பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்வெஸ்டிரியர்கள்

497

இங்கிலாந்து

ஆசிரியராயிருந்து பின்னர் பாரிஸ்டரானார். ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரசீகத் தத்துவ சாஸ்திரத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார். இவருடைய தேசபக்திப் பாடல்களும் மதப் பாடல்களும் போற்றப்படுகின்றன.


இக்வெஸ்டிரியர்கள்: ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களையும் பிரபு மரபினரையும் குறித்தது. டி. கே. வெ.


இக்னியூமன் ஈ (Ichneumon fly) ஒருவகைப் பூச்சி. எறும்பு,குளவி, தேனீ முதலியவற்றிற்கு உறவானது. இதில் சுமார் 6,000 இனங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் உலகில் எல்லாப் பாகங்களிலும்இவை காணப்படுகின்றன. வண்ணாத்திப்பூச்சி முதலிய செதிற்சிறகி (Lepidoptera)களின் லார்வா நிலையாகிய புழுவின் உடலிலும், இன்னும் மற்ற வகைப் பூச்சிகளின் லார்வாக்களின் உடலுக்குள்ளும் தாய் இக்னியூமன் ஈ முட்டையிட்டுவிடுகிறது. அந்த முட்டைகளிலிருந்து பொரிக்கும் இக்னியூமன் லார்வா அந்தப் புழுக்களின் திசுக்களைத் தின்று வளர்கின்றது. சில பூச்சி லார்வாக்களின் உடம்பிலிருந்து சிறிய கூட்டுப்புழுக் (Cocoon) கூடுகள் தோன்றுவதையும், அந்தப் புழுக்கள் செத்துப்போவதையும் காணலாம். இந்தக் கூடுகளிலிருந்து இக்னியூமன் ஈக்கள் வெளிவரும். இவை இவ்வாறு பலவகைப் பூச்சிகளின் லார்வாக்களை ஆயிரக்கணக்கில் அழித்துவிடுகின்றன. சிலந்திகளையும் இவ்வாறு அழிக்கின்றன. ஒருவகை இக்னியூமன் ஈ நீரினுள் முழுகிப்போய் நீருக்குள் வாழும் சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களுள் முட்டையிடும். சிலவகை இக்னியூமன் ஈக்களுக்குச் சிறகுகள் இல்லை. அவை பார்வைக்கு எறும்பு போலவே தோன்றும்.


இகுவானா (Iguana) அயன அமெரிக்காவிலுள்ள ஊர்வன. தோற்றத்தில் ஓணான் போன்றவை. இவற்றில் 300க்குமேற்பட்ட இனங்கள் உண்டு. காலிபோர்னியா முதல் பட்ட கோனியா வரையில் அகப்படும். இவை பெரும்பாலும் மரத்தில் வசிக்கும். சில தரையில் பாலைவன மணலிலும் பாறைகளிலும் வாழும். இவற்றுள் சில வகைகள் சில அங்குல நீளமும், சில வகைகள் பல அடி நீளமுமிருக்கும். பெரும்பாலும் பச்சை நிறமுள்ளவை. மோவாய்க்குக் கீழே பசுவுக்குள்ள அலை தாடி போல ஒரு தோல்மடிப்பு இருக்கும். நடுமுதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். நடு முதுகில் செதில்கள் உயர்ந்திருக்கும். இகுவானா ஓணானைப்போல வெயிலில் காயும். அந்த நாட்டு மக்கள் கண்ணி வைத்து, இதன் தலையில் மாட்டி, இதைப் பிடித்து உண்பார்கள்.


இகுவானொடான் (Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை. 15-30 அடி நீளமுள்ளது.

இகுவானொடான்


உதவி : மாக்மில்லன் கம்பெனி லிமிடெட், லண்டன்.

சுமார் 12 கோடிஆண்டுகளுக்கு முன் ஜுராசிக், கீழ்க்கிரிட்டேஷஸ் காலத்துப் பாறைகளில் பாசில்கள் அகப்படும். பருத்த உடம்பும் மிகப் பலமான நீண்டவாலும் உள்ளது. முன்கால் சிறியது; தழை, கிளை முதலியவற்றைப் பற்ற ஏற்றது எனத் தெரிகிறது. இரண்டு தாடையிலும் பல்லில்லை. முகம் பறவை அலகுபோல இருந்திருக்கலாம். எலும்புகள் உள்ளே தொளையுள்ளவை. காங்கருபோலப் பின்னிரண்டு கால்களையும் வாலையும் முக்காலிபோல உபயோகித்திருக்கலாம். இங்கிலாந்திலும் பெல்ஜியத்திலும் ஐரோப்பாவின் மற்றப் பாகங்களிலும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தது.


இங்கிலாந்து ஸ்காட்லாந்து, வேல்ஸ், இங்கிலாந்து மூன்றும் அடங்கிய கிரேட்பிரிட்டன் என்னும் தீவில் தென் பகுதியிலுள்ளது. கி.பி. 400-ல் இந்நாட்டை ஜெர்மனியிலிருந்து படையெடுத்த ‘ஆங்கில்’ சாதியினரின் பெயரைக்கொண்டு இங்கிலாந்து என்று வழங்குகிறது. இந்நாட்டு மக்கள் கைத்தொழிலிலும்,முக்கியமாகக் கப்பல் கட்டுவதிலும், வாணிபத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். பார்லிமென்ட் அரசாட்சிமுறை, தொழிற்புரட்சி, ஜனநாயக ஸ்தாபனங்கள் முதலிய பல தற்காலத் தோற்றங்கள் எல்லாம் இச்சிறு நாட்டிலேயே தோன்றியவை. இந்நாட்டவர்கள் உலகில் இதுவரை வரலாறு கண்டிராத பெரிய சாம்ராச்சியத்தை ஆண்டவர்கள். உலக வாணிபத்திற் பெரும்பகுதி இவர்களது தலைநகரான லண்டன் நகரத்தின் மூலமே இன்றைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நாட்டு மொழியான ஆங்கிலமே முக்கிய உலக மொழியாக உள்ளது. ஆல்பிரடு, ஷேக்ஸ்பியர், நியூட்டன் முதலிய உலகப் புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த நாடு இது. இங்கு இரும்பும்கரியும் ஏராளமாகக் கிடைப்பது இந்நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். முதலில் ரோமானியர்களும், பிறகு டேனர்களும், பிறகு நார்மானியர்களும் இந்நாட்டை வென்று ஆண்டனர். இவர்களைச் சேர்ந்த மக்களே அமெரிக்க ஐக்கிய நாடுகள், கானடா, நியூஜீலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற் சென்று, தங்கள் மொழி, அரசியல் மரபு முதலியவற்றைப் பரப்பியுள்ளனர். இந்நாட்டவர்கள் இருநூறு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வந்தனர். பரப்பு: 50,874 ச. மைல்; மக்: 4,11,47,938 (1951). பூகோளம், வரலாறு, அரசியல் வரலாறு முதலான கட்டுரைகளுக்கு, ‘பிரிட்டன், கிரேட்’ பார்க்க.