பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/526

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்வே

478

ஆனந்தசங்கர துருவர்


ஆன்வே (Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு : 54,319 ச. மைல். மக்: சு. 2,44.74.000 (1950). மாங்க்ட்ஸீ ஆறு இம்மாகாணத்தின் வழியே செல்லுகிறது. நெற்சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. வடபகுதியின் தலைநகர் ஆன்கிங். தென்பகுதியின் தலைநகர் ஹுவேஷாங். இரு தலை நகரப் பெயர்களின் முற்பகுதி சேர்ந்து ஆன்வே என்றாயிற்று.

ஆனகொந்தா (Anaconda) தென் அமெரிக்காவிலுள்ள பெரிய மலைப்பாம்பு (Water boa). சில 30 அடி நீளம் வளரும். இந்தியாவில் இதற்கு இணையானது மலைப்பாம்புதான். இது நீரருகில் வசிக்கும்; நீந்தும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கிப்பொரித்துப் பாம்புக் குட்டிகளாக வெளிவரும். இதன் உணவு பறவைகளும் விலங்குகளுமாகும். மலைப்பாம்பு போலவே தன் இரையின் உடலை இறுகச் சுற்றி, மூச்சுவிடாமற் செய்து, சாக அடித்துப் பின் விழுங்கும். இது கடிக்கும். ஆனால் நஞ்சில்லை, கடி ஆறிவிடும். ஆனை கொன்றான் என்னும் சொல்லுக்குத் தொடர்புடையது ஆனகொந்தா என்னும் பெயர். இச்சாதி ஊர்வன வகுப்பில் பாம்பு வரிசையில் பாயிடீ (Boidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. யூனெக்டிஸ் (Eunectes) என்பது சாதிப் பெயர்.

ஆனட்டோலியா (Anatolia) என்பது கிரேக்கர்கள் கருங்கடலுக்கும் மத்தியதரைக்க கடலுக்குமிடையிலுள்ள ஆசியா மைனருக்கு இட்ட பெயர். அதன் பொருள் ‘இள ஞாயிறு நிலம்’ என்பதாம். இப்போது இது ஆசியாமைனரை ஒரு பகுதியாகக்கொண்ட துருக்கிக்கு வழங்கி வருகிறது. பார்க்க : துருக்கி.

ஆனந்தக்கூத்தர் (16ஆம் நூ.) பாண்டிநாட்டில் பொருநை யாற்றங் கரையிலுள்ள வீரவநல்லூரினர். திருக்காளத்திப் புராணம் இயற்றியவர். திருவாசகத்துக்கு உரையெழுதிய ஆனந்தக்கூத்தர் இவரோ என்பது தெரியவில்லை. இவரைப் பரிமளப் புலவரென்றும் உரைப்பர்.

ஆனந்த குமாரசுவாமி, டாக்டர் (1877-1947): இவர் 1877 ஆகஸ்ட் 22-ல் கொழும்பு நகரில் பிறந்தார். இவருடைய தகப்பனார் கீழைத்தேசங்களில் முதன்முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும், அரிச்சந்திர நாடகத்தை ஆங்கிலத்தில் எழுதி விக்டோரியா ராணிக்கு உரிமையாக்கினவரும், சிறந்த இலங்கைத் தமிழர் தலைவராக விளங்கியவருமான சர் முத்துக்குமாரசுவாமியாவர். இவருடைய தாயார் எலிசபெத் கிளேபீபி என்னும் ஆங்கில மாது. ஆனந்த குமாரசுவாமி எட்டு மாதக் குழந்தையாயிருக்கும்போதே தாயார் இவரை எடுத்துக் கொண்டு இங்கிலாந்திற்குச் சென்றார். சர் முத்துக்குமாரசுவாமி 1879-ல் கொழும்பில் இறந்தபடியால் தாயாரும் மகனும் இங்கிலாந்திலேயே வசித்து வந்தனர். ஆனந்தகுமாரசுவாமி முதலில் விக்ளிவ் கல்லூரி (Wycliffe College)யிலும், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்று, 1900-ல் பீ. எஸ்ஸி. தேர்வில் தாவரவியலிலும் புவியியலிலும் முதலாம் வகுப்பில் தேறினார். 1903-ல் முதன்முதலாக இலங்கைக்கு வந்து, 1906 வரைக்கும் தாதுப்பொருள் ஆராய்ச்சிப் பகுதிக்குத் தலைவராகக் கடமையாற்றி, தோரியனைட் என்னும் கனியத்தைக் கண்டுபிடித்தார். இத்துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக இவருக்கு லண்டன் பல்கலைக் கழகம் டாக்டர் (டீ. எஸ்ஸி.) பட்டம் வழங்கிற்று.

ஆனந்த குமாரசுவாமி

இவர் தம் உத்தியோகக்கடமை சம்பந்தமாகக் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றார். அப்பொழுதுதான் அவ்விடங்களில் பாழ்பட்டுக் கிடந்த தாகோபாக்களையும் (Dagobas), விஹாரங்களையும், கோயில்களையும் கண்டு, அவற்றின் சிற்பத்திறன்களை ஆராயத் தொடங்கினர். மேனாட்டு நாகரிசுத்தில் மயங்கிக் கிடந்த இலங்கை மக்களின் போக்கை மாற்றும் பொருட்டு 1905-ல் இலங்கைச் சீர்திருத்தச் சபையைத் தாபித்தார். சுதேசிப் பொருள்களை ஆதரிக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும், இந்தியக் கலைகளைப்பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார். இவையே கலையும் சுதேசியும், தேசிய இலட்சியக் கட்டுரைகள் என்னும் ஆங்கில நூல்களாக வெளிவந்து இந்திய மக்களிடையே ஒரு பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணின. 1910-ல் இந்தியாவின் பல பாகங்களிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அரிய நுண்கலைப் பொருள்களைச் சேகரித்து, அலகாபாத் நகரில் ஒரு கலைக்காட்சியை ஏற்பாடு செய்தார். 1912-ல் சாந்திநிகேதனத்தில் சிலகாலந் தங்கினார். தாம் அரிதிற் சேகரித்த நுண்கலைப் பொருள்களைக் கொண்டு இந்தியாவில் ஒரு கலாபவனத்தைத் தாபிக்க முயன்றார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக்காதபடியால், அவற்றுடன் அமெரிக்காவுக்குச் சென்று, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சிச் சாலையைச் சேர்ந்தார். பின்னர் இவர் 1947-ல் இறக்கும் வரையில் அங்கேயே கடமையாற்றினார். இவர் அங்கிருந்த போதிலும் இந்தியக் கலைகளையும் பண்பாட்டையும் உலகுக்கு விளக்குவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். இவர் எழுதிய சிவநடனம் (Dance of Siva) என்னும் நூலே முதன் முதலில் தெய்வாமிசம் பொருந்திய இந்தியக் கலைகளின் உண்மைத் தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டியது. காந்தாரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த விக்கிரகங்கள் கிரேக்கச் சிற்பமுறையைப் பின்பற்றியவை என்னும் போலிக் கொள்கையைத் தக்க ஆதாரங் காட்டி மறுத்தவர் இவரே. மேலும் இவரே அமராவதி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைக்கொண்டு யாழின் வடிவம் இன்னதென்று முதன் முதலாக வரையறுத்துக் கூறியவர். இவர் கடைசிக் காலத்தில் வேதங்களின் தத்துவார்த்தங்களை விளக்குவதில் ஈடுபட்டிருந்தார். ச. அ.

ஆனந்தசங்கர துருவர் (1879-1942) குஜராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர். நல்ல சமஸ்கிருத பண்டிதர். பொதுமக்கள் வாழ்க்கையிலும் இவருக்குச் சிறப்பான இடமிருந்தது. ஹிந்துதர்மனீ பாலபோதீ, ஆபணோ தர்ம என்பவை இவருடைய சிறந்த நூல்கள். இவர் உரைநடை சமஸ்கிருதம் கலந்ததாக இருந்தாலும் படிப்பதற்குக் கடினமானதன்று. இவர் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபட்டவர். வஸந்த என்ற மாதப் பத்திரிகையில் புதுமையையும் பழமையையும் ஒன்றுசேர்த்து விதவிதமான கட்டுரைகளை எழுதி வந்தார். பி. ஜீ. தே.