பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

515

இசை

விளங்குகிறது. பல இசையாசிரியர்களும் இசைவாணர்களும் இரசிகர்களும் தோன்றினர். இதைப்பரதர் தம்முடைய நாட்டிய சாத்திரத்தில் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

13ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் ஒரேவகையான இசைதான் வழங்கியது. பிறகு இது இந்துஸ்தானி இசை எனவும், கருநாடக இசை எனவும் இரண்டு வகைகளாகப் பிரிந்தது. இந்துஸ்தானி இசை வட இந்தியாவிலும், கருநாடக இசை தென் இந்தியாவிலும் பொதுவாக வழங்கும். இந்தப் பிரிவு ஏற்பட்ட பிறகும் இந்திய இசையைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கருநாடக இசையென்றும், இந்துஸ்தானி இசை என்றும் பிரித்தெழுதவில்லை; பொதுவாகவே எழுதியுள்ளார். தென்னிந்தியக் கருநாடக இசைவாணர்களாகிய புண்டரீக விட்டலர், கோபால் நாயக் போன்றவர்கள் வடஇந்தியாவில் பெரிதும் மதிக்கப்பட்டு, அடிக்கடி அவர்களுடைய இசை அரங்குகளுக்கு அழைக்கப்பட்டார்கள்.


கருநாடக சங்கீதம் : தென்னிந்திய இசையில் என்றும் மறக்க முடியாதவைகளும், அழியாதிருக்கக் கூடியவைகளுமான இராகங்களும் தாளங்களும் வழங்குகின்றன. இதில் காணப்படும் 72 மேளகர்த்தாக்கள், இசை உலகிலே வழங்கும் 12 சுரத்தானங்களை அடிப்படையாகக் கொண்டு பிரஸ்தரிக்கப்பட்டவை. கருநாடக இசையின் தாள முறையைச் சிறப்பாகக் கூறலாம். அதிலுள்ள ஏழு தாளங்கள் லகுவின் ஜாதி பேதத்தினால் 35 ஆகி. மீண்டும் அவைகள் ஐந்து கதி பேதத்தினால் 35×5=175 தாளங்களாகின்றன.

கலைச் சங்கீதம் (Art music), தெய்வப் பாடல், நடன இசை, நாட்டுப் பாடல் முதலியவைகள் அடங்கிய பலவகையான இசைத் தொகுப்புக்கள் இருக்கின்றன. சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும், தமிழிலும் இசை நாடகங்களும் நிருத்திய நாடகங்களும் இருக்கின்றன. அழகிய சிறப்பு வாய்ந்த இசை நாடகங்கள் கோயில்களின் முன்னிலையிலும் உள் மண்டபங்களிலும் நடந்தன. இசைக் கருவிகள் வாசிக்கவேண்டிய முறை சிறப்பாக வளர்க்கப்பட்டுளது. பலவகை மீட்டு ஜாதிகளும், காற்றுக் கருவிகளில் ஊதும் முறைகளும், தாளக் கருவிகளில் வாசிக்கவேண்டிய முறைகளும் ஏற்பட்டுள்ளன. இந்தச் செய்கைகளைத் தெளிவுறுத்தும் கலைச் சொற்களும் உள்ளன. நாகசுர வித்துவான்கள், பஜனை கோஷ்டிகள், ஓதுவார்கள், அரையர்கள் மூலம் இசை அறிவு பரவிற்று.

தென்னிந்தியாவானது உலகம் புகழக்கூடிய இசைப்பாட்டாசிரியர்களை ஈந்துள்ளது. புரந்தரதாசர் (1484-1564), தியாகராஜர் (1767-1847) இவர்கள் இயற்றியுள்ள பல்லாயிரக் கணக்கான பாடல்கள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. மகா வைத்தியநாத ஐயர் (1844-1893) இயற்றியுள்ள 72 மேள இராகமாலிகையும், இராமசுவாமி தீட்சிதர் இயற்றியுள்ள 108 இராக தாள மாலிகையும் எங்கும் காணப்படாத இரண்டு நீண்ட உருப்படிகளாகும். இவற்றில் ஒவ்வொன்றையும் பாட இரண்டு மணிநேரம் வேண்டியிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டிலிருந்த நாராயண தீர்த்தர் எழுதிய கிருஷ்ணலீலா தரங்கிணி, உலகத்தில் உள்ள எல்லா இசைநாடகங்களினும் நீண்டது.

இசை உருவங்களை விவரிக்கும் நூல்களைப் படிக்குங்கால், தென்னிந்தியாவானது இசையில் செழிப்புள்ளது என்பது தெரியவருகின்றது. கோயில்களின் கோபுரங்களிலும், மண்டபங்களிலும், சுவர்களிலும் சித்திரிக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் உருவங்களும், உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்றுகொண்டோ வாசிக்கும் இசைவாணர்களின் உருவங்களும் கவனிக்கத்தக்கவை. ஹம்பெ, மதுரை, அழகர்கோயில், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, சுசீந்திரம் முதலிய இடங்களிலுள்ள கோயில்களில் காணப்படும் இசைக்கல் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உள்ளனவாயும், கலையியல்பு உள்ளனவாயும் இருக்கின்றன. இத்தூண்களினின்று இசைக் கருவிகளிலிருந்து எழும் நா களைப் போல் இசையை எழுப்பலாம். இவற்றிலிருந்து வரும் நாதம் ஜலதரங்கத்திலிருந்து (த.க.) எழும் நாதத்தை (Tone colour) ஒத்திருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள கோயில் கோபுரங்களில் பல முறையான நடன உருவங்களும், அவைகளின்கீழ் அவைகளை விளக்கும் சுலோகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையிலுள்ள குடுமியாமலைக் கோயிலிலும் திருமயம் கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்கள் இசை சம்பந்தமானவை.

கருநாடக இசையில் தேவாரப்பண்களேமிக்க பழமையான உருப்படிளாகும். அவை ரக்திராகங்களில் அமைந்திருந்ததாலும், கவர்ச்சிகரமான வர்ணமெட்டுக்களில் அமைந்திருந்ததாலும், எல்லோரும் அவைகளைப் பாட ஆரம்பித்தார்கள். திவ்யப்பிரபந்தம் வேதத்தைப் போல் ஓதப்பட்டு வந்ததாகத் தெரிகிறதே தவிர, அது தேவாரப்பண்களைப்போல் இராகத்திலும் தாளத்திலும் அமைத்துப் பாடப்பட்டனவாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் அந்தச் சம்பிரதாயமும் வந்திருக்கும். தற்காலத்தில் திவ்யப் பிரபந்தத்தையும், இராக தாளத்துடன் கூடின வர்ணமெட்டுக்களில் அமைத்துப்பாட முயற்சி செய்கிறார்கள். அருணகிரிநாதர் (15ஆம் நூ.) இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள், 35 சூளாதிதாளங்களுக்கும், கதிபேதத்தினால் வரும் 175 தாளங்களுக்கும், 108 தாளங்களில் சிலவற்றிற்கும், சங்கீர்ண தாளங்களில் சிலவற்றிற்கும் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன.

திருப்பதியில் இருந்த தாள்ளபாக்கம் பாட்டாசிரியர்களே முதன் முதலில் பல்லவி, சரணம் என்னும் அங்கங்களுடன் கீர்த்தனைகளை இயற்றினார்கள். அவர்களைப் பின்பற்றிப் புரந்தரதாசர் தேவர் நாமங்கள் என வழங்கும் பல பாட்டுக்களை இயற்றினார். இவருடைய உருப்படிகளில், அனுபல்லவி என்னும் அங்கமும் காணப்படுகிறது. புரந்தரதாசர் தான் முதன் முதலில் அப்பியாசகான வரிசைகளையும், அப்பியாச கான உருப்படிகளையும் செய்தார். இவருடைய சரளி வரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள். கீதங்கள் முதலியன நாளிது வரைக்கும், இசை பயிலுவோர்களால் சாதகம் பண்ணப்பட்டு வருகின்றன.

17ஆம் நூற்றாண்டில் க்ஷேத்ரய்யா, நாயக-நாயகி முறையில் தெலுங்கில் 4000 பதங்களுக்குமேல் இயற்றினார். நாட்டியக் கச்சேரிகளில், இவர் பதங்களை இன்றைக்கும் பாடி அபிநயம் பிடிக்கிறார்கள். இவரைப் பின்பற்றிச் சாரங்கபாணி, கனம் சீனய்யா, முல்வலூர் சபாபதி அய்யர் முதலானோர் தெலுங்கில் சிருங்கார பதங்களை இயற்றியுள்ளார்கள். 19ஆம் நூற்றாண்டிலிருந்த கவிகுஞ்சர பாரதி, கனம் கிருஷ்ணய்யர் முதலானோர் தமிழில் அரிய பதங்களை இயற்றியுள்ளார்கள்.

தானவர்ணம் என்னும் அப்பியாச கான உருப்படி 18ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் தோன்றியது. பச்சிமிரியம் ஆதியப்பய்யா, சொண்டி வெங்கடசுப்பய்யா போன்றவர்களும், சற்றுப் பிற்காலத்தில், பல்லவி கோபாலய்யர், வீணை குப்பய்யர், சுவாதித் திருநாள் முதலானோர்களும் சிறந்த தானவர்ணங்களை இயற்றியுள்ளார்கள். சங்கீத மும்மணிகளான தியாகராஜர்,