பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுமுக நாவலர்

475

ஆன்செல்ம்

களையும், திருமுறைகளையும், சமஸ்கிருதத்தையும் கற்றுச் சைவாகமங்களிலே வேண்டிய பகுதிகளையுந் தாமே கற்றுக்கொண்டார். இளமை தொட்டே கோயில்களிற் புராணங்களுக்குப் பதப்பொருள் கூறி விருத்தியுரை சொல்லுதல், தருக்கித்தல் முதலிய பழக்கங்களும் இவரிடம் இருந்துவந்தன. சைவானுஷ்டானங்களில் என்றுமே இவர் தவறியதில்லை.

அக்காலத்தில் பாதிரிமார் மதமாற்றத்துக்குக் கையாண்ட முறைகளால் நாவலருக்கு வருத்தம் உண்டாயிற்று. அவருடைய வாழ்க்கையே மாறியது. அவர் இல்வாழ்க்கையிற் புகாமல் சமய வளர்ச்சிக்கே உழைக்கவேண்டும் என உறுதி செய்துகொண்டார். 21ஆம் வயதின் தொடக்கத்தில் மாணவர் சிலரைச் சேர்த்துச் சம்பளம் பெறாமல் இராக்காலங்களில் சமய நூல்களையும் கருவி நூல்களையும் படிப்பிக்கத் தொடங்கினார். 25ஆம் வயதில் வெள்ளிக்கிழமைதோறும் பெருந்திரளானவர்களுக்குச் சமயச் சொற்பொழிவு செய்துவந்தார். பின்னர் தமது உத்தியோகத்தை விடுத்து, 26-ஆம் வயதில் யாழ்ப்பாண நகரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தாபித்தார். இவருடைய மாணவர்களே ஆசிரியர்கள் ஆனார்கள். மருமகரும் மாணவருமான வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளை பாடஞ் சொல்லுவதிலேயே காலங்கழித்தார். சபாபதி நாவலரும் இவருடைய மாணவர்களிற் சிறந்தவர். தமிழ்நாடு முழுவதிலும், சிதம்பரம் முதலிய முக்கியத் தலங்கள் தோறும் சைவ வித்தியாசாலைகள் அமைக்கவேண்டும், சைவப்பிரசாரகர்களை உண்டாக்க வேண்டும் என்கின்ற ஊக்கம் நாவலருக்கு வரவரக் கிளர்ந்தது. நாவலர் என்ற பட்டம் 27ஆம் வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்டது. இராமநாதபுர சமஸ்தானம் நாவலர் முயற்சிகளுக்கு வலிந்து உதவ முன்வந்தது.

சிறியவர்களுக்கும் வயது வந்தவர்களுக்கும் உபயோகமான கருவி நூல் சமய நூல்களின் இன்றியமையாமையை உணர்ந்து, புதியனவாக நூல்கள் எழுதவும், ஏட்டிலிருந்தவைகளை ஆய்ந்து அச்சிடவும் இவருக்குப் பணி ஏற்பட்டது. இலங்கைப் பூமிசாஸ்திரங்கூட இவர் எழுதினார்; கணிதவாய்பாடுகளும் எழுதினார். நாவலருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் பதிப்புக்களும் சூழ்நிலையின் படிப்படியான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை. அக்காரணத்தால் இவர் முயற்சிகளெல்லாம் சிறந்த அடிநிலையிலிருந்து தொடங்கி நடந்தவைகள் என்னலாம்.

1. இவர் எழுதிய 1, 2, 3, 4ஆம் பாலபாடங்கள், திருவிளையாடற்புராண வசனம், பெரியபுராண வசனம், சூசனம் என்பவை ஒருவகையில் அமைந்திருக்கின்றன.

2. இலக்கணவினாவிடை, இலக்கணச் சுருக்கம், நன்னூற் காண்டிகை எழுதியதும், நன்னூல் விருத்தி, இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் சூறாவளி, தொல்காப்பியப் பாயிர முதற் சூத்திரவிருத்தி, பிரயோக விவேகம், சேனாவரையம், தருக்க சங்கிரகம், நிகண்டு பதிப்பித்ததும் மற்றொரு வகை.

3. 1,2ஆம் சைவவினாவிடை, நித்தியகரும விதி, சிவாலயதரிசன விதி, புட்பவிதி, சிதம்பரமான்மியம், சைவசமயநெறி உரை, கோயிற்புராண உரை, திருமுருகாற்றுப்படையுரை எழுதியதும், சிவஞானபோதச் சிற்றுரை, பதினோராந்திருமுறை, திருவாசகம், அகத்தியர் தேவாரத்திரட்டுப் பதிப்பித்ததும் வேறொரு வகை.

4. பாரதம், சேதுபுராணம், கந்தபுராணம், பெரியபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையார் உரை ஆகிய பதிப்புக்கள் வேறொரு வரிசை.

5. சைவதூஷணப் பரிகாரம், சுப்பிரபோதம், மித்தியாவாத நிரசனம் முதலிய கண்டன நூல்கள் எழுதியது ஒருவகை. மேலும், சமூக அரசியற் பிரச்சினைகளில் ஈடுபட்டுக் காலந்தோறும் வெளியிட்ட கட்டுரைகள், கண்டனங்கள் மிகப் பல. அவற்றுள் சில நாவலர் பிரபந்தம் என்ற பெயரில் வந்திருக்கின்றன. இவர் இயற்றிய கீர்த்தனங்களும் பாடல்களும் சில உண்டு. எண்ணிறந்த பிரசங்கங்களும் புராண வியாக்கியானங்களும் இவர் செய்தவை எழுதப்படவே இல்லை. தமிழ் உரைநடை ஆறுமுகநாவலரால் ஒருவகைத் திருத்தமும் அழகும் பெற்றது. சி. க.

ஆறுமுகம் பிள்ளை (19-ஆம் நூ.) அரிச்சந்திர வெண்பா, மதுரை யமக அந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியர்.

ஆன் (Anne, 1665-1714) இங்கிலாந்து அரசி. II - ம் ஜேம்ஸின் மகள். இவள் டென்மார்க்கைச் சேர்ந்த ஜார்ஜ் இளவரசனை மணந்து, பதினேழு மக்களைப் பெற்று, அத்தனை மக்களையும் இழந்து விட்டதால், 1702-ல் III - ம் வில்லியத்துக்குப் பின் தானே இங்கிலாந்து அரசியானாள். 1710 வரையில் மார்ல்பரோ பிரபுவின் மனைவியான சாரா என்பவளுடைய முழு ஆதிக்கத்தின் கீழிருந்தாள். இவள் காலத்தில் ஸ்பானிஷ் வார்சுரிமைப் போரில் மார்ல்பரோ பிரபு பல வெற்றிகளைக் கண்டான். உட்ரெக்ட் உடன்படிக்கை (1713) யின்படி அப்போரும் முடிவடைந்தது. இவள் இங்கிலீஷ் கிறிஸ்தவத் திருச்சபையை ஆதரித்தாள். இங்கிலாந்து ஸ்காட்லாந்து ஐக்கியமும் (1707), பிரிட்டிஷ் பார்லிமென்ட் அரசியல் முன்னேற்றமும் இவள் ஆட்சிக் காலத்து முக்கியமான நிகழ்ச்சிகள். அடிசன், டீபோ (Detoe), போப், சுவிப்ட் (Swift) முதலிய ஆங்கிலப் பெரும் புலவர்கள் வாழ்ந்ததும் இவள் ஆட்சிக் காலத்தில்தான்.

ஆன்கரா (Ankara) துருக்கியின் தலைநகரம். பண்டை நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குமுன் கால் (Gual) நாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்களின் தலைநகராக இருந்தது. பைசாண்டிய நாகரிக காலத்தில் இது முக்கிய நகர். இதன் பின்னர் இது பலமுறை கைமாறியது. 1415-ல் இதைத் துருக்கியர்கள் மீட்டுக் கொண்டனர். கெமால் பாஷா 1920-ல் இங்குத் தமது அரசாங்கத்தை ஏற்படுத்தினார். 1923-ல் இது நாட்டின் தலைநகராக்கப்பட்டது.

நகரம் செங்குத்தான மலையின்மேல் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலக் கோட்டையின் சிதைவுகள் உள்ளன. பண்டை ஐரோப்பியக் கட்டடச் சிற்ப முறையில் அமைந்த கட்டடங்கள் பல உள்ளன. குறுகிய தெருக்களையுடைய இந்நகரம் தலைநகராக்கப்பட்டபின் தற்கால வசதிகளோடு சீர் திருத்தப்பட்டது. பல தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றன. ஓடு, துணி, கித்தான் துணி முதலியவை உற்பத்தியாகின்றன. கம்பளித் துணி, மோஹேர் கம்பளி, தானியம் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து வரும் தேனும் பழமும் பேர் போனவை. மக்: 2.86,781(1950).

ஆன்கிங் (Anking) கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வே மாகாணத்தின் தலைநகர். இதற்கு உச்வெயினிங் என்றும் ஹுவேனிங் என்றும் பெயருண்டு; யாங்ட்ஸி நதிக்கரையில் ஷாங்காயிக்கு மேற்கே 364ஆம் மைலில் உள்ளது. மக் : சூ.38,000.

ஆன்செல்ம் (Anselm, 1033-1109) ஒருபெரிய தத்துவ சாஸ்திரி. இவர் இத்தாலி நாட்டினர்; 1060-ல் பாதிரியானார். இவர் கடவுள் உண்மையை