பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுகளின் வேலை

473

ஆறுகளின் வேலை

கடத்திச் செல்லப்படுகின்றன. நீரின் இயக்கம் ஒரே சீராக இல்லாமல் அதில் குறுக்கோட்டங்களும் சுழல்களும் இருப்பதால் இப்பொருள்களைக் கடத்திச் செல்வதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சிறு துணுக்குக்களும், இலேசான பொருள்களும் நெடுந்தொலைவு கடத்தப்படுகின்றன. பெரியவைகளும் கனமானவைகளும் அவ்வளவு அதிகமாகக் கடத்தப்படுவதில்லை. இதனால் ஆற்றுப்படுகை பிறப்பிடத்தினருகில் கல் நிறைந்ததாகவும், முகத்துவாரத்தில் மணற்பாங்காகவும் இருக்கும்.

நீர்வீழ்ச்சிகளும் விரைவோட்டங்களும்: நீரோட்டம் பாயும் இடத்தின் சரிவு திடீரென அதிகமாகும் பகுதிகளில் நீர்வீழ்ச்சிகளும் விரைவோட்டங்களும் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் தெளிவான வேறுபாடு இல்லை. இவை ஓங்கல்களிலிருந்து விழும்போதும், உறுதியான பாறைகளிலிருந்து மென்மையான பாறைகளை அடையும்போதும் தோன்றும். மைசூர் - பம்பாய் எல்லையில் சராவதி என்ற ஆற்றின் ஜோக் நீர்வீழ்ச்சி 900 அடி உயரமுடையது. அவ்விடத்தில் எரிமலைக் குழம்பு வெளிப்பட்டுப் பாறையாகக் குளிர்ந்து கடினப்பட்டது. இக் கடினமானபாறைக்கும், கடினமற்ற பழைய பாறைக்கும் உள்ள வேறுபாட்டினால் இப்பெரும்பள்ளம் தோன்றி யிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிய பிளவுப் பள்ளங்களில் அங்குப் பாயும் ஆறுகளின் நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன. அரிமானத்தால் நயாகரா நீர்வீழ்ச்சி பின்னோக்கிச் செல்வது போலவே ஜோக், சிவசமுத்திரம் ஆகிய நீர்வீழ்ச்சி களும் பின்னோக்கிச் செல்கின்றன என நம்பலாம்.

ஆற்றின் படிவுகள் : இவை வண்டற் படிவுகள் என்றும் கூறப்படும். ஒரே இடத்திலுள்ள படிவுகளுங் கூடப் பலவேறு வகையினவாக இருக்கலாம். ஆறு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வளைந்து செல்லும்போது அது உயரமான நிலத்தைக் கீழிருந்து அரித்துக்கொண்டு போகிறது. இதனால் ஆற்றுப் பள்ளத்தாக்கு அகலமாகிறது. மேற்புறத்திலுள்ள சரிவுகள் மெல்லத் தேய்கின்றன. வளைவுகளின் உட்புறத்திலும் மேற்புறத்திலும் நீரின் வேகம் குறைவாக இருக்கும். ஆகையால் இவ்விடங்களில் நீரிலுள்ள பொருள்கள் படிகின்றன.

ஓர் ஆற்றின் வெள்ளம் கரையை மீறிவிட்டால் அது அடுத்துள்ள நிலங்களை அடைகிறது. சமதளமான நிலத்தில் வெள்ளம் பரவும்போது அதன் வேகம் திடீரெனக் குறைகிறது. இதனால் நுண்ணிய பாறைத் துணுக்குக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் படிகின்றன. இப்படிவுகள் உயரம் குறைவான முகடுகளாகின்றன. இவை வண்டலிடு கரைகள் (Levees) எனப்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பள்ளத்தாக்குப் பரப்பு வெள்ளச் சமவெளி (Flood plain) எனப்படும். கங்கைக்கும் பிரமபுத்திராவிற்கும் பல்லாயிரச் சதுர மைல் பரப்புள்ள வெள்ளச் சமவெளிகள் உள்ளன.

ஆற்று நீரின் மட்டம் குறைவான நிலையில் அதிகமான வண்டலுள்ள நீரோட்டங்கள் ஆவியாதலினாலும் படுகையின் நீர் கசிவதாலும் ஆறுகள் தமது நீரிற்பெரும் பகுதியை இழக்கின்றன. இதனால் அவற்றின் பாதையில் ஏராளமான வண்டல் படிந்து பாதை தூர்ந்து போகக்கூடும். இவ்விளைவு பின்னுதல் (Braiding) எனப்படும். இதனால் பள்ளத்தாக்கில் சிக்கலான வலை போன்ற அமைப்புள்ள ஆழம் குறைவான கால்வாய்கள் தோன்றுகின்றன. வறண்ட பகுதிகளிற் பாயும்

ஆறுகளிலும், பனியாறு உருகுவதால் தோன்றும் ஆறுகளிலும் பின்னுதல் தோன்றும் கால்வாய்கள் ஏராளமாக இருக்கும். ஆற்று நீரில் போதிய அளவு வண்டல் இல்லாவிடில் பின்னல் விளைவு நிகழ்வதில்லை. இதற்குப் பதிலாக மணலும் பரலும் சேர்ந்து நெடிய தடைகளைத் (Bars) தோற்றுவிக்கும். இவற்றுள் சில நிலையாக எப்போதும் ஆற்றில் இருப்பதுண்டு. அடுத்த வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்படும் தடைகளும் உண்டு.

ஆறு கடலை அடையும்போது அதன் ஓட்டம் தடைப்படுவதாலும், வண்டல் துகள்களைத் உப்புநீர் திரளச் செய்வதாலும் வண்டல் விரைவில் படிந்துவிடும். கடலலைகளும் நீரோட்டமும் மிக வலிவாக இருந்தால், அவை இந்த வண்டலை அடித்துச் சென்று, அது படியாமல் தடுக்கும். இதைத் தவிர நிலமும் கடலடியும் இறங்கிக் கொண்டிருந்தாலோ, அண்மையில் இறங்கியிருந்தாலோ, அதன் பள்ளத்தாக்கு அரைகுறையாக நீரில் மூழ்கி இருக்கும். இப்போது ஆறு ஒரு கழிமுகத்தின் வழியே கடலை அடையும்.

இவ்வாறின்றிக் கடலின் ஏற்றவற்றமும் நீரோட்டமும் குறைவாக இருந்தால், ஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் தோன்றி, அகலமானதும், வெளிப்புறம் சாய்வானதும், விசிறிபோன்ற வடிவுள்ளதுமான திட்டுத் தோன்றும். சில சமயங்களில் படிவுகள் மிக அதிகமாகி நீரின்போக்கையே தடை செய்துவிட்டால், வெள்ளத்தின்போது ஆற்றின் நீர் கடலை அடைய வழியில்லாமல், கரைகளை உடைத்துக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கால்வாய்களின் வழியே கடலை அடையும். இது பலமுறை நிகழ்ந்து, ஆற்றிற்கு ஏராளமான கிளை நதிகள் தோன்றும். இவ்வாறு கடலைநோக்கி வளரும் படிவு நிலம் கழிமுகத்தீவு (Delta) என அழைக்கப்படும். நல்ல வண்டலினாலான இந்நிலம் மிக வளமானதாக இருக்கும். கங்கை - பிரமபுத்திரா கழிமுகத்தீவு இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். இந்தக் கழிமுகத்தீவுகளில் பரந்து கிடக்கும் சுந்தரவனங்கள் தாவரங்கள் தழைத்து வளரும் வளமுள்ள பிரதேசங்களாகவும், காட்டு விலங்குகளுக்கு உறைவிடமாகவும் விளங்குகின்றன. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஆறுகளின். கழிமுகத்தீவுகள் பயிர்கள் செழிக்கும் பகுதிகளாக உள்ளன. கடலடியின் இறக்கத்தினால் தான் கங்கை - பிரமபுத்திரா கழிமுகத்தீவின் கனம் இவ்வளவு அதிகமாகி யது எனக் கருதுகிறார்கள்.

அரிமானச் சுற்றும் பள்ளத்தாக்கு வளர்ச்சியும்: ஆறுகளும், நிலத்தோற்றத்தின் மற்ற அமிசங்களும் எப்போதும் மாறியவண்ணம் உள்ளன. புதிதாக ஒரு நிலப்பகுதி உயர்த்தப்பட்டதும் இயற்கை தனது செதுக்குவேலையைத் தொடங்குகிறது. பள்ளத்தாக்குக்களும், மற்ற நில வடிவங்களும் தெளிவான சிறப்பியல்புகள் கொண்ட பல படிகளை அடைகின்றன. இவை, இளமை, முதிர்ச்சி, முதுமை என்று அழைக்கப்படும். திடீரென நிகழும் புவியியக்கங்கள் இவற்றைத் தடை செய்யாமல் இருந்தால் அப்பகுதி முழுதும் இறுதியாக ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிறது. நிலத் தோற்றத்தின் பரிணாமத்தில் நிகழும் இம்மாறுதல்கள் அரிமானச் சுற்று என அழைக்கப்படுகின்றன.

இளமை என்னும் பருவத்தில் மாறுதலற்ற அமைப்புள்ள பீடபூமியையும், அலைகள்போன்ற மடிப்புக்கள் கொண்ட பகுதியையும் ஆற்றுநீர் கூறுபடுத்தத் தொடங்குகிறது. இக்காலத்தில் பள்ளத்தாக்கு ஆழத்திலும் முன்புறத்திலும் மிக விரைவாக வளர்கிறது.