பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகழி

20

அகஸ்டஸ்

வெட்டி மேட்டிற்குக் கொண்டுவர இந்த எந்திரம் பயனாகிறது. இது தூபிகள் போன்ற இரு வலிவான கம்பங்களையுடையது. ஒரு கம்பம் மேட்டிலும், மற்றொன்று பள்ளத்திலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த இரண்டு கம்பங்களும் கம்பி வடங்களால் இனைக்கப்படும். இவ்வடத்தின்மேல் எஃகுப் பற்களையுடைய ஒரு தொட்டி மேலும், கீழும் செல்லுமாறு அமைக்கப்படுகிறது. இதொட்டியானது பள்ளதிலுள்ள மண்ணை வெட்டி நிரப்பிக்கொண்டு வடத்தினால் இழுக்கப்பட்டு மேட்டில் வந்து மண்ணைக் கொட்டும். பிறகு இத்தொட்டியானது புவியின் கவர்ச்சியால் தானே பள்ளத்திற்குச் செல்லும். குளம் வெட்டுவதற்கு இது மிக ஏற்றது. பார்க்க: தகர் எந்திரம். ஏ. ஸ்ரீ.

அகழி என்பது அரசர்கள் தங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கட்டிகொள்ளும் கோட்டையைச் சுற்றிச் சுவரை அடுத்து வெளிப்புறத்தே அகழப்படும் பள்ளமாகும். இதில் ஆழமாக நீர் நிறைந்திருக்கும்.

அரசர்கள் தங்கள் கோட்டையின் மதிற்சுவரை ஏணி வைத்து ஏற முடியாததாகவும் புறத்திருந்து அகழ முடியாததாகவும், அகதுள்ளோர் நின்று போர் புரிவதற்கு ஏற்ற அகலமுடையதாகவும், தொலை செய்ய முடியாததாகவும், பொறிகளால் அணுக முடியாததாகவும் அமைப்பது வழக்கம். பகைவர் பொறிகள் அணுக இயலாதிருக்கும் பொருட்டு நீரரன், நிலவரன், மலையரன், காட்டரன் என்று நான்கு அரண்களைத் தங்கள் கோட்டையைச் சுற்றி அமைத்துகொள்வர் என்று திருக்குறள் கூறுகின்றது. அதையே ஜல துர்க்கம், ஸ்தல துர்க்கம், பர்வத துர்க்கம், வன துர்க்கம் என்று மனு ஸ்மிர்தி கூறுகின்றது.

இந்த நான்கு துணை அரண்களுள் நீரரணே அகழியாகும். அதில் நீர் நிறைத்து முதலைகள் போன்ற கொடிய பிராணிகளையும் ஏராளமாக இட்டு வைப்பார்கள் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.

கி.மூ. நான்காம் நூற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மன்னனுடைய தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தின் அகழி 600 அடி அகலமும் 42 அடி ஆழமும் உடையதாக இருந்ததென்று மெகாஸ்தனீஸ் கூறுகிறார். அத்துணை அகலமுடையதாக இருந்ததால் அக்காலத்து அகழிகள் கடல்போல் தோன்றும் என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது.

ஐரோப்பாக் கண்டதிலும் இத்தகைய அகழிகள் ரோமானியர் கால முதல் இருந்துவந்திருக்கின்றன. ஆயினும் படைமானியப் பிரபுக்கள் தோன்றிய காலத்திலேயே கோட்டைகளும் அகழிகளும் ஏராளமாகப் பெருகலாகின. முதலில் தங்கள் இருப்பிடத்தைச்சுற்றி மண்ணைத் தோண்டிப்போட்டுச் சுவரை எழுப்பினர். பின்னர் சுவரை இட்டிகையாலும் கருகல்லாலும் கட்டினர். அதன் பின்னர் இரண்டு சுவர்கள் எழுப்பி இடையில் மண்ணைப்போட்டு நிரப்பி மதிற்சுவர் அமைத்தனர். ஆயினும் வெடிமருந்து செய்ய ஆரம்பித்துப் பீரங்கி குண்டுகள் தயாரானதும் கோட்டை கொத்தளங்கள் பயனிலவாய்விட்டன. இப்போது போர் நிகழும் காலத்தில் பகைவர், சேனையை விரைவில் தாக்க வந்துவிடாமல் தடுக்கும்பொருட்டுத் தாற்காலிகமாகக் கோட்டைகள் கட்டுவதுண்டு, ஆனால் அகழி வெட்டுவது கிடையாது.

அகன் வசுக்கள் எண்மரில் ஒருவன். இவன் குமாரன் ஜ்யோதி. இவனுக்கு அபச்செவன் என்றும் பெயர்.

அகன்காகுவா : 1.தென் அமெரிக்காவிலிருக்கும் சிலி நாட்டின் இடைபகுதியிலுள்ள ஒரு மாகாணம். இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடம். ஆயினும் இங்கு மழை மிகக் குறைவாகவே பெய்கிறது. இங்குள்ள பள்ளத்தாக்குக்கள் செழிப்பானவை. திராட்சை முதலிய பழங்களும், காய்கறிகளும் உற்பத்தியாகின்றன.

2. இதே பெயருள்ள அவிந்த எரிமலை சிலிக்கும் அர்ஜெண்டீனாவிற்கும் இடையே ஆண்டீஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது. மேற்கு அர்த்தகோனத்திலேயே இதுதான் மிக உயரமான சிகரம் (23,080 அடி).

அகன்ற கழிமுகம் (Estuary): ஆறு கடலோடு கலக்குமிடம். இங்கு ஆற்று நீர் கொண்டுவரும் வண்டல் தங்கி முகத்துவாரத்தை அடைக்காமல் கடலிற்

கலந்துவிடும். அகன்ற கழிமுகங்கள் நல்ல துறைமுகப் பட்டினங்கள் அமைவதற்கு ஏற்ற இடங்கள். உதாரணமாகத் தேம்ஸ் கழிமுகத்தில் லண்டனும், தென் அமெரிக்கவிலுள்ள பிளெட் நதிக் கழிமுகத்தில் போனஸ் அயர்ஸும் அமைந்திருப்பதைக் கூறலாம்.

அகஸ்டஸ் (கி.மு.63-கி.பி.14): ரோமாபுரியின் முதல் பேரரசனான அகஸ்டஸின் உண்மைப் பெயர் அக்டேவியஸ் என்பது. இவன் ஜூலியஸ் சீசரின் உடன் பிறந்தவளின் மகளுடைய மகன். சீசர் இவனுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் பயிற்சியளித்தார். சீசர் இறக்கும்போது அக்டேவியாஸுக்கு 19 வயதுதான். ஆயினும் ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான மனமும் படைத்த அக்டவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வரலானான். சீசரின் தத்து மகனும் ஆனான். கி.மு.43-ல் ஆன்டனி, லெபிடஸ் என்னுமிருதலைவர்களுடன் அக்டவியாஸ் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களுக்குள் ரோமானிய சாம்ராச்சிய அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். ஆன்டனி கிழக்குப் பிரதேசத்தில் பகைவர்களுடன் போராடிக் கொண்டிருக்கையில் இத்தாலியிலேயே யிருந்த அக்டேவியஸ் தன நிலையை உறுதியாக்கிக் கொண்டான். லெபிடஸ் பதவியை விட்டு விலகிக்கொண்டான் (கி.மு.30). அக்டேவியஸ் ஆன்டனியுடன் போரிட்டு அவனை அக்டியும் போரில் வென்றான் (கி.மு.31). கி.மு.27 முதல் அக்டேவியஸ் ரோமானிய சாம்ராச்சியத்தின் தனி அதிகாரியானான். அக்ஸ்டஸ் என்னும் பட்டப்-