பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

467

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

மோயாற்றின் சரிவுகளில் உள்ள 1,250 அடி ஆழத்தைப் பயன்படுத்தி 36,000 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். செலவு முதலில் 3·64 கோடி ரூபாயும், ஐந்தாண்டுகளில் உயர்ந்து மொத்தம் 476 கோடி ரூபாயும் ஆகும்.

மலம்புழைத் திட்டம்
உதவி : மராமத்து இலாகா. சென்னை.

சம்பல் திட்டம் (மத்திய பாரத்): சம்பல் நதியில் நான்கு அணைகளைக் கட்டி, மத்திய பாரத், ராஜஸ்தான் ஆகிய இரு இராச்சியங்களும் பயனுறுமாறு செய்யப்படும். இதனால் சுமார் 11 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதோடு, சுமார் ஓர் இலட்சம் கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். 1948-ல் தொடங்கப் பெற்ற இத்திட்டம் 1955-ல் முடிவுறும்.

மகாத்மா காந்தி நீர் மின்சார நிலையம் (மைசூர்): சராவதி நதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, 12,000 கிலோவாட் சக்தியைப் பெறும் முதல் அமைப்பு 1948-ல் முடிவடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொன்றும் 12,000 கிலோவாட் சக்தி தரும் மூன்று அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன. 18,000 கிலோவாட் சக்தி தரும் நான்காவது அமைப்பும் முடிவடைய இருக்கிறது. மொத்தச் செலவு 8·25 கோடி ரூபாய்.

மகாநதித் திட்டம் (ஒரிஸ்ஸா) : இது ஹீராகுட், திக்கரபாரா,நராஜ் ஆகிய மூன்று அணைகளைக் கொண்டது. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கால்வாய்களும் மின்னாக்க அமைப்புக்களும் உண்டு. இத்திட்டத்தின் முதற்படியாக ஹீராகுட் அணை கட்டப்பட்டு வருகிறது. இது பிரதம கால்வாயின் குறுக்கே மூன்று மைல் நீளம் இருக்கும். நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 59·8 இலட்சம் ஏக்கர் - அடி. இதனால் 9 இலட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மின்சாரத்தினால் நீரை இறைத்து, இன்னும் 4 இலட்சம் ஏக்கர் பெறுமாறு செய்யப்படும். இரு மின்னாக்க நிலையங்கள் நிறுவப்பட்டுச் சுமார் 3 இலட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையை அமைப்பதால் கழிமுகப் பிரதேசத்தில் வெள்ளக் கட்டுப்பாடு செய்வதும் எளிதாகும். மகாநதியின் போக்குவரத்து வசதிகளும் அதிகமாகும். ஹீராகுட் அணைத் திட்டத்திற்கான செலவு 48 கோடி ரூபாய்.

பாக்ரா-நங்கல் திட்டம் (பஞ்சாப்) : இத்திட்டத்தின் முக்கிய அமிசம் சட்லெஜ் ஆற்றின் குறுக்கே 680 அடி உயரமுள்ள அணையைக் கட்டி, 57·25 இலட்சம் ஏக்கர்- அடி நீரைத் தேக்குதல். இந்த அணைக்கு எட்டு மைல் கீழே 90 அடி உயரமுள்ள நங்கல் அணை கட்டப்படும். இது மூன்று மின்னாக்க நிலையங்களுக்குத் தேவையான நீரை அளிக்கும். 4 இலட்சம் கிலோவாட் சக்தியை அளிக்கும். இது பஞ்சாப், பெப்சு, இமாசலப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தானம் ஆகிய இராச்சியங்களில் அணைகளிலிருந்து வெட்டப்படும் புதிய கால்வாய்கள் 36 இலட்சம் ஏக்கருக்குப் பாசன வசதி அளிக்கும். இதனால் உணவு உற்பத்தி 11'3 இலட்சம் டன் பெருகுவதோடு 8 இலட்சம் பொதி பருத்தியும் உற்பத்தியாகும். 132·9 கோடி ரூபாய் செலவாகும். 1957-58-ல் முடிவடையும்.

தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்- மேற்கு வங்காளம்) : இத்திட்டத்தில் தாமோதர் நதியின் குறுக்கேயும், அதன் உபநதிகளின் குறுக்கேயும் எட்டு அணைகளும், ஒரு பேரணையும் கட்டப்பெறும். இதனால் 7.60,000 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைப்பதோடு, 2,40,000 கிலோவாட் மின்சாரமும் உற்பத்தியாகும். வெள்ளத்திற்குப் பேர்போன தாமோதர் நதியின் நீரைக் கட்டுப்படுத்தி, வெள்ளத்தால் விளையும் கேட்டினைக் குறைக்கவும் இது உதவும். 55 கோடி ரூபாய் செலவாகும். இதை நிறைவேற்ற அமெரிக்காவிலுள்ள டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரம் என்ற ஸ்தாபனத்தைப்போல் ஒரு ஸ்தாபனம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் தொடங்கப்பெறாத திட்டங்கள்

கோசித் திட்டம் (நேபாளம்): நேபாளத்தில் பராக்ஷேத்திரத்தினருகில் கோசி நதியில் 785 அடி உயரமுள்ள அணை கட்டப்பெறும். இது நேபாளத்தில் 5·2 இலட்சம் ஏக்கருக்கும், பீகாரில் 33.25 இலட்சம் ஏக்கருக்கும் பாசன வசதி அளிப்பதோடு 18 இலட்சம் கிலோவாட் மின்சாரத்தையும் தோற்றுவிக்கும். ஏழு படிகளில் நிறைவேறவிருக்கும் இத் திட்டத்திற்கு 177 கோடி ரூபாய் செலவாகும்.

கண்டகிப் பள்ளத்தாக்குத் திட்டம் (பீகார்) : இத்திட்டத்தில் திரிவேணி மலைத்தொடர்ச்சியினருகே கண்டகி நதியில் ஓர் அணை கட்டிப் பீகாரில் 25 இலட்சம் ஏக்கரும், உத்தரப் பிரதேசத்தில் 7·5 ஏக்கரும்,நேபாளத்தில் ஓர் இலட்சம் ஏக்கரும் பாசன வசதி பெறுமாறு செய்யப்படும். 25 கோடி ரூபாய் செலவாகும்.

புரோச்சு நீர்ப்பாசனத் திட்டம்(பம்பாய்):புரோச்சு நகருக்கு 48 மைல் வடகிழக்கே நருமதை யாற்றில் 160 அடி உயரமுள்ளதோர் அணைகட்டி, 18 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கப்பெறும். 10 இலட்சம் ரூபாய் செலவு.

கிருஷ்ணா-பெண்ணையாற்றுத் திட்டம் (ஆந்திரா): ஆந்திரா இராச்சியத்தில் முக்கியத் திட்டம் இதுவே. கர்நூல் மாவட்டத்தில் சித்தேசுவரத்தின் அருகே கிருஷ்ணா நதியில் ஓர் அணையும், சோமேசுவரத்தின் அருகே பெண்ணையாற்றில் ஓர் அணையும் அமைக்கப்படும். இவ்விரு ஆறுகளும் ஒரு கால்வாயினால் இணைக்கப்படும். இதனால் கர்நூல், கடப்பை ஜில்லாக்களில் 32 இலட்சம் ஏக்கர் பாசனம் பெறும். ஏராளமான மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். பாசனத்திற்கான அமைப்புக்களை நிறுவ மட்டும் 120 கோடி ரூபாய் செல்வாகும்.

இராமபாதசாகர் திட்டம் (ஆந்திரா) : இதுவும் ஒரு பெருந்திட்டம். ஆற்றடியிலிருந்து 190 அடி