பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனாய நாயனார்

480

ஆனிக்கோபொரா

நிலையிலேயே இருக்கவேண்டும். வெப்பத்தினாலோ, ரசாயன விளைவுகளாலோ அதன் இயற்கை அமைப்பு மாறக்கூடாது. மாறினால் எதிர்ப்பொருள் உண்டாகாது. வேற்றுப்பொருளை முதல்முறை உடலில் புகுத்திய பிறகு எதிர்ப்பொருள் தோன்றி வேற்றுப் பொருளுடன் கலந்து அதை மாற்ற முயலுகிறது. அது முற்றிலும் மாறாமலிருக்கும் நிலையில் இரண்டாவது முறையும் அதே புரோட்டீனை உடலில் புகுத்தும்போது, நச்சுப் பொருள் அதிக அளவில் தோன்றி ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சி விளைகிறது. நமது உணவில் இத்தகைய வேற்றுப் பொருள்கள் பலவற்றை நாம் உட்கொள்ளுகிறோம். ஆனால் குடலில் சுரக்கும் பல சீரண நீர்கள் அப்பொருள்களை ரசாயனமுறையில் மாற்றி அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றிவிடுகின்றன. ஆகையால் இவற்றால் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நேருவதில்லை.

மனித உடலில் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி நிலை மிக அருமையாகவே தோன்றினும், இதனால் விளையும் தொல்லைகள் கடுமையாக இருக்கக்கூடும். இது நேரும் போது தோல் தடிக்கும்; கீலுக்குக்கீல் வேதனையும் வீக்கமும் தோன்றும்; வாந்திபேதி முதலியன நேரும் ; அச்சம் விளையும்; கடுமையான இசிவு, நாடித் தளர்ச்சி முதலியவையும் காணலாம். சிலரிடம் மிகையாகத் தோன்றும் உணர்வுநிலை பொதுப்பட அலெர்ஜி (த.க.) எனக் குறிக்கப்படும். உணர்வுநிலையை விளைவிக்கும் பொருளை முதலில் உடலிற் செலுத்திச் சில நாட்களுக்குப் பின் இரண்டாம் முறையாக உட்செலுத்துவதால் தோன்றும் நிலைமட்டும் ஆனபிலாக்சிஸ் நிலை எனப்படும். என். சே.


ஆனாய நாயனார் பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்.


ஆனிக்கோபொரா (Onychophora) இது மிகச் சிறியதான ஒரு விலங்கு வகுப்பு. பெரிபதஸ் என்னும் புழுப்போன்ற ஒருவகைப் பிராணிதான் இந்த வகுப்பிலுள்ளது. பெரிபதஸ் பார்வைக்குப் பட்டுப் பூச்சிப் புழுப்போலத் தோன்றும். இரண்டு, இரண்டரை அங்குல நீளமிருக்கும். உடல் உருட்சியாக மெத்தென்றிருக்கும். நிறம் வெவ்வேறு இனத்தில் வெவ்வேறாக இருக்கும். சில கரிய சாம்பல் நிறம், சில ஒலிவப்பச்சை

ஆனிக்கோபொரா

நிறம். சில பழுப்பு நிறம், சில செங்கல் நிறம். எல்லாவற்றிற்கும் வயிற்றுப் பாகம் வெண்மையாக இருக்கும். தோல் மிக மெல்லியது. அதில் நிறையச் சிறு சிறு மறுக்கள் இருக்கின்றன. தலையில் நன்றாகத் தெரிகின்ற இரண்டு உணர்கொம்புகள் உண்டு. இரண்டு கண்கள், வாய்ப் பக்கங்களில் இரண்டு, சிறு காம்பு போன்ற உறுப்புக்கள், வாய்க்குள் இரண்டு தாடைகள், இவையெல்லாம் பக்கத்திற்கொன்றாக அமைந்திருக்கின்றன. வாய்க் காம்புகளில் தொளைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாகப் பிசின்போன்ற நீர் வெளிப்படும். இந்தப்பிசின் உடலினுள்ளிருக்கும் இரண்டு பிசின் சுரப்பிகளில் உண்டாகின்றது. இது தற்காப்புக்கும் இரையைப் பற்றுவதற்கும் உதவுகின்றது. இந்தப் புழுவைத் தொட்டால் பிசின் பீச்சிட்டுச் சில அங்குல தூரம் அடிக்கும். இதன் உடல் பல வளையங்களால் ஆனது. உடலில் இத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கால்கள் காட்டுகின்றன. 13 இணை முதல் 42 இணை வரையில் கால்கள் வெவ்வேறு இனங்களில் இருக்கின்றன. அந்தந்த இனத்தின் உடலில் எத்தனை வளையங்கள் சேர்ந்திருக்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். வெளியே வளையங்களைக் காட்டும் வரைகளில்லை. கால்கள் உள்தொளை உள்ளவை. அவற்றின் நுனியில் கூரிய கொக்கிகள் உண்டு. இந்த இனங்களில் பெரும்பாலானவை குட்டிபோடுகின்றன. ஒரு பெண் 30-40 குட்டிகள் ஓர் ஆண்டில் போடும். பெரிபதஸ் சுறுசுறுப்பான பிராணியன்று. மடித்துப்போன மரங்களில் பட்டைகளுக்கடியிலும் கல்லுக்கடியிலும் சந்துகளிலும் மரவட்டைபோல வாழும். இரவில்தான் திரிந்து இரைதேடும். வெளிச்சத்தில் வாராது. கறையான், மரப்பேன், சிறு ஈக்கள் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும்.

ஆனிக்கோபொரா கணுக்காலித் தொகுதியிலே ஒரு வகுப்பு. இத்தொகுதியிலுள்ள மற்ற வகுப்புக்கள்நண்டு, இறால் முதலியவை அடங்கிய ஓட்டுமீன்கள், பூச்சிகள், மரவட்டை, பூரான்கள், தேள், சிலந்திகள் என்பவை, இந்நான்கும் பெரிய வகுப்புக்கள். இவற்றுடன் ஒத்த படியில் ஆனிக்கோபொரா என்னும் இந்தச் சிறு கூட்டத்தையும் ஒரு வகுப்பாக அமைத்திருக்கிறது. மிகச் சிறிய இக்கூட்டத்தை மிகப் பெரிய கூட்டங்களுக்குச் சமமாக வைப்பதற்குக் காரணம் இதிலுள்ள பல அரிய உயிரியற் சிறப்பியல்புகளாகும்.

பெரிபதஸிலே மிகப்பழமையான நிலையைக் காட்டும் உடலமைப்புப் பண்புகளும் வளையப் புழுக்கள் தொகுதிக்குரிய சில பண்புகளும் தோன்றுகின்றன. விலங்குலகத்திலே இரண்டு பெரும் பிரிவுகளான இந்தத் தொகுதிகளுக்கு நடுவான ஓரமைப்பு இந்தப் பிராணியில் காணப்படுகின்றது. அதனால்தான் இந்த உயிர் மிகவும் தாழ்வானதானாலும் விலங்கியலாராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கழிவுறுப்புக்கள் புழுக்களிலுள்ளவை போன்றவை. உடம்பின் வளையத்துக்கு ஒரு ஐதையாகக் குழாய் வடிவமாக இருக்கின்றன. மூச்சு உறுப்புக்கள் ஈ, எறும்பு முதலிய கணுக்காலிகளின் உடலில் உள்ளது போன்ற மூச்சுக் குழாய்கள் (Tracheae). இந்தப் பண்பைக் கொண்டே பெரிபதஸைக் கணுக்காலித் தொகுதியிற் சேர்த்திருக்கின்றது. ஆயினும் இதற்கும் மற்றக் கணுக்காலிகளுக்கும் பல முக்கியமான வேறுபாடுகள் காண்கின்றன. இறால், பூச்சி, தேள் முதலியவற்றின் தோலில் கெட்டியான பாகங்களும், அவற்றிற்கிடையே மெல்லிய பாகங்களும் மாறிமாறி வரும். அதனால் உடம்பு வளையம் வளையமாகத் தோன்றும். கால்கள் கணுக்கணுவாக இருக்கும். பெரிபதஸின் தோல் மிக மெல்லியது. இலேசாக மடியக் கூடியது. ஆதலால், இதன் உடம்பில் வளையமோ கால்களில் கணுக்களோ காண்பதில்லை. இது கணுக்காலித் தொகுப்பைச் சேர்ந்ததானாலும் இதன்கால்களில் கணுக்களில்லை மேற்சொன்னபிராணிகளின் கால்கள் உணர்கொம்பு, கண், பலவிதமான தாடைகள், இடுக்கி, நடக்கும்கால், நீந்துங்கால் மூச்சுறுப்பு எனப் பலவித மாறுபாடுகளை அடைந்திருக்கின்றன. இங்கு உணர்கொம்பு, தாடை என இரண்டொரு மாறுபாடுகள் தாம் உண்டு. இது தோற்றத்தில் புழுவுக்கும் பூரானுக்கும் நடுவானதாகக் காண்கிறது.

இதன் உள்ளமைப்பில் கணுக்காலிப் பண்புகள் காண்கின்றன என்றும், அவற்றுள் ஒன்று மூச்சுவிடும்