பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பொறியியல்

469

ஆற்றுப் பொறியியல்

யுமா என்பதையும், அவ்வாறு நிறைவேற்றினால் விளையத்தக்க பயன்கள் என்ன என்பதையும் முடிவு செய்ய இயலும். வடிகால் அமைப்பு, நீர்ப்பாசனம், சேமிப்பு, வெள்ளக் கட்டுப்பாடு முதலிய திட்டங்களுக்கு ஆற்று வடிநிலத்தின் மழையின் அளவையும், அது கடத்தும் படிவுகளின் அளவையும் தன்மையையும் அறிதல் அவசியம். இத்தகைய ஆராய்ச்சிகளையும் அளவுகளையும் செய்தபின்னரே வேலை தொடங்கலாம்.

படிவையும் தேய்வையும் கட்டுப்படுத்தல்: ஆற்றின் இயக்கத்தினால் அதன் படுகையும் கரைகளும் அரிபடுகின்றன. இவ்வாறு அரிபடும் பொருள்கள் நீரோட்டத்தால் கடத்திச் செல்லப்படுகின்றன. நுண்ணிய துகள்கள் வண்டலாக நீருடன் கலந்து செல்லும். பெரிய துகள்கள் ஆற்றின் அடியில் நீரினால் உருட்டிச் செல்லப்படுகின்றன. நீரோட்டத்தின் வேகத்தில் நேரும் மாறுதல்களால் இத்துகள்கள் சில இடங்களில் படியும். இந்திய ஆறுகளில் நீர்ப்பாசன அமைப்புக்களான தேக்கங்களிலும் கால்வாய்களிலும் இத்தகைய பொருள்கள் படிவதால் நேரும் தொல்லை அதிகம். ஆகையால் இப்பொருள்கள் படியாமற் பாதுகாப்பது அவசியமாகிறது.

வண்டல் படிவதோடு இதற்கு எதிரான விளைவும் சில பகுதிகளில் நிகழ்கிறது. இது தேய்வு (Scouring) எனப்படும். இதனால் ஆற்றடியில் குழிகளும் பள்ளங்களும் தோன்றி நீரோட்டத்தின் தன்மை மாறிவிடும். நீர்ப்பாசன அமைப்புக்களின் அருகிலும் இவ்விளைவினால் தொல்லைகள் நேரும். ஆகையால் இது நேராது பாதுகாப்பதும் அவசியம்.

ஓரிடத்தில் வண்டல் படிவதைத் தடுக்க அவ்விடத்தில் தேய்வு நேருமாறு செய்யலாம். சுரண்டும் கருவிகளையும் கிளறிகளையும் படகுகளில் கொண்டுசென்று, ஆற்றடியிலுள்ள வண்டலைக் கிளறினால் அதை நீரோட்டம் அடித்துச்சென்றுவிடும். வண்டல் படியும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாகும் படியும், குறையும்படியும் கலிங்குகளை மாறி மாறி மூடியும் திறந்தும் அடித்தரை யில் படிந்துள்ள வண்டலை நீரோட்டம் அடித்துச் செல்லுமாறு செய்யலாம். நீர்ப்பாசனக் கால்வாய்களில் படியும் வண்டலை அகற்ற அதன் ஒரு கரையில் வாய்க் காலை வெட்டி, அதன் வழியே நீர் விரைவாக வெளியேறுமாறு அமைத்தால், நீரோட்டத்தின் வேகத்தால் படிந்துள்ள வண்டல் அடித்துச் செல்லப்படும்.

வண்டலை நீக்குவதைத் தவிரச் சில சமயங்களில் வண்டலைப் படியச் செய்வதும் அவசியமாகலாம். இவ் வாறு செய்வதால் நீர் தெளிவாகும். நீரோட்டம் ஒரு பெரிய ஏரி அல்லது குளத்திற்குள் வந்து விழுமாறு அமைத்துவிட்டால், அதை அடைந்ததும் நீரின் வேகம் குறைகிறது. இதனால் நீரிலுள்ள வண்டல் அதில் படிந்துவிடும். அதன் மறுமுனையிலிருந்து நீர் வெளியேறு மாறு அமைத்தால் அது தெளிவாக இருக்கும். சரிவு அதிகமான நிலங்களில் விரைவாகப் படியும் வண்டலை அகற்ற அடித்தரையில் குழிகளைத் தோண்டி, அதில் வண்டல் படியுமாறு செய்வார்கள். இக்குழிகளில் படியும் வண்டலை அடிக்கடி அகற்றி, அவை நிறைந்து தூர்ந்து விடாமற் பார்த்துக்கொள்வார்கள். வண்டல் படிய வேண்டிய இடங்களில் தூம்புகளை (Weirs) அமைத்து, நீரைத் தடைசெய்து, அங்கு வண்டல் படியு மாறு செய்யலாம். அமெரிக்காவிலுள்ள பாசனக் கால்வாய்களில் நீரின் வண்டலை அகற்ற, ஆங்காங்கு இத்தகைய 'வண்டற் பொறிகள்' (Silt traps) அமைக் கப்படுகின்றன. கட்டுக்கரைகளின் இடையேயுள்ள கால்வாய்கள் போன்ற நீரோட்டங்களின் கரைகளைப் பின்னால் தள்ளி அமைப்பதால் நீரிலுள்ள வண்டல் கரைகளில் படியும்.

ஓரிடத்தில் ஆற்றடி நீரோட்டத்தினால் தேய்வடை யாமல் தடுக்க, அதன் அடியில் மரக்கட்டைகளையும் சிறு சுவர்களையும் போன்ற தடைகளை அமைக்க வேண்டும். கல், செங்கல், கான்கிரீட்டு முதலிய பொருள்களால் ஆற்றடியை வேய்ந்து, அதன் தேய்வைத் தடுப்பதும் உண்டு. பிரதம கால்வாயிலிருந்து அதன் கிளைகளுக்குத் தண்ணீர் பாயும்போது கிளைகளின் மேற் புறத்தில் வண்டல் படிந்து தொல்லை கொடுப்பதைத் தடுக்க, அவ்விடத்தில் ஒரு தடையை அமைத்துக் கால் வாயின் பரப்பிலிருந்து மட்டும் கிளையில் நீர் பாயுமாறு அமைக்கலாம். இத்தடையின் உயரத்தைக் கால் வாயின் நீர்மட்டத்திற்கேற்றவாறு சரிப்படுத்தலாம். இம்முறை இந்தியாவின் பாசன அமைப்புக்களில் பயனாகிறது.

ஆற்றின் கரை அரிபடாமற் பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகும். கரைகளை உறுதியான பொருள்களால் வேய்ந்தோ, சமதூரங்களில் நீரோட்டத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் கிளை மேடுகளை (Spurs) அமைத்தோ இதைச் செய்யலாம். புல் பூண்டுகளைக் கரைகளில் நட்டு வளர்த்தும் கரை தேயாது பாதுகாக்கலாம். சிறுமரக் கட்டைகளை இத்தகைய மேடுகளாக அமைத்துப் பஞ்சாபிலுள்ள ஆறுகளில் கரைகளைப் பாதுகாத்து

ஆற்றின் கரை
அரிபடாமற் பாதுகாக்கும் முறை

வந்தார்கள். நீண்ட கிளைகளைக்கொண்டும், கோரைப் புல்லினால் ஆன பாய்களை அமைத்தும், ஆற்றின் மேற் புறத்தில் பல தடிகளை வரிசைகளாக ஊன்றியும் கரை களைப் பாதுகாக்கலாம். கம்புகளை அடுக்கிக் கோரைப் பாய்களை அவற்றின்மேல் விரித்துக் கட்டி, இவற்றின் நடுவே உள்ள இடைவெளியில் வண்டல் படியுமாறு செய்து அவற்றைப் பாதுகாப்பதுமுண்டு.

நீரோட்டத்தைக் கட்டுப்படுத்தல்: ஆற்றின் போக்கைக் கட்டுப் படுத்தப் பலவகையான முறை களைக் கையாளலாம். இவற்றுள் அதில் வெட்டப்படும் குறுக்கு வழிகள் முக்கியமானவை. இத்தகைய குறுக்கு வழியை அமைத்து நீரோட்டத்தின் பழைய பாதையை அடைத்துவிட்டால் அதன் அடித்தரையில் மாறு தல்கள் நிகழும். குறுக்கு வழிக்கு மேலுள்ள இடத்தில் ஆற்றடியில் தேய்வு நேரும். அதன் கீழே வண்டல் படியும். இதனால் நீரோட்டத்தின் சரிவு மாறும். இம்மாறுதல்களால் நீரோட்டத்தின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அடித்தரை உறுதி யற்றதாயின் புதுவழியை அமைக்கக் குறுகலான பாதையொன்றை அமைத்துவிட்டாலே போது மானது. ஆற்றடியில் நிகழும் தேய்வினால் அதன் பாதை தானாக அகன்று பெரிதாகும். இத்தகைய கிளை வழிகளை அமைக்கும்போது முன்னர்க் கூறிய கிளைமேடுகளைத் தக்க இடங்களில் அமைத்து, நீரோட் டம் தேவையான பாதையை விட்டு விலகாமற் செய்ய லாம். இவ்வாறு செய்யும்போது ஆற்றின் பழைய பாதையின் மேல்முனையை மூடிக் கீழ்ப்புறத்திலிருந்து