பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்டியக்கஸ்

477

ஆன்மா

முடியாமல் திரும்பினான். கி.மு. 176 முதல் கி.மு. 164 வரை ஆட்சிபுரிந்தான்.

ஆன்டியக்கஸ் XIII சிரியாவின் கடைசி அரசன் ; இவன் ரோமானியத் தலைவனான பாம்பே (Pompey) என்பவனுக்கு உதவிபுரிந்தனன்.

ஆன்டியாக் கி. மு. 300-ல் செலியூக்கஸ் நிகேட்டார் தன்தந்தை ஆன்டியாக்கஸ் பெயரால் சிரியாவில் நிருமாணித்த பழைய தலைநகரம். செல்வத்திற் சிறந்து விளங்கிய இந்நகர் கீழை நாடுகளின் அரசி என்னும் பெயரோடு திகழ்ந்தது. அக்காலத்தில் ஐரோப்பாவில் ரோமும், ஆப்பிரிக்காவில் அலெக்சாந்திரியாவும், ஆசியாவில் இந்நகரமும் மிகுந்த பெருமையோடு விளங்கின. கி. பி. 526-ல் ஒரு பூகம்பம் இந்நகரின் பெரும் பகுதியை அழித்துவிட்டது. சிலுவைப் போர்களில் இந் நகரம் சிறிது சிதைவுற்றது. 1268-ல் எகிப்தியர்கள் இந்நகரை முழுவதும் அழித்துவிட்டனர். இப்போது அப் பழைய இடத்தில் புதிய நகரம் ஒன்று இருக்கிறது. பட்டுக் கைத்தொழில் ஓரளவு நடைபெறுகிறது.

ஆன்டில்லீஸ் (Antilles) மேற்கிந்தியத் தீவுகளின் மற்றொரு பெயர். இவற்றில் கியூபா, ஜமெய்க்கா, ஹைட்டி, போர்ட்டோ ரீக்கோ என்பவை சேர்ந்து பெரிய ஆன்டில்லீஸ் என்றும், போர்ட்டோ ரீக்கோவிலிருந்து தென் அமெரிக்காவரை நீண்டிருக்கும் தீவுக் கூட்டம் சிறிய ஆன்டில்லீஸ் என்றும் பெயர் பெறும். மார்ட்டினிக், டிரினிடாடு, பார்படோஸ், வர்ஜின் தீவுகள் முதலியவை இதன்கண் உள்ளன. பகாமா தீவுகளை ஆன்டில்லீஸின் பகுதியாகக் கருதுவதில்லை.

ஆன்டீட்டம் வட அமெரிக்காவில் தென் பென்சில்வேனியாலிருந்து வடமேற்கு மேரிலாந்தில் செல்லும் ஓர் ஆறு. 1862-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் மிக்க கடும்போர் ஒன்று இதன் கரையில் நடந்தது.

ஆன்டேரியோ (Ontario) கானடாவின் மாகாணங்களில் ஒன்று. பரப்பு : 4.12,532 ச.மைல். மக்: 45,97,542 (1951). மக்கள் நெருக்கமும் செல்வப் பெருக்கமும் மிகுந்தது. மற்ற மாகாணங்களைவிட மிகுந்த நகரங்களைக்கொண்டது. இங்குள்ள ஆட்டவா கானடாவின் தலைநகரம். இம் மாகாணத்தின் தலை நகரம் டரான்டோ. மக்: 6,73,104 (1949). இது கானடாவின் தொழிற் கேந்திரம். இங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. உடல் நலத்திற்கேற்ற தட்பவெப்ப நிலையுள்ளது. நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. முக்கியமான ஆறுகள் செயின்ட் லாரன்ஸும் ஆட்டவா ஆறுமாகும். தாதுப் பொருட் செல்வம் மிகுந்த மாகாணம். தங்கம், வெள்ளி, கோபால்ட், நிக்கல், செம்பு முதலியவையும், ஏராளமான மட்டரக இரும்புக்கனியமும் உள்ளன. பெட்ரோலியமும் கிடைக்கிறது. மரப்பண்ணைத் தொழில் முக்கியமானது. இதனால் காகித உற்பத்தி பெரிய அளவில் நடைபெறுகிறது. மீன் பிடித்தலும், இதனுடன் தொடர்புள்ள தொழில்களும் முக்கியமானவை. ஓட்ஸ், கோதுமை, பார்லி முதலிய தானியங்களும் பழ வகைகளும் முக்கியமான விளைபொருள்கள். ஹாமில்டனில் மக்மாய்டர் பல்கலைக் கழகமும், கிங்ஸ்டனில் குவீன்ஸ் பல்கலைக் கழகமும், ஆட்டவாவில் ஆட்டவா பல்கலைக் கழகமும், டரான்டோவில் டரான்டோ பல்கலைக் கழகமும், லண்டனில் மேற்கு ஆன்டேரியோ பல்கலைக் கழகமும் உள்ளன.

ஆன்டேரியோ ஏரி வடஅமெரிக்காவில் பெரிய ஏரிகள் என்று வழங்கும் ஐந்தனுள் மிகச் சிறியது; கீழ்க்கோடியிலுள்ளது. பெரிய கப்பல்கள் ஆண்டு முழுவதும் ஏரியின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல முடியும். இது ஆன்டோரியோ மாகாணத்துக்கும் நியூயார்க் மாகாணத்தின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலுள்ளது. 185 மைல் நீளம்; 60 மைல் அகலம். பரப்பு 7,540 ச.மைல். கரை 480 மைல் நீளம்; ஆழம் 500-774 அடி. ஏரி கடல் மட்டத்திலிருந்து 248 அடி உயரத்திலுள்ளது. இதன் நீர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் வழியாக அட்லான்டிக் சமுத்திரத்தைச் சேர்கிறது. நயாகரா ஆறு இதையும் இரி ஏரியையும் இணைக்கிறது. நான்கு ஆறுகள் இதற்கு நீர் கொண்டுவந்து சேர்க்கின்றன. துறைமுகங்கள் இருக்கின்றன. இதன் கரையில் டரான்டோ, ஹாமில்ட்டன் போன்ற முக்கியமான பல நல்ல துறைமுகங்கள் உள்ளன.

ஆன்மா: ஆத்மா என்பது உயிர்ப்பது என்னும் பொருளுடைய அன் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அதனால் அது உயிர் என்னும் பொருளுடைய பிராணன் என்னும் சொல்லுடன் சம்பந்தம் உடையது. ஆத்மா என்னும் சமஸ்கிருத பதந்தான் தமிழில் ஆன்மா என்று வழங்கப்படுகிறது. இந்த மொழி இருக்கு வேதத்தில் சுமார் முப்பது தடவை பல பொருளில் காணப்படுகிறது. ஆயினும் ஆன்மா என்பது உடலினின்று வேறுபட்டதும், உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயல்களின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவியையே குறிக்கிறது. உபநிடதங்களிலும் இந்தப் பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் அது உபநிடதச் சொல்லான பிரமம் என்பதற்குப் பதிலாக வந்துள்ளது. அப்பொழுது அதன் பொருள் பிரபஞ்சத்தின் மூல தத்துவம் என்பதாகும்.

சாருவாகர்கள் உடலினின்று வேறான ஆன்மா ஒன்றை ஒப்புக்கொள்ளவில்லை, சில வாதிகள் இந்திரியங்களையோ அல்லது பிராணனையோ அல்லது மனத்தையோதான் ஆன்மா என்று கூறிவிடுவார்கள். உபநிடதங்கள் கூறும் ஆன்மாவைப்பற்றிப் புத்தர் கருதியது யாது என்பது விளங்கவில்லை. அவர் ஆன்மா உளது என்பதாகவும் கூறவில்லை; இலது என்பதாகவும் கூறவில்லை. புத்தருக்குப் பின் பௌத்தமதத்தினர் நான்கு பிரிவினராகப் பிரிந்தனர். அவர்களுள் மாத்தியமிகர் என்போர் ஆன்மா என்பது தனிப்பட்ட சூனியந்தான் என்று கூறுகிறார்கள். மற்றப் பிரிவினரான விஞ்ஞான வாதிகள் ஆன்மா என்பது பகுத்தறிவாகிய விஞ்ஞானமேயன்றி வேறன்று என்று கூறினர். இந்த அறிவும் கணநேரமே நின்று போகும் மனோநிலைமையின் பிரவாகமாதலால் ஆன்மா என்பதும் கணந்தோறும் வேறுபடும் தத்துவமேயன்றிச் சாசுவதத் தன்மையுடைய தத்துவமன்று என்று கூறுகிறார்கள். ஆன்மா வேறு, உடம்பு வேறு என்றும், அவை இரண்டும் ஒரே பரிமாணம் உடையன என்றும், ஆன்மா விரியவும் சுருங்கவும் கூடிய சக்தி வாய்ந்தது என்றும் சமணர்கள் கூறுகிறார்கள்.

வைதிக தரிசனங்கள் என்னும் இந்து தத்துவ சாஸ்திரங்கள் ஆறும் நித்தியமான ஆன்மா வேறு, அநித்தியமான உடல் வேறு என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் தரிசனங்களிடையே சில சிறு வேறுபாடுகள் காணப்படினும், புறத்தேயிருந்து வந்து உடலில் புகுந்துவிட்ட மாசுகளை எல்லாம் நீக்கிவிட்டால் எஞ்சி நிற்பது ஆன்மா என்பதே அவை அனைத்தும் கூறும் முடிவாகும். எச். ஜீ. ந.