பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

489

ஆஸ்திரேலியா

மானவை காங்கரு, வாலபி, லாம்பட், தாசியூரஸ் என்பவை. இங்குள்ள ஒப்போசங்களில் சில வகைகள் உடம்பின் இரு பக்கத்திலும் முன்பின் கால்களைச் சேர்த்துள்ள தோல் மடிப்புக்களின் உதவியால் மரத்துக்கு மரம் பறப்பதுபோலச் சறுக்கிச் செல்லும்.

மற்ற நிலப்பகுதிகளில் உள்ள பறவைகளேயன்றி, ஈமு, காசாவரி, கிண்ணாரப்பறவை (Lyre bird) என்பவைகளும் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றன. இவை மூன்றும் அங்குமாத்திரமே உண்டு. மேடுகட்டும் பறவைகள், லாரிகீட்டுகள், பலவகைக் கிளிகள் இங்கிருக்கின்றன. பெரிய மீன் கொத்தி அல்லது கூக்கபுரா (சிரிக்கும் பறவை) எனப்படுவதும் இங்குள்ளது.

ஊர்வனவற்றுள் பலவகை ஆமைகள் உண்டு. கிட்டத்தட்ட 400 வகைப் பல்லி, அரனை, ஓணான் உண்டு. பாம்புகளில் நூறுவகையுண்டு. சில, மலைப்பாம்பு மாதிரி 15 அடி நீளமுள்ளவை. நஞ்சுள்ளவை சிலவே. தவளைகளில் மரத்தவளைகள் அதிகம். ஒருவகைத் தவளை நிரம்பத் தண்ணீர் குடித்து உடம்பை ஊத வைத்துக்கொண்டு, சேற்றில் புதைந்து வறட்சிக் காலத்தைக் கழிக்கும். மீன்களில் சேற்றுமீன் சிராட்டொடஸ் (Ceratodus) என்பதற்கு நுரையீரல் உண்டு. நீர் வற்றிப்போனால் அல்லது கெட்டிருந்தால் இது காற்றைச் சுவாசிக்கும். வண்டு, எறும்பு முதலியவை நிரம்ப இருக்கின்றன.

இயற்கையாக அந்த நாட்டுக்கே உரிய விலங்குகள் பெரும்பாலும் அருகிப்போய்விட்டன. அவற்றுள் பல ஒழிந்தே போய்விட்டன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை மிகவும் பெருகிவிட்டன முயல் போன்றவை பெருகுவதற்கு இடையூறான காட்டு விலங்குகள் இந்தக் கண்டத்தில் இல்லையாதலால் அவை நிரம்பப் பெருகிப்போய் உழவுக்குக் கேடு விளைவிக்கின்றன.

மானிடவியல்: மானிடவியல் சம்பந்தமாக ஆஸ்திரேலியா என்பதில் ஆஸ்திரேலியாமட்டும் ஒரு பிரிவும், நியூகினி. மெலனீசியா மற்றொரு பிரிவும் ஆக இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள் தோற்றத்திலும் பண்பாட்டிலும் மற்றப் பிரிவு ஆதிக் குடிகளிலிருந்தும் வேறுபட்டவராவர். அவர்கள் பழுப்பு நிறமும், நடுத்தர உயரமும், மெல்லிய உறுப்புக்களும், குறுகிய தலையும், பின்சாய்ந்த நெற்றியும், பருத்த புருவ எலும்பு முகடும், விரிந்த மூக்கும், பள்ளமான மூக்கடியும், முன்னுக்கு நீண்ட தாடையும், விரிந்த வாயும், கறுத்த மயிரும் உடையவர்கள். மயிர் சுருண்டும் இருக்கும், சுருளாமலும் இருக்கும்; முகத்திலும் உடலிலும் அடர்ந்திருக்கும். நாட்டின் வறண்ட பகுதிகளில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு மயிர் கருமை குறைந்திருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலத்திலேயே இந்த மக்கள் உணவு தேடுவோராகவும், வேட்டையாடுவோராகவும் இருந்துளர். அதை அடி நிலையாகக் கொண்டவையே அவர்களுடைய பண்பாடும் சமூக அமைப்பும்.

நியூகினியிலும் மெலனீசியாவிலும் உள்ள ஆதிக்குடிகள் 15 இலட்சமாவார். அவர்கள் மிகுந்த வேறுபாடுடையவர். மயிர் தவிர ஏனைய உடல் தோற்றங்களில் ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளைப் போன்ற மக்கள் பெரும்பாலும் மேற்குப் பப்புவா (Papua) விலும், சிறிதளவு மெலனீசியாவிலும் காணப்படுகின்றனர். நியூகினியின் மேட்டு நிலங்களில் குள்ளர்களும் கிட்டத்தட்டக்குள்ளமானவர்களும் மிகுதியாகக் காணப்படுகிறார்கள். அவர்களுள் மேற்குப் பகுதியிலுள்ளவர்கள் நிறம் அவ்வளவு கறுப்பாக இராது. பப்புவாவின் கிழக்குக் கோடியிலும் அதன் அருகிலுள்ள தீவுகளிலும் மலேகூலா (Malekula) விலும் உள்ள மக்களிடையே குள்ளர்களின் தொகை மிகுதியாகவே காணப்படுகிறது. இந்தக் குள்ளமான மக்கள் அகன்ற மூக்கும் நடுத்தரமான தலையும் உடையவர். பப்புவர் என்று சொல்லப்படுவோர், அதாவது மெலனீசிய மொழி பேசாத மக்கள், பழுப்பு நிறமும், சுருண்ட மயிரும், நடுத்தர உயரம் முதல் அதிக உயரம்வரையுள்ள உயரமும், உயர்ந்த மூக்கும், நீண்ட தலையும், நேரானது முதல் பின் சாய்ந்தது வரையுள்ள நெற்றியும் உடையவர்கள். நியூகினியின் கீழ்க்கோடியில் பலதிறப்பட்டவர்கள் காணப்படுகிறார்கள். அதன் காரணம் ஓரளவு மெலனீசிய மக்கட் கலப்பாகும். அவர்கள் குள்ளர் முதல் நெடியர்வரையுள்ள உயரமுடையவராயும், நடுத்தரமான தலைமுதல் நீண்ட தலைவரையுள்ளவராயும், அகன்ற நாசி முதல் ஓடுங்கிய நாசிவரையுள்ள நாசியுடையவராயும், இளம் பழுப்பு முதல் கறுப்புவரையுள்ள நிறமும் உடையவர்களாயும் இருக்கின்றனர்.

அதேபோல் மெலனீசிய மக்களிடையிலும் வேறுபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. உடம்பின் நிறம் பெரும்பாலும் செம்பு நிறமாயிருக்கும்; கறுப்பாக இருப்பதுமுண்டு. மயிர் சுருண்டிருந்தாலும் அறல் போல அலையலையாகவு மிருப்பதுண்டு. சராசரி உயரம் நடுத்தரத்திலும் குறைந்தது. ஆயினும் சிலர் ஆறு அடி உயரமாகக்கூட இருப்பர். தலை பெரும்பாலும் நீண்டிருக்குமாயினும் சில பகுதியிலுள்ளவர்கள் அகன்ற தலை உடையவராகவும் இருப்பர். சப்பை மூக்குமுதல் கூரிய மூக்குவரை யுடையவராகவு மிருப்பர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதிக்குடிகள் தென் இந்தியாவிலுள்ள திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரையும், இலங்கையிலுள்ள வேடர்களையும், மலேயாசியாவிலுள்ள ஆஸ்திரலாயிடுகளைப் போன்ற சில குழுக்களையும் சேர்ந்தவர்கள் என்று கூறுவது வழக்கம். ஆஸ்திரலாயிடுகளைக் காக்கசாயிடு வகுப்பைச் சேர்ந்த ஆதிப் பிரிவினர் எனச் சிலர் எண்ணுகிறார்கள்.

நியூகினியிலும் மெலனீசியாவிலுமுள்ள மக்கள் நீக்ராயிடு மக்களினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்கள். இவர்களும் நீக்ராயிடுகளைப் போலவே தோன்றி,ஆப்பிரிக்காவிலிருந்து இந்தப் பகுதிக்குக் குடியேறியவர்களா யிருக்கலாம் என்று கருதப்படுகிறார்கள். ஆனால், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை யோடுகளிலிருந்தும், இக் காலத்துப் பாரம்பரிய இயல் ஆராய்ச்சிகளிலிருந்தும், பிதிகாந்திரபஸ் என்னும் குரங்குமனிதன் தோன்றிய பழைய அடிமரத்திலிருந்து இந்தப் பகுதிகளிலே இயற்கையிலேயே எழுந்த கிளைகளின் வேறுபாடுகளாயிருக்கலாம் இந்தச் சாதியினர் என்று தோன்றுகிறது. ஜாவாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பழைய கற்காலத்தில் வந்த வாட்ஜாக்குகள் (Wadjaks) இங்கு வந்தபின் தனித்து வாழ்ந்து பலவிதமான நிலைமைகளுக்கு உள்ளாகியபடியால் இந்த வேறுபாடுகள் உண்டாகி யிருக்கலாம்.

டாஸ்மானியர்கள் மெலனீசிய வகுப்பினரின் ஒரு கிளையாவர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்தார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமில்லை. மெலனீசியரில் ஆன்டாங், ஜாவா, திக்கோபியா, ரென்னெல் போன்ற தீவுகளில் குடியேறிய பாலினீசியரும் அடங்குவர்.

ஆஸ்திரேலிய ஆதிக் குடிகளின் பண்பாடு உணவு சேகரித்தல், வேட்டையாடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மிகுந்த வேறுபாடுகள் இல்லாததாகும். ஆனால் நியூகினி, மெலனீசியாவின்