பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

503

இங்கிலாந்து

சொல்ல ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு, அதுவும் நீண்டதொரு பட்டியலைத் தயாரித்தது. சிறப்பாக இறக்குமதியாகும் உணவுப் பொருள்களின் மீதும் கச்சாப் பொருள்களின் மீதும் வரி விதிக்கப்பட்டது. இவ்விதமாகப் பிரிட்டன் 1846-ல் ஆரம்பித்த எதேச்சை வாணிபத்தை உதறித் தள்ளிக் காப்பு வரி உள்ள வியாபார முறையை ஏற்றுக்கொண்டது.

பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில் வியாபாரக் கொள்கைகளை மேற்கொண்டும் அமல் செய்தும் வந்தது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு சாம்ராச்சிய ஆதரவு என்ற கொள்கை பரவத் தலைப்பட்டது. 1932-ல் ஆட்டவாஎன்ற இடத்தில் நடந்த சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் எவ்வாறு சாம்ராச்சியப் பொருள்களுக்குச் சலுகை காட்டப்பட வேண்டும் என்ற விவரங்கள் தீர்மானிக்கப்பட்டன.

தொழிற்சாலைச் சட்டம் : தொழிற்புரட்சி ஏற்பட்ட காலமுதல் தொழிலாளிகள் திருப்தியற்றும் கலக்கமடைந்தும் இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி கொதித்தெழுந்து எந்திரங்களை நாசம் செய்தும், முதலாளிகளைப் பயமுறுத்தியும் வந்தனர். இவ்வித வெறுப்புக்கெல்லாம் முக்கிய காரணம் தொழிற் புரட்சியினால் கைத்தொழில் ஒடுக்கப்பட்டுத் தொழிலாளிகளுக்கு வருவாய் குன்றியதும், அவர்கள் சுயேச்சை மறைந்ததுமாகும். முதலாளிகள் அதிக நேரம் வேலை வாங்கியும், குறைந்த கூலி கொடுத்தும், இளம் வயதுள்ளவர்களையும் குழந்தைகளையும் வேலைக்கு நியமித்தும், தொழிற்சாலைகளில் தக்க சௌகரியங்களைச் செய்து கொடாமலும் இருந்ததால் மேலும் மேலும் வெறுப்பு வளர்ந்து வந்தது.

இம் மாதிரியான தொழிலாளிகளின் மனக் கசப்பைப் போக்குவதற்குப் பல சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இயற்றப்பட்டன. 1802-ல் ராபர்ட் பீல் கொண்டு வந்த உடல் நல ஒழுக்கச் சட்டம் நெசவாலைகளில் வேலை செய்யும் ஏழைக்குழந்தைகளுக்கு உழைக்கும் நேரம் 12 மணிதான் என்று வரையறுத்தது. 1819-ல் இயற்றப்பட்ட இரண்டாவது தொழிற்சாலைச் சட்டம் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு நியமிக்கக் கூடாதென்றும், ஏழைக்குழந்தைகளுக்கும், தாய் தகப்பன் உள்ள குழந்தைகளுக்கும் வேலை நேரம் 12 மணி என்றும் வரையறுத்தது. 1833-ல் இயற்றப்பட்ட தொழிற்சட்டம், 9 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், 13 வயதுக்குட்பட்டவர் களுக்கு வேலை நேரம் 9 மணி என்றும், 13-18 வயதுள்ளவர்களுக்கு வேலை நேரம் 12 மணி என்றும் குறிப்பிட்டது. இச் சட்டம் சரியாக அமலில் இருந்து வருகிறதா என்பதைக் கண்காணிக்க 4 தொழிற்சாலைக் கண் காணிப்பு அதிகாரிகள் நியமனம் பெற்றார்கள். 1844-ல் இயற்றப்பட்ட தொழிற்சாலைச் சட்டம் பெண்களுக்கு 12 மணி வேலை நேரம் என்று வரையறுத்தது. 1847-ல் இயற்றப்பட்ட சட்டம் தொழிற்சாலையில் 10 மணி வேலை நேரம் என்று தீர்மானித்தது. ஆனால் இச் சட்டத்தின் நன்மை தொழிலாளிகளுக்கு கிடைக்காதவாறு முதலாளிகள் மாற்று முறைகள் (Shift system) ஏற்படுத்தி அதிக நேரம் வேலை வாங்கினர். இதைப் போக்குவதற்காக, 1850, 1853-ல் இயற்றப்பட்ட சட்டத்தினால் பெண்களும் குழந்தைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலோ, அல்லது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலோ வேலை செய்யலாம் என்றும், இடையே 1 மணி நேரம் சாப்பாட்டிற்கு இடைவேளை கொடுக்கவேண்டும் என்றும் விதிகள் உண்டாக்கப்பட்டன. இதனால் மறைமுகமாக 10 மணிக்குமேல் வேலை வாங்கும் பழக்கம் அடியோடு ஒழிந்தது.

1867-ல் சுகாதாரமற்ற தொழில்களைப்பற்றியும், தொழிற்சாலைச் சட்டம் அமலுக்குக் கொண்டுவர வேண்டிய தொழிற்சாலைகளைப்பற்றியும் பல விதிகள் உண்டாக்கப்பட்டன. 1878-ல் தொழிற்சட்டம், அமலில் இருந்த சட்டங்களை ஒழுங்குபடுத்தியும், அவைகள் அமல் நடப்பதற்கு வேண்டிய வழிகளைச் செம்மைப்படுத்தியும் வைத்தது. தொழிற்கூடங்களை ஐந்து வகையாகப் பிரித்து, நெசவாலைகள், நெசவாலைகள் அல்லாதவை, சிறுவர் வேலை செய்யும் தொழிற்கூடங்கள், சிறுவர் வேலை செய்யாத் தொழிற்கூடங்கள், குடும்பத் தொழில்கள் எனப் பிரித்து, அவைகளுக்கான விதிகளை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்தி வெளியிட்டது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகளுக்குக் குறைந்த வயது 10 என்று குறிப்பிட்டது.

1891-ல் ஆலை, தொழிற்சாலைச் சட்டத்தால், தொழிற்சாலையில் வேலை செய்யும் குழந்தைகளின் குறைந்த வயது 11க்கு உயர்த்தப்பட்டது. 1901-ல் சட்டங்கள், தீர்மானங்கள், அமைச்சர்களின் ஆணைகள் முதலியவைகளை ஒன்று திரட்டி, ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. 1937-ல் ஏற்பட்ட சட்டம் தொழிலாளர் வேலைநேரத்தை நாள் ஒன்றுக்கு 9 மணியாகக் குறைத்தது.

தொழிற்சங்க வளர்ச்சி: 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாளிகள் பல தொழிற்சபைகளை (Trade Clubs) நிறுவிக்கொண்டார்கள். இவை நட்பு மனப்பான்மையோடு நடந்து வந்தன. எதிர்த்து நின்று வாதாடும் எண்ணத்தோடு அவை ஆரம்பிக்கப்படவில்லை. தொழிலாளிகளின் நலனுக்காகப் பார்லிமென்டினால் இயற்றப்பட்ட சட்டங்களை அமலில் வைத்திருப்பதற்காகப் பாடுபடுவதே. இச்சங்கங்களின் முக்கிய நோக்கம். இச்சங்கங்களின் ஆரம்ப வெற்றியைக் கண்ட அரசாங்கம் வெகுண்டு, 1799-1800-ல் இணைப்புச் சட்டங்கள் (Combination Laws) என்ற சட்டங்களை இயற்றித் தொழிலாளிகள் ஒன்று கூடாதபடி தடை உத்தரவு பிறப்பித்தது. மீறியவர்கள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

1824-ல் தொழிற் சங்கங்களின் இணைப்புக்கு எதிரிடையாக இருந்த சட்டங்கள் அகற்றப்பட்டன. தொழிலாளர் சங்கங்கள் விரைவிலேயே அதிகரித்தன. 1824-25லிருந்து தொழிற்சங்கத்தினர். பல உயர்ந்த நோக்கங்களோடு சங்கங்களைத் திருத்தியமைத்துப் பணியாற்றத் தொடங்கினர். இக்காலத்தில் தொழிற்

சங்கங்களை ஒன்று சேர்த்து இணைத்துப் பெரிய தேசியத் தொழிற்சங்கம் நிறுவப்படவேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. 1834-ல் ஒரு பெரிய தேசியத் தொழிற்சங்க இணைப்பு ஏற்பட்டது (Grand National Consolidated Trade Union). ராபர்ட் ஓவன் இவ்விணைப்பை உண்டாக்குவதற்கு மூலகாரணமாக இருந்தார். இந்த இணைப்புப் பலவேறு காரணங்களால் வேலை நிறுத்தம் செய்ததால் இதன் நிதியெல்லாம் வீணாயின. முதலாளிகளும், தொழிலாளர்களின் பயமுறுத்தலால் ஒருவிதத்திலும் தளரவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட பல தோல்விகளினால் தேசியத் தொழிற்சங்கங்கள் சிறிது காலம் பின்வாங்கின. 1843-ல் தொழிற்சங்கங்கள் புதிய நோக்கத்துடன் அலுவல்களை ஆரம்பித்தன. இச்சங்கங்களுக்குப் பல வெற்றிகளும் கிடைத்தன.