பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

504

இங்கிலாந்து

1871-ல் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. இச் சட்டத்தினால் தொழிலாளர் சங்கங்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்னும் உரிமையளிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்வதற்கு இடையூறாக இருந்த கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. சிறிது சிறிதாகத் தொழிலாளர் சங்கங்கள் திறனற்ற வேலையாட்களுக்காகவும் உண்டாக்கப்பட்டன. அவைகளுடைய எண்ணிக்கையும் அதிகரித்தது.

1901-ல் டாப்வேல் ரெயில்வே கம்பெனியில் (Taff Vale Railway Company) வேலை செய்யும் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர். ரெயில்வே கம்பனியார் வேலை நிறுத்த காலத்தில் ஏற்பட்ட பல பொருள் நஷ்டத்திற்காக, நஷ்ட ஈடு கோரி ஒரு வழக்குத் தொடர்ந்தனர். தொழிலாளர் சங்கம் நஷ்ட ஈடு கொடுத்தது. இதனால் தொழிலாளர் சங்கம் நீதிமன்றத்தில் இழுக்கப்பட்டு. அதன் நிதி பறிமுதல் செய்யப்படலாம் என்று ஏற்பட்டது. இதனால் வியப்படைந்த தொழிலாளிகள் சங்கத்தின் நிதியைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார்கள். 1905-ல் தொழில் விவகாரச் சட்டம் (Trade Disputes Act) இயற்றப்பட்டது. குற்றங்கள் இழைத்த தனி மெம்பர்களின்மீதுதான் வழக்குத் தொடரவேண்டுமென்றும், தொழிற் சங்கங்களின் மீது தொடரக்கூடாதென்றும் தெளிவாக்கப்பட்டது. இதுவே தொழிற் சங்கங்களுங்குக் கிடைத்த முதல் வெற்றியுமாகும்.

நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கச் சட்டப்படி அரசியல் விஷயங்களுக்காகப் பணம் செலவிடுதல் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தொழிலாளிகள் தேர்தலில் நின்று, பார்லிமென்டு அங்கத்தினர்களாகித் தொழிலாளிகளுக்குச் சேவை செய்யச் சக்தி யற்றவர்களானார்கள். தொழிலாளிகளின் வருங்கால அரசியல் நிலை மிகவும் கீழ்த்தரமாக ஆயிற்று. இடையூறாக இருக்கும் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்று கிளர்ச்சிகள் நடந்தன. 1913-ல் இயற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தினால் தொழிற்சங்கங்கள் அரசியல் வேலைகளுக்காகப் பணம் வசூலிக்கலாம் என்று ஏற்பட்டது. இதன் பிறகு தொழிலாளிகள் தேர்தலில் நின்று, ஆட்சி மன்றத்தில் இடம் பெற்று, நாட்டின் ஆட்சியில் கலந்துகொண்டார்கள்.

1926-ல் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகமற்றத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமென்று தொழிற்சங்கம் உத்தரவு விடுத்தது. பொது வேலைநிறுத்தம் முடிவில் தொழிலாளிகளுக்குத் தோல்வியாக முடிந்தது. 1927-ல் ஒரு தொழிற் சங்கச் சட்டம் இயற்றப்பட்டுப் பொது வேலை நிறுத்தங்களும், ஆதரவு அளிக்கும் வேலை நிறுத்தங்களும் அங்கீகரிக்கப்படா என்று வெளியிடப்பட்டது. அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள், அரசியல் நோக்கங்கள் கொண்ட தொழிற் சங்கங்களில் சேரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொழிலாளர்களும் அரசியலும்: 1890-ல் கெர் ஹார்டி 'சுயேச்சையான தொழிலாளர் கட்சி' (Independent Labour Party) என்று ஒரு புதிய கட்சியை ஏற்படுத்தினார். இது பார்லிமென்டில் ஸ்தானங்களைக் கைப்பற்றித் தொழிலாளர் நன்மைக்குப் பாடுபட முயன்றது. 1899-ல் தொழிலாளர் பிரதிநிதி கமிட்டி என்று ஒரு கமிட்டி ஏற்படுத்திப் பார்லிமென்டில் அங்கத்தினர்களாவதற்கு வேண்டிய திட்டங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். 1906-லிருந்து தொழிற் கட்சி அங்கத்தினர்கள் பார்லிமென்டில் அதிகரிக்கத் தொடங்கி னார்கள். 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் சில குறுகிய கால அரசாங்கங்களைத் தொழிற் கட்சி அமைத்தது.

1945-ல் தொழிற் கட்சி பெரிய வெற்றி கண்டது. பார்லிமென்டில் பெரும்பாலான அங்கத்தினர்கள் தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் மற்றக் கட்சிகளின் உதவி இல்லாமல் மந்திரி சபைஏற்படுத்தி, அரசாங்கத்தை நடத்த வலுவுள்ளவர்களாக ஆனார்கள். தாழ்த்தப்பட்ட தொழிலாளிகள் ஆட்சிப் பீடத்தை எட்டிப்பிடித்துத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக அரசியல் நடத்துதல் தொழிற் கட்சியின் அரிய சாதனைக்குச் சான்றாக அமைகின்றது.

போக்குவரவுச் சாதனங்கள், பெருவழிகள் : இங்கிலாந்தில் ரோமானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெருவழிகள் அமைத்தார்கள். அவர்கள் நாட்டைவிட்டு அகன்றதும் அச்சாலைகள் சீர்கேடடைந்தன. சாலை வசதிகள் வண்டிப் போக்கு வரத்துக்குத் தகுந்தபடி. பெருகாமல் குதிரைச் சவாரிக்காக மாத்திரம் உபயோகப்படும் வகையில் உண்டாக்கப்பட்டன. இப்பாட்டைகள் சமநிலையில் இல்லாமலும் பள்ளங்கள் மிக அதிகமாயும் இருந்தன. சாமான்களை ஓர் இடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும் செலவும் அதிகமாக இருந்தது. டெல்போர்டு (Telford. 1757-1834), மாக் ஆடம் (Mac Adam, 1756-1836) என்பவர்கள் வேகமாகச் செல்லும் கனமான வாகனங்களுக்கு ஏற்ற சாலைகளை அமைத்தார்கள். உடனே பல பாட்டைகள் உண்டாகிப் போக்குவரவு நேரம் குறைக்கப்பட்டது. சாலைகள் அமைப்பதற்கு நிதி தேடுவதற்காகப் போக்குவரவுச் சாதனங்களின்மேல் சுங்க வரி விதிக்கப்பட்டது. பிறகு சாலைகளைக் கவுன்டி கவுன்சிலும் அரசாங்கப் பெருவழிப் போர்டும் (Highway Board) கண்காணித்து அபிவிருத்தி செய்தன.

ரெயில்வேக்கள் அதிகரித்தவுடன் சாலைகள் அதிகமாக அபிவிருத்திசெய்யப்படாமல் ரெயில்வேக்களுக்குச் சாமான்களைச் சேகரித்துக் கொடுக்கும் சாதனமாகக் கருதப்பட்டன. ஆனால் 1895-ல் மோட்டார் ஏற்பட்டதும், சாலைகள் அதிகம் தேவையாயின. 1918-க்குப் பிறகு மோட்டார் போக்குவரத்து அதிகரித்ததினால் பல சாலைகள் புதியனவாக உண்டாக்கப்பட்டன. 1910-ல் மத்திய சாலை நிதி (Central Road Fund) உண்டாக்கப்பட்டு, மோட்டார் வரி விதிப்பிலிருந்து ஒரு பகுதியை அதற்கு அரசாங்கம் கொடுத்துதவியது. இந்த நிதியிலிருந்து புதிய சாலைகள் அமைப்பதற்கும், இருக்கும் பாட்டைகளைத் தக்க நிலையில் வைத்திருப்பதற்கும் பணம் செலவிடப்பட்டது.

கால்வாய்: இங்கிலாந்தில் படகுகள் போக்குவரத்துக்குத் தகுந்த பல ஆறுகள் இருந்ததால் கால்வாய்கள் பெருக்கப்பட்டன. பிரிண்ட்லே கால்வாய்கள் வெட்டுவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இதைக் கண்டதும் பலர் வேறு பல கால்வாய்கள் வெட்டுவதற்கு முற்பட்டார்கள். பல கிளைகள் உள்ள கால்வாய்கள் நிரம்பிய இங்கிலாந்து சிறந்த போக்குவரவுச் சாதனங்கள் உடையதாக 19ஆம் நூற்றாண்டில் விளங்கியது. ஆனால் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் உண்டான ரெயில்வேக்களினால் கால்வாய்களின் உபயோகம் குறைந்தது. ஆயினும் பல கால்வாய்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அவற்றின் பயன் அதிகரித்தது. உதாரணமாக 240 மைல் நீளமுள்ள லண்டன்-பர்மிங்காம் கால்வாய்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, கிராண்டு யூனியன் கால்வாய் (Grand Union Canal) என்று வழங்கப்பட்டது.