பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

வற்புறுத்தப் பல ஆதாரங்கள் உண்டு என்றும், அறிவிற்கும் நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதுவது தவறு என்றும் எடுத்துக்காட்டி. ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். 1093-ல் இவர் தம் குருவான லான்பிராங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் கான்டர்பரி ஆர்ச்பிஷப்பாகப் பதவி ஏற்றார் ; 1097-ல் II-ம் வில்லியமுடன் ஒத்துப்போக முடியாமல் ரோமிற்குச் சென்றார். 1100-ல் திரும்பி வந்தவர் I-ம் ஹென்ரியோடும் ஒத்துப்போக முடியாமல் நாட்டை விட்டு அகன்றார். இவர் போப்பின் அதிகாரத்தை முழுவதும் ஆதரித்ததால், இங்கிலாந்தில் மன்னனுடைய அதிகாரம் சிறிது குன்றியது. இவர் 1494-ல் திருத்தொண்டர் (Saints) குழாத்துள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

ஆன்ட்வெர்ப் (Antwerp), பெல்ஜியத்திலுள்ள பெரிய துறைமுகம். ஐரோப்பாவில் இதைவிடப் பெரிய துறைமுகம் கிடையாது. இதைப் பிரெஞ்சு மக்கள் ஆன்வெர் என்பர். இது கடலிலிருந்து 50 மைல் தூரத்தில் ஷெல்ட் நதிக்கரையில் இருப்பதால் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி மூன்று நாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இங்குப் பல கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. வைரத்தைச் சாணை பிடிப்பதில் ஆம்ஸ்டர்டாமுடன் போட்டி போடுகிறது. பல அழகான கட்டடங்களுக்கும் ஓவியங்களுக்கும் பேர்போனது. இது பல நூற்றாண்டுகளாகப் பிளெமிஷ் பண்பாட்டின் தாயகமாக இருந்து வருகிறது. மக்: 2,61,412 (1950).

ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. இது யாலூ நதி முகத்துவாரத்தில் உள்ளது. முக்டன்-கொரியா ரெயில்வேக்கள் இங்குச் சந்திக்கின்றன. மக் : 3,15,242 (1940).

இதே பெயருள்ள மாகாணம் ஒன்று வடகிழக்குச் சீன மஞ்சூரியாவில் உள்ளது. பரப்பு : 24.487 ச .மைல். தலைநகரம் டுங்காவா.

ஆன்டனானரிவோ (Antananarivo) அல்லது டானானாரீவ் (Tananarive) ஆப்பிரிக்காவில் கிழக்குக்கரை அருகில் இந்திய சமுத்திரத்திலுள்ள மடகாஸ்கர் என்னும் பிரெஞ்சுத் தீவின் தலைநகர். தீவின் நடுவில், கடல் மட்டத்திலிருந்து நாலாயிரம் அடி உயரத்திலுள்ளது. மக் : 1.74,153 (1950). இவர்களுள் 17,427 பேர் பிரெஞ்சுக்காரர். பண்டைய மடகாஸ்கர் அரசியின் அரண்மனை மிக்க புகழ்பெற்ற கட்டடம்.ரேடியோ நிலையமும் ஆகாய விமான நிலையமும் உள்ளன.

ஆன்டனி, மார்க் (கி. மு. 83-கி. மு. 30) : ஜூலியஸ் சீசரின் கீழ் ராணுவத்தில் சேவை செய்து வந்த ஆன்டனி முதலிலிருந்தே சீசரின் நேசத்தைப் பெற்றான். சீசர் இறந்த பிறகு பதவி ஆசையால் சீசரின் தத்து மகனான ஆக்டேவியஸுடனும் லெபிடஸ் என்னும் தலைவனுடனும் கி. மு. 43-ல் ஒப்பந்தம் செய்து கொண்டு ரோம் சாம்ராச்சிய மூவராட்சியில் கலந்து கொண்டான். கிழக்கே, இவர்களுக்குப் பகைவர்கள் இருந்தமையால், ஆன்டனி அவர்களை அடக்கச் சென்றான். ஆனால் எகிப்தையாண்ட கிளியோபாத்திரா அரசியின் மயலில் அகப்பட்ட ஆன்டனி தன் அரசியல் கடமையை மறந்து அவளோடு தங்கிவிட்டான். ஆக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் காப்பாளன் என்னும் நிலையில் ஆன்டனியையும் கிளியோபாத்திராவையும் அக்டியம் போரில் கி. மு. 31-ல் வென்றான். ஆன்டனி கி.மு. 30-ல் தற்கொலை புரிந்துகொண்டான். டி. கே. வெ.

ஆன்டிகனீ (Antigone) கிரேக்க புராணக் கதையில் ஈடிப்பஸ் என்பவனுக்கு அவனுடைய தாயிடம் பிறந்த பெண். இவள் தந்தையிடம் காட்டிய அன்பைக் குறித்துக் கிரேக்கக் கவிஞர் சோபக்கிளிஸும், சகோதரனிடம் காட்டிய அன்பைக் குறித்துக் கிரேக்கக் கவிஞர் யுரிபெடீஸும் நாடகங்கள் எழுதியுளர்.

ஆன்டிபயோடிக்குகள் (Antibiotics) : காளான்களையும் பாக்டீரியாவையும் போன்ற நுண்ணுயிர்களால் வெளிவிடப்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சி, வளர்சிதை மாற்ற இயக்கம், பெருக்கம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும் இயல்புள்ள பொருள்கள் இவ்வாறு அழைக்கப்பெறுகின்றன. இவற்றுள் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்டது பெனிசிலின் (த.க.) ஒருவகைப் பூஞ்சக் காளானிலிருந்து வெளிப்படும் இப்பொருள் பலவகை நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும் திறனுள்ளது. இதைவிடத் திறனுள்ள வேறு பல பொருள்களும் இதன்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புது ஆன்டிபயோடிக்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆன்டிபயோடிக்கு இயக்கம் கூட்டுப் பிழைப்பு (Symbiosis) என்ற உயிரியல் நிகழ்ச்சியின் எதிராகும். ஒருவகை நுண்ணுயிர் இன்னொருவகை உயிருக்கு எதிராக இயங்குகிறது. பல ஆன்டிபயோடிக்குகள் பாக்டீரியா வகைகள் சிலவற்றை மட்டும் அழிக்குமேயொழிய அவற்றுடன் தொடர்புள்ள வேறு வகைகளைப் பாதிப்பதில்லை. தாவர நோய்களைத் தோற்றுவிக்கும் நுண்மங்களை அழிக்கவல்ல ஆன்டிபயோடிக்குகளும் உண்டு. சில ஆன்டிபயோடிக்குகள் மண்ணிலும், நீரிலும், சீரணப் பாதையிலும் இருந்து நமக்கு நன்மைதரும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

பல நோய்களைக் கட்டுப்படுத்த மருத்துவரின் சிறந்த படைக்கலமாக விளங்கும் இப் பொருள்களைத் தீர ஆராயாமலும், அளவுக்கு மிஞ்சியும் பயன்படுத்துவதால் பல தீங்குகள் நேர்கின்றன என்பது தெளிவாகியுள்ளது. நல்ல மருத்துவப் பயிற்சி இல்லாதவர்கள் இவற்றைப் பயன்படுத்துவது விரும்பத் தக்கதன்று.

ஆன்டியக்கஸ்: கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதல் நாற்றாண்டுவரை ஆசியா மைனரை ஆண்ட பல மன்னர்களுக்கு இப்பெயர் உண்டு. இவர்கள் மகா அலெக்சாந்தர் இறந்தபின் சிரியாவில் செலியூக்கஸ் வமிசத்தை நிறுவிய செலியூக்கஸ் நிகேட்டாரின் மரபைச் சார்ந்தவர்கள். இவர்களின் நால்வரைப்பற்றிய வரலாறுகள் தனிக் கட்டுரைகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

ஆன்டியக்கஸ் II-ம் செலியூக்கஸ் மகன் ; செலியூக்கஸ் வமிசத்தில் சிரியாவில் அரசாண்டவன்; கி. மு. 280 முதல் கி. மு. 261 வரை ஆட்சி புரிந்தான்.

ஆன்டியக்கஸ் III, மகா (? - கி. மு. 187) : பாக்ட்ரியா, பார்த்தியா, இந்தியா ஆகியவற்றின் மீது படையெடுத்தான் (கி. மு. 212-கி. மு. 205). ரோமானியர்கள் பலம் குன்றியிருந்தபோது அவர்களோடு போர்புரியுமாறு ஹானிபால் கூறியதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. மாக்னீஷியா என்னுமிடத்தில் ரோமானியப் படைத்தலைவனான சிப்பியோ என்பவனால் தோற்கடிக்கப்பட்டான் (கி.மு.188). கி.மு. 223 முதல் கி.மு. 187 வரை ஆட்சிபுரிந்தான்.

ஆன்டியக்கஸ் IV (? -கி. மு. 164) அலெக்சாந்திரியாவை முற்றுகையிட்டான் (கி.மு.168). ஆனால் ரோமானியர்கள் எதிர்த்ததால் எகிப்தை வெல்ல