பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/530

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்ட்டிரோகார்ஸ்கி

482

ஆஸ்ட்வால்டு

நோபெல் பரிசு பெற்றார். 1935-ல் சர்வதேச அணு ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். ஐசோடோப்புக் களைப்பற்றிய தற்கால அறிவிற்கு இவரே அடிப்படையான காரணராவார். இவர் அமைத்த நிறை நிறமாலை காட்டி (Mass Spectroscope) என்னும் கருவி ஐசோடோப்பு ஆராய்ச்சியில் பெரிதும் உதவும் சாதனமாகும். பெரும்பான்மையான தனிமங்கள் ஐசோடோப்புக்களைக் கொண்டவை என இவர் காட்டினார்.


ஆஸ்ட்டிரோகார்ஸ்கி, மோயிசி யக்கோவ் லெவிக் (1854-1919) ரஷ்ய அரசியல் அறிஞர். பீட்டர்ஸ்பர்க்கில் கல்வி பயின்று, சிறிதுகாலம் ரஷ்ய அரசாங்கத்தின் நீதி இலாகாவின் வெளியீட்டுப் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு பிரான்ஸ் தேசத்துக்குச் சென்று அரசியல் கலையில் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும் என்ற அவருடைய சிறந்த வெளியீடு பிரெஞ்சு மொழியில் 1902-ல் வெளியாயிற்று. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அவர் சிறிது காலம் தங்கியிருந்தார்; 1906-ல் ரஷ்யாவுக்குத் திரும்பினார். அங்கு அவர் ரஷ்யச் சட்டசபையின் அங்கததினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோ. அ.


ஆஸ்ட்டிரோபெக்டென் : பார்க்க : முள்தோலி.


ஆஸ்ட்டின் ஏரி மேற்கு ஆஸ்திரேலியாவில் மவுன்ட் மாக்னெட் அருகிலுள்ளது. அதற்கு அருகில் மீக்காதாராத் தங்கச் சுரங்கம் இருக்கிறது.


ஆஸ்ட்டெக் நாகரிகம் (Aztec) : கி.பி.12ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்ட்டெக் என்னும் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தையும், இன்கா என்னும் மக்கள் தென் அமெரிக்காவிலுள்ள பெரு, பொலிவியாப் பிரதேசத்தையும் கைப்பற்றினர். இந்த இரு மக்களும் தனிப்பட்ட முறையில் தங்கள் தங்கள் இடங்களில் ஒரு சிறந்த நாகரிகத்தை வளர்த்தனர்.

மத்திய அமெரிக்காவை டால்ட்டெக்குகளிடமிருந்து கைப்பற்றியபோது ஆஸ்ட்டெக்குகள் தோலாடை கட்டிய நாடோடி மக்களாக இருந்தனர். அவர்களுக்குச் சிறிது விவசாயத்தொழில் தெரிந்திருந்த போதிலும் நெசவுத்தொழில் முதலிய திறமை வாய்ந்த கைத்தொழில்கள் தெரியா. அப்படியிருந்தும் மிக்க விரைவில் அவர்கள் கட்டடக் கலையைக் கற்று, மெக்சிகோ நகரத்தை அழகாகக் கட்டினர். கார்ட்டிஸ் (Cortes) என்ற ஸ்பானிய வீரன் 1519-ல் மெக்சிகோவின் மீது படையெடுத்தபோது ஆஸ்ட்டெக் மக்கள் நிறுவியிருந்த நகரத்தைக் கண்டு வியப்படைந்தான். நகரத்தில் அகலமான வீதிகளும், நீரோடைகளும், பிரமிடுகளும், கோயில்களும், தோட்டங்களும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன.

டால்ட்டெக் மக்கள் வழிபட்டு வந்த தெய்வங்களை ஆஸ்ட்டெக் மக்களும் வணங்கி வந்தனர். சில தெய்வங்களுக்கு நரபலியுங் கொடுத்தனர். ஆஸ்ட்டெக்குகள் நடத்தின விழாக்கள் குறிப்பிடத்தக்கவை. டெஸ்காப்லிபோகா (Tezcablipoca) என்ற ஆக்கவும் அழிக்கவும் வல்ல கடவுளுக்கு ஆஸ்ட்டெக்குகள் ஒவ்வோர் ஆண்டும் விழா நடத்தி வந்தனர். அச்சமயம் ஓர் அழகிய இளைஞனைக் கடவுளின் பிரதிநிதியாகத் தெரிந்தெடுப்பார்கள். அவனுக்கு ஒராண்டுக் காலம் கடவுளுக்குள்ள மரியாதையெல்லாம் செலுத்திவிட்டு, அவ்வாண்டு கடைசியில் அவனைப் பலியிட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு விழாவிற்கு வேறோர் அழகிய இளைஞனைத் தெரிந்தெடுப்பார்கள். தேவதையின் பிரதிநிதி எப்பொழுதும் இளமை மாறாமல் இருக்கவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

சைப் (Xipe) என்ற வளங்கொடுக்கும் தேவதைக்கும் நரபலி கொடுப்பது ஆஸ்ட்டெக்குகளின் வழக்கம். போரில் பிடிபட்ட கைதிகளே நரபலியிடப்பட்டனர். ஆஸ்ட்டெக் வீரர்கள் கைதிகளுடைய இதயங்களைப் பிடுங்கிப் பலிபீடத்தில் இட்டு, அவர்களுடைய தோல்களை யணிந்து விழாக் கொண்டாடினார்கள். விழாவிற்குப்பின் தோல்கள் நகரத்தின் வெளியே புதைக்கப்பட்டன.

ஆஸ்ட்டெக் மக்கள் மெக்சிகோ பிரதேசத்தில் ஆதிக்கஞ் செலுத்திய காலத்தில் கைத்தொழிலும் வாணிபமும் நன்றாக நடைபெற்றன. தங்கவேலை செய்பவர்கள், இறகு வேலை செய்பவர்கள், மட்பாண்டஞ் செய்வோர் முதலியவர்கள் சங்கங்கள் ஏற்படுத்தி, அவைகளில் மற்றவர்களைச் சேர்க்காமல் தங்கள் தொழிலின் தரம் கெடாமல் பாதுகாத்து வந்தனர். இந்தச் சங்கங்களின் வாயிலாக மெக்சிகோ செல்வம் மிகுந்த நாடாயிற்று.

ஆஸ்ட்டெக்குக்களுடைய எழுத்து, சித்திர எழுத்து வகையைச் சார்ந்தது. இவர்கள் வான நூலிலும் பயிற்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் மருத்துவச் சாலைகள் அமைத்திருந்தனர். இவர்கள் விளையாட்டுக்களில் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள். ஆஸ்ட்டெக் மக்களின் அரசியல் திட்டம் சிறந்ததென அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு சிறந்த சட்டதிட்டத்தை வகுத்து, அதற்குக் கட்டுப்பட்டு நாட்டுமக்கள் வாழ்ந்து வந்தனர். இசை, வானவியல், ஓவியம் முதலியன கற்பிப்பதற்குப் பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இப்போது ஆங்கிலத்தில் வழங்கி வரும் டொமேட்டோ, சாக்கலேட் முதலிய சொற்கள் ஆஸ்ட்டெக் மொழியிலிருந்து வந்தவை. எம். வீ. சு.


ஆஸ்ட்டென், ஜேன் (1775-1817) பிரபல ஆங்கில

ஜேன் ஆஸ்ட்டென்
உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.

நாவலாசிரியைகளுள் ஒருவர். சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து நல்ல நாவல் எழுதும் முறையைத் தோற்றுவித்தார். ஸ்காட், கோல்ரிட்ஜ் முதலியவர்களால் புகழப்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களுள் சில ஆணவமும் தப்பெண்ணமும் (Pride and Prejudice) எம்மா, மான்ஸ்பீல்டு பார்க் என்பனவாம்.


ஆஸ்ட்வால்டு (Ostwald 1853-1932) ஜெர்மானிய ரசாயன அறிஞர். ரீகா என்னும் நகரிற் பிறந்து பிற்காலத்தில் அங்குப் பேராசிரியரானார். இதன் பின் லைப்சிக் நகரில் பௌதிக, ரசாயனக்கழகத்தின் தலைவராக இருந்தார். தற்காலப் பௌதிக, ரசாயனத் துறையைத் தோற்று வித்தோருள் இவரும் ஒருவர் எனலாம். மின்சார ரசாயனத் துறையையும், கரைவுகளையும் இவர் விரிவாய் ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மனியில் நவச்சார ஆவியிலிருந்து நைட்ரிக அமிலத்தைப் பெறும் முறையைக் கண்டுபிடித்து வெடிமருந்து உற்பத்திக்கு உதவினார். பௌதிக ரசாயனத் துறையில் வழங்கும். சோதனை