பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

492

ஆஸ்திரேலியா

காலத்திலும், தொழிலாளிக்குப் பென்ஷன் கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலத்தில் பாதி அரசாங்கத்திற்குச் சொந்தம். லைசென்சு அல்லது ஒற்றிக்கு நிலத்தை வாங்கி, மக்கள் வேளாண்மை செய்கின்றனர். நாட்டில் கட்டாய ஆரம்பக்கல்வித் திட்டம் அமலிலிருக்கிறது. எம். வீ. சு.

அரசியல் அமைப்பு : ஆஸ்திரேலியாவிற்கு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் என்று பெயர். இது மேற்கு ஆஸ்திரேலியா, வடபிரதேசம், தென் ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா என்னும் ஆறு இராச்சியங்கள் சேர்ந்த ஒரு கூட்டாட்சி. இதன் தலைநகரமாகிய கான்பர்ரா ஒரு தனி இராச்சியம். டாஸ்மானியா தீவும் இக்காமன்வெல்த்தைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும்.

ஆஸ்திரேலியா பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் அடங்கிய ஒரு சுதந்திர நாடு. அதற்கென்று கூட்டாட்சி முறையில் அமைக்கப்பட்ட தனி அரசியலமைப்பு உண்டு. இது எழுதியிடப்பட்ட ஓர் அமைப்பாகும். ஆஸ்திரேலிய இராச்சியங்கள் 1901-ல் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டாட்சி ஐக்கியம் ஏற்படுத்திக்கொண்டன. கூட்டாட்சிக்கும் இராச்சியங்களுக்கும் தனித்தனி அதிகாரங்களிருப்பினும், கூட்டாட்சிக்கென்று வெளிப்படையாகக் குறிக்கப்பெறாத அதிகாரங்களெல்லாம் இராச்சியங்களைச் சார்ந்தவை. ஆயினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மத்திய அரசாங்கத்திற்குள்ள அதிகாரங்களைவிட ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் அதிக அதிகாரங்களை உடையது. மத்திய அரசாங்கம் பாங்கு, இன்ஷுரன்சு, மணம் முதலியவற்றையும் கவனிக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இவை இராச்சிய நிருவாக வரம்பிற்குட்பட்டவை. ஆஸ்திரேலியத் தேர்தல் சட்டத்தின் ஒரு முக்கியமான ஷரத்துப்படி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார். இக் கட்டாயம் 1925லிருந்து அமலிலிருக்கிறது.

சட்டசபை : ஆஸ்திரேலிய சட்டசபைக்குப் பார்லிமென்டு என்ற பெயர். கூட்டாட்சிப் பார்லிமென்டு. செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகள் கொண்டது. பிரதிநிதிகள் சபையில் செனெட்டில் இருப்பதைப்போல இருமடங்கு அங்கத்தினர்கள் உண்டு. வடபிரதேசத்திலிருந்து தேர்ந்தனுப்பப்படும் ஓர் அங்கத்தினர் மட்டும் விவாதத்தில் கலந்துகொள்ள முடியுமேயன்றி வாக்களிக்க முடியாது. செனெட்டிற்கு ஒவ்வோர் இராச்சியமும் பத்து அங்கத்தினர்களை அனுப்புகிறது. இப் பார்லிமென்டு ஆண்டிற்கொருமுறை கூடியே தீரவேண்டும். ஒவ்வொரு சட்டசபை அங்கத்தினரும் பிரிட்டிஷ் குடியாகவும் ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டு வசித்தவராகவும் இருக்கவேண்டும். ஆஸ்திரேலிய அரசியல் தலைவர், பிரிட்டிஷ் மன்னரால் நியமிக்கப்படும் ஒரு கவர்னர் ஜெனரல். இவர் மன்னருடைய பிரதிநிதியாக இருப்பார். சட்டசபை நிறைவேற்றும் சட்டங்களை நிருவாகம் செய்வார். இவருக்கு முக்கியமான சில விஷயங்களில் ஆலோசனை சொல்ல ஒரு நிருவாக சபை உண்டு. பிரதிநிதிகள் சபையில் உள்ள பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாயிருந்து மந்திரிசபை அமைக்கிறார். பிரதம மந்திரியும் அவர் பொறுக்கும் மந்திரிகளும் கீழ்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களாயிருக்கவேண்டும். மந்திரிகளுக்கு ஆலோசனை கூற அரசாங்கக் காரியதரிசிகளும், இலாகாத் தலைவர்களும் உளர். மந்திரி சபையிலுள்ள மந்திரிகள் எல்லோரும் கவர்னர் ஜெனரலின் நிருவாக சபை அங்கத்தினர்களாகவும் இருப்பர்.

ஆஸ்திரேலியத் தலைநகரான கான்பெர்ரா நகரம், தலைநகரப் பிரதேசமான 940 சதுர மைல் பரப்பின் மத்தியில் இருக்கிறது. இப்பிரதேசம் கூட்டாட்சியால் நிருவகிக்கப்படுகிறது. கான்பெர்ரா நியூ சவுத் வேல்ஸ் இராச்சியத்தின் மத்தியில் அமைந்துள்ளதாயினும் அவ்விராச்சிய ஆட்சிக்கு இந்நகர நிருவாகத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை.

கூட்டாட்சி அரசாங்கத்திற்கு நிதி, நாணயம், பாங்கு, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தபால், தந்தி, மக்கள் தொகைக் கணக்கு, பதிப்புரிமை, ரெயில்வே, சமூக நலன்கள் முதலிய இலாகாக்களின் நிருவாகப் பொறுப்பு இருக்கிறது. பல மசோதாக்களைப் பிரேரேபிப்பதற்குப் பிரதிநிதிகள் சபைக்கே உரிமையுண்டு.

இராச்சியச் சட்டமும் கூட்டாட்சிச் சட்டமும் முரண்பட்டால் பிந்தியதே நிலைக்கும். இவ்வரசியல் சட்டத்தை மாற்றவும், புதிய இராச்சியங்கள் ஆக்கவும் வழியுண்டு. வாக்காளர் தொகுதியின் பெரும்பாலோர் சம்மதமின்றி அரசியல் சட்டத்தை மாற்ற முடியாது. லிபரல் கட்சி, ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சி ஆகியவை முக்கியமான கட்சிகள்.

இராச்சிய அரசாங்கம் : ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ஒரு தனி அரசியல் அமைப்பு உண்டு. இவை பெரும்பாலும் கூட்டாட்சி அரசாங்க முறையைப் பின்பற்றியே உள்ளன. இராச்சிய அரசியல் தலைவருக்குக் கவர்னர் என்பது பெயர். குவீன்ஸ்லாந்தில் தவிர ஏனைய இராச்சியங்களில் இரு சபைகளுள்ள சட்டசபை உண்டு. குவீன்ஸ்லாந்தில் மேல்சபை 1922-ல் நீக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், மருத்துவச்சாலைகள், விவசாயம், காடுகள், சாலைகள் முதலிய விவகாரங்களை இராச்சிய அரசாங்கமே கவனிக்கிறது.

நீதி நிருவாகம்: ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் (Federal High Court) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) அதிகாரங்கள் முழுவதையும் நிருவகிக்கிறது. இதில் தலைமை நீதிபதியும் ஆறு நீதிபதிகளும் உளர். இவ்வுயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களே முடிவானவை. இம்மன்றமோ அல்லது பிரிட்டிஷ் அரசரோ அனுமதித்தால் இங்கிலாந்திலுள்ள பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் உண்டு. கூட்டாட்சி இராச்சிய நீதிமன்றங்களைத் தவிர, மத்தியஸ்தக் கோர்ட்டுக்களும் சமாதானக் கோர்ட்டுக்களும் உள. இவை தொழிலாளிகள் தகராறுகளையும் வழக்குக்களையும் விசாரிக்கின்றன. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திற்கு உடன்படிக்கைகள், மத்திய அரசாங்கத்திற்கும் இராச்சியங்களுக்கும் இடையே ஏற்படும் வழக்குக்கள் முதலியவற்றைப்பற்றி விசாரிக்க அசல் அதிகாரமுண்டு. உயர் நீதிமன்றத்தின் அசல் அதிகாரத் தீர்ப்புக்களை அப்பீலில் ஏற்றுக்கொள்ளும் உரிமையும் அக் கோர்ட்டிற்கே உண்டு.

தல அரசாங்கம் : தல ஆட்சி சம்பந்தமான சட்டங்களை யியற்ற இராச்சிய சட்டசபைகளுக்கே அதிகாரம் உண்டு; ஆயினும் ஆஸ்திரேலியா முழுவதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான தல ஆட்சி நடைபெறுகிறது. தல ஆட்சிகள் அதிகாரத்தில் சாலைகள், பாலங்கட்டுதல், தண்ணீர் வசதி, டிராம் வசதி, பஸ் வசதி, மருத்துவச்சாலைகள் முதலியவற்றின் நிருவாகம் அடங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்டர்மன், அங்கத்தினர்கள் முதலியவர்களால் நகராட்சி நடத்தப்பெறுகிறது. சில இராச்சியங்களில் பல தல ஆட்-