பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனிக்கோபொரா

481

ஆஸ்ட்டன்

உறுப்பு என்றும் மேலே சொல்லப்பட்டன. மூச்சுக் குழாய்கள் தோலிலுள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுகுழிகளிலிருந்து கொத்துக் கொத்தாக எழுந்து உடம்பினுள்ளிருக்கும் பல உறுப்புக்களுக்கும் செல்கின்றன. இன்னொரு முக்கியக் கூறு இதன் உடலின் உள்ளறை. (Body cavity). இது இரத்தம் நிரம்பியது, அனால் இரத்தம் நிரம்பிய உள்ளறை பின்னால் தான் ஏற்படுகிறது. இது கருவாக வளரும் இளம் பருவத்தில் சாதாரண மண் புழுவிலிருப்பதுபோல சாமானியமான இரத்தமண்டலம் இருக்கின்றது. பாய்குழாய்களும் வடிகுழாய்களும் இருக்கின்றன. இரத்தம் இல்லாத உண்மையான உடலறை (Coelom) உண்டு. ஆனால் இது வளர வளர, வடி குழாய்களிற் சில மெல்ல மெல்ல அகன்று பெரியவாகி முதலிலிருந்த உடலறையை அழுத்திச் சுருக்கி எங்கோ சிறு மூலைகளில் தெரியாதவாறு ஒடுக்கிவிட்டு, முதிர்ச்சி முற்றிய உடலிலே இவையே இரத்தம் நிறைந்த இரத்தவுடலறையாக (Haemocoelic body cavity) ஆகிவிடுகின்றன : இதிலுள்ள புழுக்களை யொத்த அமைப்பு இதன் கழிவுறுப்புக்களில் காண்கின்றதென மேலே குறிக்கப்பட்டது. இவை மண் புழுவிற்போல உடல் நெடுக இருக்கின்றன. ஓர் இணைக் காலுக்குச் சமமாக, ஓர் இணைக் கழிவுச் சுரப்பிக்குழாய் (Nephridium) இருக்கின்றது. இக்குழாய்களில் உள்ள சில அணுக்களில் மிக நுண்ணிய மயிர்கள் (Cilia) உண்டு. நுண் மயிருள்ள அணு கணுக்காலிகளில் இல்லாத, ஆனால் புழுக்களில் காணும், ஒரு பண்பு.

இவ்வாறு பெரிபதஸின் உடலமைப்பும் முதிர்ச்சியும் இது வளையப்புழுத் தொகுதிக்கும் (Annelida) கணுக்காலித் தொகுதிக்கும் (Arthropoda) இடைப்பட்டதாக இருப்பது என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உள்ள பரிணாம சம்பந்தத்தை இவை விளக்குகின் றன. வளையப் புழுக்களைப்போன்ற உயிரினங்களிலிருந்து கணுக்காலியினங்கள் பரிணமித்துச் சென்ற வழியிலே தோன்றும் அடிச்சுவடு போல இருக்கின்றது இந்த வகுப்பு.

பெரிபதஸை, அறிஞர் அக்கறையோடு ஆராய்வதற்கு மற்றொரு காரணம் அதன் பரவுநிலை (Distribution). இது உலகத்தைச் சுற்றிலும் பல பாகங்களில் காணப்படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகள், மேற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்க தென் அமெரிக்காவின் வடபகுதி, சிலி, தென்னாப்பிரிக்கா, திபெத்து, இந்தியா, மலேயா, மெலனீசியா, ஆஸ்திரலேசியா என்று இப்படி மிகப் பரந்து கிடக்கும் நாடுகளில் அகப்படுகிறது. ஆயினும் தொடர்ந்து வியாபித்திராமல் இடைவிட்டு இடைவிட்டு அகப்படுகிறது. இப்படி இடைவிட்ட நாடுகளிலும் இது அகப்படும் பிரதேசங்கள் மிக மிகக் குறுகிய குறித்த சில இடங்கள்தாம். இந்தப் பிராணிகள் இப்போது அகப்படும் இடத்தோடு சேர்ந்து இவை உயிர் வாழ்வதற்கு ஏற்ற தன்மையுடைய இடங்கள் அகன்று கிடந்தாலும் இவை ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன. இந்த மாதிரிப் பரவுநிலை நுரையீரல்மீன்களில் (Dipnoi) காணப்படுகிறது. இந்த இடைவிட்ட பரவு நிலையால் (Discontinuous distribution) அறியக் கிடக்கும் பரிணாம தத்துவம் : இந்தவகையுயிர்கள் முன்பு நெடுந்தூரம் பரவியிருந்திருக்க வேண்டும். அவற்றின் சாதி, இனம், தொகை கூட முன்பு மிகுதியாக இருந்திருக்கவேண்டும். இப்போதுள்ளவை அவற்றுள் எஞ்சியிருப்பவை. இவை தேய்வுற்று வருபவை, நாளடைவில் முற்றிலும் அற்றுப்போனாலும் போகலாம் என்பதாம்.

பூச்சிகளிலும் புழுக்களிலும் நரம்பு மண்டலம் இரண்டு நெருங்கிய இழைகளாக வயிற்றுக்குக் கீழே உடலின் நெடுக ஓடும். ஆனால் பெரிபதஸில் இந்த நரம்பிழைகள் நடுவில் சேர்ந்திராமல் உடலின் பக்கத்திற்கு ஒன்றாக அகன்று இருக்கின்றன. இவற்றை இணைக்கும் குறுக்கு நரம்புகள் ஏணியின் படிகள் போலப் பல இருக்கின்றன.

பரிணாம வழியில் தோன்றும் சுவடுகளில் இன்னொன்று பெரிபதஸ் போன்ற ஆஷியையா (Asheaia) என்னும் பாசில் (Fossil). இது கேம்பிரியன் காலத்துப் பாறைகளில் அகப்படுவது. இது கடற் பிராணியெனத் தெரிகிறது.

ஆனிக்கோபொரா புழுப் போன்றவையானாலும் அழகு மிக்கவை, உணர் கொம்புகளின் மிக நுட்பமான உணர்ச்சியும், ஓயாமல் மாறிக்கொண்டேயிருக்கும் வடிவமும், நன்றாகத் திரண்டு கொழுவியதாகக் காணும் உடலும், தலையின் பக்கங்களிலே சிறு வைரங்கள் பதித்தது போன்ற கண்களும், நயமிக்க கால்களும், இவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தோலின் செழுமையான நிறங்களும், மக்மல் போன்ற நெசவும் இத்தனையும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிராணிகளுக்கு முற்றிலும் அசாதாரணமான அழகிய தோற்றத்தை அளிக்கின்றன என்று செஜ்விக் அறிஞர் கூறுகின்றார்.


ஆனைமலை தென் இந்தியாவில் நீலகிரி மலைக்குத் தெற்கே 65 மைல் தூரத்திலுள்ள சகயாத்ரி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இதன் சிகரமாகிய ஆனை முடிதான் தென் இந்தியாவில் மிக உயரமான சிகரமாகும் (8,850 அடி ). இம் மலையில் தேயிலையும் காப்பியும் நிறையப் பயிராகின்றன. தேக்கும் காட்டு மரமும் யானையும் மிகுதியாகக் காணப்படுகின்றன.


ஆஷ் மரம் (Ash) மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம். இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட இனங்கள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் உண்டு. இலை இறகு வடிவ ஒற்றைக் கூட்டிலை. எழு சிற்றிலைகள் உண்டு. பூக்கள் சிறியவை. இலைகள் உண்டாவதற்கு முன் பூக்கும். விதைகள் இறகுள்ள கனியில் இருக்கும். மரம் ஆயுதப் பிடிகள், பந்தடிக்கும் துடுப்பு, பனிச்சோடு (Ski) முதலியவை செய்ய உதவும். நல்ல விறகு.

குடும்பம்: ஓலியேசீ (Oleaceae). சாதி : பிராக்சினஸ் (Fraxinus).


ஆஷாம் (Ascham, Roger, 1515-1568) ஆங்கில எழுத்தாளர். I-ம் எலிசெபெத் ராணிக்கு ஆசிரியர். பாடத்திட்டத்தில் விளையாட்டுக்களையும் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினவர்.


ஆஸ்ட்டர் (Aster) சாமந்தி வகையை சார்ந்தது. கண்கவர் பூக்களுள்ள பெரிய கூட்டம். நூற்றுக் கணக்கான வகைகளைப் பல தேசங்களில் தோட்டங்களில் வளர்க்கிறார்கள். ஆஸ்ட்ரா என்றால் விண்மீன் எனப் பொருள்படும். தண்டுகளில் இலைகள் மாறொழுங்கில் அமைந்திருக்கும். பூக்கள் பல நிறமானவை. வெள்ளை முதல் செங்கறுப்பு வரையில் இருக்கும். சிவப்பு, ரோஜா,நீலம் முதலிய நிறங்களும் உண்டு. பூக்களெல்லாம் வட்டமான தட்டுப்போல அடுக்கியிருக்கும். இதழ்கள் மெலிந்து நீண்டு கதிர்கள் போல இருக்கும். குடும்பம்: கம்பாசிட்டீ (Compositae).


ஆஸ்ட்டன் (Aston, 1877-1945) ஆங்கிலப் பௌதிக அறிஞர். இவர் பர்மிங்ஹாமில் பிறந்து, அவ்வூரிலும் கேம்பிரிட்ஜிலும் கல்வி கற்றார். 1909ஆம் ஆண்டில் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியரானார். 1922-ல் இவர் ரசாயனத்தில்