பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

498

இங்கிலாந்து


இங்கிலாந்துப் பொருளாதார வரலாறு: இங்கிலாந்தில் கெல்ட் வகையினர் கி.மு.600-ல் குடியேறி, ஆடுமாடு மேய்ப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்டு, நாட்டின் கீழ்ப்பகுதிகளில் விவசாயத்தையும் நடத்தி வந்தார்கள். ரோமானியர்கள் ஜூலியஸ் சீசரின் தலைமையில் இங்கிலாந்தை வென்று, கி.மு.55 லிருந்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்து வந்தார்கள். அக்காலத்தில் ரோமானியர்கள் இங்கிலாந்தைப் பொருளாதாரத்துறையில் உயர்த்துவதற்கான முறைகளைக் கையாளாவிடினும், போக்குவரவு சாதனங்களைப் பெருக்குவதற்காகப் பெருவழிகளை ஏற்படுத்தினார்கள். இவை ரோமானியர்கள் நாட்டை விட்டு அகன்றதும் சிறிது சிறிதாக மறையத் தலைப்பட்டன.

ரோமானியர்கள் நாட்டை விட்டுச் சென்ற பிறகு ஆங்கிலோ-சாக்சன் சாதியினர் வந்து தென்பகுதியில் குடியேறின காலத்தில் (450-600) இங்கிலாந்தில் விவசாயம் வளர்ச்சி யடைந்தது.

இங்கிலாந்து

அதே காலத்தில் டேனர்கள் (Danes) என்ற வகையினர் ஸ்காண்டினேவியா பிரதேசத்திலிருந்து வந்து வடபகுதியில் குடியேறினார்கள். ஆங்கிலேய அரசரான ஆல்பிரடு பல சமயங்களில் டேனர்களை எதிர்த்து நின்று ஆங்கிலோ-சாக்சன் பிரதேசங்களைக் காப்பாற்றினார். பிரான்ஸ் தேசத்திலுள்ள நார்மண்டி தேசப்பிரபு வில்லியம் என்பவர் ஆங்கிலோ-சாக்சன் தலைவர்களை ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் என்னும் இடத்தில் முறியடித்து, I -ம் வில்லியம் என்ற பெயருடன் இங்கிலாந்துக்கு அரசரானார்.

இவர் அரசரான (ஆ. கா. 1066-1087) நாட்டின் பல பகுதிகளின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காக டூம்ஸ்டே புக் (Doomsday Book) என்ற புள்ளி விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜுகளைத் தயார் செய்தார். அந்தப் புத்தகத்திலிருந்தே இங்கிலாந்தின் வாழ்க்கை விவரங்களைப் பற்றியும், பொருளாதார நிலையைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. இங்கிலாந்தின் வாழ்க்கை நிலையில் 17ஆம் நூற்றாண்டு வரையில் யாதொரு புரட்சிகரமான மாறுதல்களும் தென்படவில்லையாதலால், டூம்ஸ்டே புக்கின் ஆதாரத்தைக் கொண்டு நாம் ஒருவாறு இடைக்காலத்திய (11-17ஆம் நூற்றாண்டு வரை) பொருளாதார நிலையையும் வளர்ச்சியையும் நிருணயிக்க முடிகின்றது.

I - ம் வில்லியம் தன்னோடு வந்த பிரபுக்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் வெகுமதிகள் கொடுக்க வேண்டி, நிலங்களைப் பழைய குடிகளிடமிருந்து பறிக்கத் தலைப்பட்டான். அவனை எதிர்த்து நின்ற ஆங்கிலோ-சாக்சன் பிரபுக்களின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. மேலும் நாட்டின் ஒவ்வோர் அங்குல நிலமும் அரசனுக்குச் சொந்தமென்று பறையறிவிக்கப்பட்டது. இவ்வாறு கவரப்பட்ட நிலங்களைப் பலருக்குச் சில நிபந்தனைகளின் பேரில் அரசன் வழங்கினான். நிலங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தினர்க்கும் போரில் சேவை புரிந்தவர்க்கும் கொடுக்கப்பட்டன. அரசனிடமிருந்து நிலத்தைப் பெறும் பாரன் (Baron) அல்லது லார்டு (Lord) என்ற பிரபுக்களுக்கு விதித்த நிபந்தனைகளை ஒன்று சேர்த்துப் படைமானிய முறை (Feudal-ism) என்று சொல்வர். படைமானிய முறையின் முக்கிய அமிசங்களாவன: 1. ஒவ்வொரு பாரனும் பெற்ற நிலத்திற்கு ஈடாக யுத்த காலத்தில் சில போர் வீரர்களைக் கொடுத்து உதவ வேண்டும். 2. சில சமயங்களில் அரசனுக்குப் பணமும் கொடுக்க வேண்டும்.

அரசனால் பாரனுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் சில உபயோகமற்ற நிலங்களாகவும், சில காடடர்ந்த பிரதேசங்களாகவும், சில புல் நிறைந்த மேய்ச்சல் வெளிகளாகவும், சில சாகுபடிக்குத் தகுந்த வளமான நிலங்களாகவும் இருந்தன. சாகுபடிக்கான நிலத்தைப் பாரனின் சொந்த உபயோகத்திற்காக உள்ள பிரதேசம் (Demesne lands) என்றும், சேவைக்கு ஈடாகக் கொடுக்கப்பட்ட நிலமென்றும் பிரிக்கலாம் (Land under villeinage).

பாரனுக்கு ஏகபோக உரிமையுள்ள பிரதேசங்களைச் சாகுபடி செய்வதற்கு விலன் (Villeins), காட்டர் (Cottar), பார்டர் (Bordar) என்ற பண்ணையாட்களுக்கு நிலப்பகுதிகள் கொடுக்கப்பட்டன. விலன் 30 ஏக்கர் நிலமும், 2 உழவு மிருகங்களும் வைத்திருந்தான். காட்டரும் பார்டரும், விலனுக்கு அடுத்தபடி நிலப்பகுதிகளையுடையவர்கள். அவர்கள் அப்பகுதிகளுக்கு ஈடாகப் பாரனுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. அவ்விதக் கடமைகளில் சில பின்வருமாறு :

உழைப்பு : 1. விலன் ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் பாரனது தனிப்பட்ட நிலத்தில் வேலை செய்ய வேண்டும். 2. விதைக்கும் காலத்திலும் அறுவடைக் காலத்திலும் ஒரு நாள் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.

பணம் செலுத்தல்: 1. தலைவனுடைய முதல் மகன் வயதுக்கு வரும்போதும், தலைவனுடைய முதல் மகளுக்கு மணம் ஆகும்போதும் விலன் இறந்தபிறரு அவன் மகன் வாரிசாக வரும்போதும் தலைவனுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். 2. நிலத்துக்கு வாரிசுடைய விலன் இளம் பிராயமாக இருந்தால் தலைவனே அந்நிலத்தைப் பரிபாலித்து அதிலுள்ள வருமானத்தை அடையலாம். 3. விலன் வாரிசு இல்லாமல் இறந்தால், அவன் நிலத்தைத் தலைவன் தனதாக்கிக் கொள்ளலாம். அல்லது வேறு ஒருவனுக்குப் பணத்திற்காகவோ, மற்ற இலாபத்திற்காகவோ கொடுக்கலாம். 4. தலைவனுடைய ஆலையில் தானியங்களை மாவாக்கிக் கொள்ளுவதற்கும், காடுகளில் மரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கும், குளங்களில் மீன் பிடித்துக் கொள்வதற்கும், தலைவனுக்குச் சில கட்டணங்கள் செலுத்தவேண்டும்.

பண்டம் செலுத்தல்: கிறிஸ்துமஸ் நாளில் கோழியும், ஈஸ்டர் காலத்தில் முட்டையும், மார்ட்டின்மாஸ்