பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகராதி

16

அகராதி

அகராதியை யொத்துப் பயன்படும் நூல்களை உரிச்சொற் பனுவல் என முற்காலத்தில் தமிழில் வழங்கினர். இப்பெயர், இச்சொல் இன்னொரு பொருட்கு உரிந்து: இச்சொல் பல பொருட்கு உரித்து என்று உணா்த்துதலால் தோன்றியது. தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ்செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது. வடமொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது. நிகண்டு என்பதற்குத் தொகுதி என்று பொருள். தெய்வப் பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி முதலியனவாகச் சொற்களைத் தொகுதி தொகுதியாகப் பிாித்துக் கூறுதலால் இப் பெயா் தோன்றியது. இப் பெயருள்ள ஒரு பகுதி வேதத்தின் அருவகை அங்கங்களுள் நிருத்தத்தில் அடங்கிய தென்பதும் இங்கே அறியத்தக்கது.

இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலெகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோா் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.

நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகராதி. இப்பெயா் முதன்முதலிற் காணப்படுவது கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயாிலேயாகும். இதன் ஆசிாியா் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவா் இட்ட பெயரே, இப்பொழுது டிக்ஷனாி (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குாிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.

அகராதிமுறை நமக்கு எளிதாகத் தோன்றுகிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துவந்திருக்கிற தமிழ்-இலக்கியங்களின் சரித்திரத்தில் இந்த அகராதிமுறை கி. பி. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறது. அப்பொழுதும் இம்முறை அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது. சொற்களின் முதலெழுத்து ஒன்றன் முறையையே ஆசிரியர்கள் நோக்கி வந்தனர். உதாரணமாக, அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமா் முதலிய சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே நோக்கி, அவற்றை ஒரு முறையில் அமைத்தனர்; இரண்டாவது முதலிய எழுத்துக்களைக் கருதினார்களில்லை. முதலெழுத்து முறையை அகராதி நிகண்டில் காணலாம். இதனால் அகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லைக் குறித்த ஓாிடத்தில் கண்டுபிடிப்பது எளிதிற் கூடுவதாயில்லை. இரண்டாம் எழுத்தையும் நோக்கிச் சொற்களை முறைப்படுத்திய ஒரு நூல், அதற்குச்சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர்த் தோன்றியது. இதன் பெயா் அகராதிமோனைக் ககராதி எதுகை என்பது. இம்முறையிலேயும் ஒரு சொல்லைக் குறிப்பிட்ட ஓரிடத்தில் காணுவதற்கு இயலாமலிருந்தது. முதன் முதலில் சொற்களின் எழுத்துக்கள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்.

இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல. முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது. இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவா்களாயிருந்தனா். ஆகவே, அருஞ்சொல், எளியசொல் என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யேவண்டியது அவசியமாயிற்று. முன்றாவது, நூல் வழக்கிலன்றி பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கிவந்த சொற்களும் அகராதியில் இடம்பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள். அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவா்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும். இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாயிருந்தாா்கள்.

கி.பி. 1679-ல் தமிழ்ப் போா்ச்சுகேசிய அகராதியொன்று ப்ரொஇன்ஸா என்ற பாதிாியாரால் இயற்றப்பட்டது. ஆனால், இவ்வகராதி இப்போது மறைந்துவிட்டது. இதனை அடுத்துத் தோன்றியது சதுரகராதியாகும். இதுவே தமிழில் முதன்முதற் பிறந்த அகராதி என்று சொல்லலாம். இதனை இயற்றியவா் தைாியநாதசுவாமி என்றும் வீரமாமுனிவா் என்றும் வழங்கிய பெஸ்கி பாதிாியா் (Father Beschi) ஆவா். இவா் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறிஸ்துமத போதனை செய்து வாழ்ந்தவா்.

சதுரகராதி என்றால் நான்கு வகைப்பட்ட அகராதிநூல் என்று பொருள். நான்கு வகையாவன : 1.பெயரகராதி 2.பொருளகராதி 3.தொகையகராதி 4.தொடையகராதி. பெயரகராதியில் ஒரு சொல்லுக்குாிய பலபொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பொருளகராதியில் ஒரு பொருளுக்குரிய பல பெயா்களும் காணப்படும். தொகையகராதியில் இருசுடா், முக்குணம், நாற்படை என்பன போல நூல்களில் தொகை தொகையாக வழங்கப்பட்டுள்ளனவற்றிற்கு விளக்கங் காணலாம். தொடையகராதியில் செய்யுட்கு வேண்டும் எதுகைச் சொற்கள் (Rhyming words) வாிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

அகராதிகள் தோன்றுவதற்குமுன் இருந்த நிகண்டுகள் மனப்பாட்ஞ் செய்வதற்கு என்று ஏற்பட்டன. முற்காலத்தில் அச்சுப்பொறி இல்லாததால் மனப்பாடமே வேண்டப்படுவதாயிற்று. சுமாா் கி.பி.10ஆம் நுாற்றண்டிலிருந்து நிகண்டுகளின் வாலாறு நமக்குத் தெளிவாயுள்ளது. தமிழில் முதன்முதல் தோன்றிய நிகண்டு திவாகரம் என்பதாகும். இவ்வகை நிகண்டுகளில் முக்கியமானவற்றிலுள்ள சொற்களை யொல்லாம் திரட்டிச் சதுரகராதி தந்துள்ளது.

இவ்வகராதி இயற்றப்பட்டது கி.பி.1732-ல். ஏடுகளில் இது பிரதிகள் செய்யப்பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் பரவியது. ஆங்கிலத்தில் டாக்டா் ஜான்சன் தமது அகராதியை 1755-ல் வெளியிட்டனா். இதற்குச் சுமாா் 25 ஆண்டுகட்கு முன்பாகவே சதுரகராதி தோன்றியதாகும். இந்நூலின் இராண்டாந் தொகுதியான (பொருளகராதி) 1819-ல் அச்சிடப்பட்டது. நூல் முழுவதும் 1824-ல் ரிச்சா்டு கிளாா்க் என்பவரது உத்தரவின்போில் தாண்டவராய முதலியாா், இராமச்சந்திரகவிராயர் என்ற இரண்டு வித்துவான்களாலும் பரி சோதித்தும் புதுக்கப்பெற்றும் வெளியிடப்பட்டது.