பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்கேரி நாயக்கர்கள்

496

இக்பால்

சதாசிவ நாயக்கர் என்றும் அழைக்கப் பெற்றார். இவர் கொஞ்ச காலந்தான் ஆண்டார். இவர் காலத்தில் தலைநகர் கெ-ளெ-தியிலிருந்து இக்கேரிக்கு மாற்றப்பட்டது. இவருக்குப் பிறகு சதாசிவ நாயக்கருடைய குமாரர்களான தொட்ட சங்கண்ண நாயக்கரும், சிக்க சங்கண்ண நாயக்கரும் ஆண்டனர்.

சிக்க சங்கண்ண நாயக்கர் பிஜாப்பூர் சேனாதிபதியான மஞ்ஜுலகானைக் தோற்கடித்தார். கேருசொப்பாவில் ஆண்ட பைரதேவியை வென்றார். இவர் இக்கேரியில் புதிய நகர் ஒன்றையும் அரண்மனையையும் நிறுவினார்.

இவருக்குப் பிறகு இவருடைய தமயனாரின் மகனான I -ம் வேங்கடப்ப நாயக்கர் பட்டம் பெற்றார் (1582-1629). இவரே இவ் வமிசத்தில் புகழ் பெற்ற மன்னர். பட்டப் போட்டியாலும், உள்நாட்டுக் கலகத்தாலும் விஜயநகர சாம்ராச்சியம் 1616-ல் சீர்குலைய ஆரம்பித்தது. ஆகவே இவ்வரசர் சுயேச்சை பெற்றார். போர்ச்சுக்கேசியர்கள் இவருடைய நட்பை விரும்பினர். 1623-ல் இத்தாலி தேசத்துப் பீட்ரோ டெல்லா வாலே என்ற யாத்திரிகர் இவருடைய ஊருக்கு வந்ததாகக் குறிப்பு உளது.

இவருக்குப் பிறகு இவருடைய பேரரான வீரபத்திரர் பட்டம் பெற்றார் (1630-45). 1639-ல் இவர் பிதுநூருக்குத் தலைநகரை மாற்றினார். இவருக்குப் பிறகு பட்டம்பெற்று 1645-60 வரை ஆண்ட சிவப்ப நாயக்கர் விஜயநகர சக்கரவர்த்தியான மூன்றாம் ஸ்ரீரங்க தேவரின் நண்பர். அவருக்காக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்தார்.

சிவப்ப நாயக்கருக்குப் பிறகு II-ம் வேங்கடப்ப நாயக்கரும், II-ம் பத்திரப்ப நாயக்கரும் ஆண்ட பிறகு I-ம் சோமசேகரர் பட்டம் பெற்றார் (1663-71). இவர் காலத்தில் இவருடைய துறைமுகப்பட்டினமான பார்சிலோர் (Barcelor) கொள்ளை அடிக்கப்பட்டது (1665). 1671-ல் நாட்டிலுள்ள பிரபுக்கள் சோமசேகர நாயக்கரைக் கொலை செய்தார்கள். இவருடைய மனைவியான சென்னம்மாஜி 1697 வரை இராச்சியத்தை ஆண்டார். இக்காலத்தில் மகாராஷ்டிரர்கள் இந்த நாட்டின்மீது படையெடுத்துச் சௌத் வரியை வசூல் செய்தார்கள். சென்னம்மாஜியினுடைய சுவீகாரப் பிள்ளையான பசப்பர் பட்டம் பெற்றார் (1697-1714). இவர் ஒரு கல்விமான்; வடமொழியில் சிவதத்துவ ரத்தினாகரம் என்ற நூலை எழுதியுள்ளார். 1763-ல் ஐதர் அலி இந்நாட்டை வென்று இவ் வமிசத்தையும் இராச்சியத்தையும் அழித்தார். எஸ். ஆர். பா.


இக்தியார்னிஸ் (Ichthyornis)

இக்தியார்னிஸ்
உதவி:மாக்மில்லன் கம்பெனி விமிடேட், லண்டன்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவகைப் பறவை. நன்றாகப் பறக்கக் கூடியதாக இருந்திருக்கவேண்டும். இதன் தாடையில் பற்கள் தனித்தனிக் குழிகளில் இருந்தன. இப்போதுள்ள பறவைகளுக்கிருப்பது போல மார்பெலும்பு படகு வடிவுள்ளது. அதன் நடுவில் ஏரா (Keel) நன்றாக வளர்ந்திருந்தது. சிறகெலும்பும் பறப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. இது இப்போதுள்ள புறாக்களைப்போல இருந்திருக்கலாம். வட அமெரிக்காவில் பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன் கிரிட்டேஷஸ் காலத்தில் இது இருந்தது.


இக்தியோசாரஸ் (Ich-thyosaurus) பத்துப்பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த கடல்வாழ் ஊர்வன. மீசொசோயிக் காலத்தைச் சேர்ந்தவை. இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் ஏறக்குறைய முழுக் கங்காளங்களே அகப்பட்டிருக்கின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா, ஆஸ்திரேலியா முதலிய இடங்களில் வெகுதூரம் பரவியிருந்தன. கீழ்க் கிரிட்டேஷஸ் காலத்தில் இந்தியாவிலும் இது அகப்படுகிறது. இவை 3 அடி முதல் 30, 40அடி வரையில் இருக்கின்றன. தரையிலோ சதுப்பு நிலச் சேற்றிலோ வாழ்ந்திருந்த ஊர்வனவற்றில் ஒரு கிளை கடலுள்சென்று, திமிங்கிலம்போல வாழத்தொடங்கி இக்தியோசாரஸ் ஆயிருக்கலாம். இவற்றின் தலை பெரியது. முகம் நீளம். கண்கள் பெரியவை. கண்களைச் சுற்றி ஓடுபோலடுக்கிய தகடுகள் உண்டு. பற்கள் மிகப்பல. ஒரு வாயில் 400 பற்கள்கூட எண்ணியிருக்கிறார்கள். இக்தியோசாரஸ் காற்றைச் சுவாசித்தது, மீன் முதலியவற்றைத் தின்றது, குட்டி போட்டது எனத்தெரிகிறது. இதன் உடம்பு திமிங்கிலம் அல்லது மீன்போல வடிவமுள்ளது. நான்கு கால்களும் உருவம் மாறி நீந்துவதற்கு ஏற்ற துடுப்புப்போல இருந்தன. வாலிலும் முதுகிலும் செங்குத்தான வேறு துடுப்புக்கள் இருந்தன. நீரில் நீந்தி வாழ்வதற்கேற்ற வடிவம் மீனிலும் இக்தியோசாரஸிலும் திமிங்கிலத்திலும் உண்டாயிருப்பது வெவ்வேறு வகையுயிர்கள் ஒரேவகைச் சூழ்நிலைக்கும் வாழ்க்கைக்கும் உட்பட்டால், அதற்கு ஏற்றவாறு ஒரேவிதமாக மாறுதலடைதல் உண்டு என்னும் ஒருங்கு பரிணாமத்தைக்(Convergent Evolution) காட்டுகிறது.


இக்பால், சர் முகம்மது (1875-1938)

இக்பால்

முதலில் உருதுவிலும் பின்னர்ப் பாரசீக மொழியிலும் சிறந்த கவிகள் செய்தவர். சீயால்கோட்டில் பிறந்து, லாகூரில் கல்விகற்று, 1905 வரை