ஆளுமை என்பது அச்சம், சினம், பால் ஆகிய இயல்பூக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது நடத்தைக் கொள்கையினர் (Behavinurists) கருத்து. குழந்தை பிறந்தவுடன் அகனிடம் இம்மூன்று இயல்பூக்கங்களே இருக்கின்றன என்றும், அது வளர வளர, அது வாழும் குழ்நிலைக்குத்தக இந்த மூன்று இயல்பூக்கங்களும் பல வேறு வழிகளில் மாறுபட்டுச் சிக்கலாக அமைகின்றன என்றும் இவர்கள் கருதுகின்றனர். சான்றாக, அக்குழந்தையை விழாமல் தாங்கியிருக்கும் ஆதாரம் திடீரென இல்லாமற்போகும் நிலையும், பலத்த ஓசையும் பிறந்த அக்குழந்தையிடம் அச்சத்தை உண்டாக்குகின்றன. முதிர்ச்சிப் பருவத்தில் பாம்பு, புவி, இருட்டு முதலியவைகளினால் ஏற்படும் அச்சம் என்ற இயல்பூக்கம் சூழ்நிலைத் தூண்டுதல்களினால் மாறி ஆக்க நிலையால் உறுதியாகிறது. இங்ஙனமே மற்ற இயல்பூக்கங்களும் அவற்றைச் சார்ந்த மெய்ப்பாடுகளும் பல்வேறு இயல்புகளாக மாறுபடுகின்றன. அந்த மாறுபட்ட இயல்புகளே ஒருவனது ஆளுமையை முடிவுசெய்கின்றன.

உளப்பகுப்பியலார் கருத்து: உளப்பாகுபாடு மனிதனின் அளுமை நனவிலி மனத்தினின்று எழும் வலிமை வாய்ந்த இத்(Id)என்கிற உள்ளச் சக்தி சமூகச் சூழ்நிலையின் சட்டதிட்டங்களோடும் கட்டுப்பாட்டுக்களோடும் இழைவதினால் ஏற்படுவது என்று உளப்பகுப்பியலார் கருதுகிறார்கள். நனவிலி மனத்தின் சக்தி எத்தன்மை வாய்ந்தது என்பதில் அவர்களுக்குள்ளேயே வேறுபாடு இருக்கிறது. இச் சக்தி காம இயல்பு வாய்ந்தது. சமூகம் காம இயல்பூக்கத்தையே அதிகம் மதிக்கிறது. எனவே ஒருவன் தனது காமசக்தியைச் சமூகத்தில் எந்த வழியில் நிறைவேற்றுகிறான் என்பதில் அவன் ஆளுமை அமைகிறது என்பது பிராய்டின் (Freud) கருத்து. மனிதன் பிறந்தவுடன் ஆதரவற்ற நிலையில் தானாக எதுவும் செய்ய இயலாது. சூழ்நிலையிலிருப்போரைச் சார்ந்தே இருக்கிறான். இதன் காரணமாக மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்கிற எண்ணம் ஏற்பட, இத்தாழ்நிலையைப் போக்க, வாழ்க்கையில் ஓர் உயர்ந்த குறிக்கோள் கொண்டு. அதை அடைவதற்கான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுகிறான். அந்த வாழ்க்கை முறையை அடிப்படையாகக்கொண்டு எழுவதே அவனது ஆளுமை என்பது ஆட்லர் (Adler) என்பார் கருத்து. மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள்களில் வேறுபாடுகள் உள்ளன. அதனால் ஆளுமைகளிலும் வேற்றுமைகள் தோன்றுகின்றன. நனவிலி மனத்தின் ஒரு பகுதியாக மூதாதையரது உள்ளம் ஆளுமையை முடிவு செய்வதில் பங்குகொள்கிறது என்பது யுங் (Jung) என்பார் கருத்து. நனவிலி மனத்தின் அடிப்படைச் சக்தி ஆத்மார்த்தமானது. இது சமூகத்தில் நிறைவேறுவதற்கேற்றவாறு ஒருவனது ஆளுமை அமைகிறது என அவர் கருதினார்.

மக்டுகல் கருத்து: ஆளுமை மிகவும் சிக்கலானது என்றாலும், அது இயல்பூக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுகிறது என்று மக்டூகல் (Mc Dougall) கருதுகிறார். ஒருவனிடத்து முக்கியமாகப் பதினான்கு இயல்பூக்கங்கள் இருக்கின்றன ; இந்த இயல்பூக்கங்கள் வெவ்வேறு வழிகளில் தொகைப்பட்டுப் பல பற்றுக்களை (Sentiments) ஏற்படுத்துகின்றன. இந்தப் பற்றுக்களில் தன்மதிப்புப் பற்று (Self regarding sentiment) வெகு முக்கியமாகும். இதை அடிப்படையாகக் கொண்டு எழுவதே ஆளுமை என்பது அவரது கருத்தாகும்.

ஆளுமைக்கு அடிப்படையாக இருப்பவை ஒருவனுடைய இயல்புகள் என்பதை மேற்கூறிய பல்வேறு கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. இந்த இயல்புகள் உடலைச் சார்ந்திருக்கலாம் அல்லது உள்ளத்தைச் சார்ந்திருக்கலாம்; பிறப்பால் தோன்றலாம் அல்லது பண்பாட்டினால் தோன்றலாம்.

ஆளுமைச் சோதனைகள்: ஆளுமை பற்றி உள்ள பலவேறு கருத்துக்களுக்கு ஏற்றவாறு சோதனைகளும் (Tests) வேறுபடும். எனினும் பொதுவாக உளவியலார் கையாளும் ஆளுமைச் சோதனைகள் இங்கு விவரிக்கப்படுகின்றன.

நாம் மனிதனைப்பற்றி அறிய முயலும்போதும், அவனுடைய ஆளுமையைப் பற்றி ஆராயும்போதும் அவனைப் பல்வேறு வழிகளிலும் முறைகளிலும் குறிக்கோள்களோடும் நோக்குகிறோம். சான்றாக, ஆராய்ச்சி செய்ய விழைவோரிடம் பொறுமை, விடாமுயற்சி, அமைதி, ஆராய்ச்சியில் இன்பம் போன்ற இயல்புகளையும், ராணுவத்தில் சேர விரும்புவோர்களிடம் தைரியம், பிறரோடு இயல்பாகப் பழகும் தன்மை, தலைமை தாங்கி நடத்தும் தன்மை முதலியவைகளையும் எதிர்பார்க்கிறோம். இங்ஙனமே ஒவ்வொருவரும் பிறரைச் சந்திக்கும்போது இவர் எத்தன்மையினர், எந்தப் போக்கு உடையவர், என்ன இயல்புகள் உள்ளவர் என்று நோக்குவது இயற்கை. பெரும்பாலான ஆளுமைச் சோதனைகள் மேற்கூறியவைகளை அடிப்படையாகக் கொண்டனவேயாகும். ஆளுமைச் சோதனைகளில் முக்கியமானவை பேட்டி (Interview) முறை, தனியாள் வரலாற்று (Case- History) முறை, மதிப்பீட்டு (Raring) முறை, வினா அறிக்கை (Questionnaire) முறை, சொல்-தொடர்பு (Word-association) முறை, விட்சேப (Projective) முறை எனப் பலவகைப்படும். மனிதனது ஆளுமை மிகவும் சிக்கலானது. எனவே பொதுவாக இவைகளில் ஒன்றுக்குமேற்பட்ட முறைகளையோ அல்லது யாவற்றையுமோ பயன்படுத்துவது வழக்கம்.

பேட்டி முறை : ஆளுமைச் சோதனை முறைகளுள் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சோதனையைச் சிறந்த முறையில் கையாள்வதற்குக் கையாள்பவர் இத்துறையில் மிகுந்த அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். பேட்டி முறை என்பது ஒருவரை நேராகக் கண்டு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு அளவளாவியோ அல்லது குறித்த கேள்விகளைக் கேட்டோ அவருடைய ஆளுமையை அறிவதாகும். பேட்டி முறையைக்கொண்டு அனுபவம் வாய்ந்த உளவியலார் ஒருவரது ஆளுமையைப் பற்றிச் சிறந்த உண்மைகளை அறியலாம். இந்த முறையைப் பெரும்பாலும் பிற ஆளுமைச் சோதனைகளைக் கையாண்ட பின்னரோ, கையாள்வதற்கு முன்போ பயன்படுத்துவது பொதுவான வழக்கம். பேட்டி முறையின் முக்கியமான அமிசம் அதில் 'அளவிடுதல்' (Measurement ) இன்மையாகும். அதாவது பேட்டி முறையைக் கொண்டு ஒருவரது உண்மை பேசும் இயல்பு 40 சதவிகிதம், கோப இயல்பு 25 சதவிகிதம் எனக்கூற இயலாது.

தனியாள் வரலாற்று முறை என்பது ஒருவன் பிறழ்வான (Abno:mal) நடத்தையோ அல்லது தன்மைகளோ (Traits) உடையவனாயிருந்தால், அதன் காரணத்தையோ அல்லது காரணங்களையோ அறிய அவனைப் பற்றிய விஷயங்களைச் சேகரிப்பதாகும்.