பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

516

இசை

முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பல கிருதிகளை இயற்றி, அந்த உருப்படி வகையின் இசைமேம்பாட்டை நிலைநாட்டினார்கள். இராக மாலிகை, தில்லானா, ஜாவளி போன்ற சபா கான உருப்படிகளும், ஐதிசுரம், சப்தம், பதவர்ணம் போன்ற நாட்டியகான உருப்படிகளும் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. தற்காலத்தில் கருநாடக இசை மிகுந்த சிறப்புடன் விளங்குவதற்குக் காரணம் அதிலுள்ள ஆயிரக்கணக்கான கலைச் சங்கீத உருப்படிகளும், பக்திப் பாட்டுக்களும், நாட்டிய கானப்பாட்டுக்களுமே. பல அழகிய இசைநாடகங்களும், நிருத்திய நாடகங்களும், குறவஞ்சி நாடகங்களும் இயற்றப்பட்டு, அவைகளிற் சில கோயில்களில் உற்சவங்களில் நடிக்கப்பட்டு வருகின்றன.

மனோதர்ம இசையில் இராக ஆலாபனை பழமையானது. இராகங்களை, ஆரம்பம், விஸ்தாரம், முடிவு என்னும் முறையில் விஸ்தாரமாக ஆலாபனை செய்யும் பத்ததி சுமார் 700 ஆண்டுகளாக இருக்கிறதெனத் திட்டமாகச் சொல்லலாம். பல்லவி பாடும் முறை 18ஆம் நூற்றாண்டிலிருந்த பச்சிமிரியம் ஆதியப்பய்யாவால் சீர்படுத்தப்பட்டது. ஆலாபனை, தானம், பல்லவி, சுரம் நிரவல் என்னும் மனோதர்ம இசையின் ஐந்து அமிசங்கள் தற்காலத்தில் சிறந்த முறையில் வளர்க்கப்பட்டுள்ளன.

கோயில் உற்சவங்களில் நவசந்தி தாளங்களும், புஜங்க லலித நிருத்தம் போன்ற அபூர்வ நிருத்தங்களும் கவுத்துவங்களும் உபயோகப்படுகின்றன. சுத்த மத்தளம், பஞ்சமுக வாத்தியம் போன்ற அபூர்வமான இசைக் கருவிகளும் உபயோகப்படுகின்றன. சர்வ வாத்தியம் என்னும் நிகழ்ச்சி, சில ஆலயங்களில் இப்பொழுதும் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில் பல வகை உருப்படிகளையும் இசைக் கருவிகளையும் கேட்கலாம். பலவகை நடனங்களையும் பார்க்கலாம். இந்நிகழ்ச்சி இசையின் மூன்று பிரிவுகளாகிய கீதம், வாத்தியம், நிருத்தியம் என்பவைகளின் மூலம் கடவுளை வழிபாடு செய்யவேண்டுமென்னும் உயரிய நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (இந்துஸ்தானி இசைக்குத் தனிக் கட்டுரை பார்க்க). பி. ஸா.


பிற நாடுகளில் இசை

ஏதாவதொரு நாட்டின் இசையையோ, குறிப்பிட்டதொரு பண்பாட்டில் வளர்ந்த இசையையோ நாம் ஆராயும்போது பொதுவாக எல்லா இசை முறைகளும், குறிப்பாக முன்னேற்றமடைந்த நாடுகளின் இசை முறைகளும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை என்பதை நினைவு கூரவேண்டும். ஏனெனில் இசை என்பது ஒத்தோ, ஒவ்வாமலோ உள்ள அதிர்வுகளின் தொகுதிகளேயாம். இவற்றிற்கு அடிப்படையாக உள்ள விதிகளைச் சோதனைகளால் நிரூபிக்கலாம். அடிப்படை ஒன்றே எனினும், இன்னிசையிலும், ஒத்திசையிலும் எண்ணற்ற வகைகளில் மாறுதல்களை விளைவிக்கலாம். தாளவடிவங்களை மாற்றி அமைத்தும் வேற்றுமைகளைப் பெறலாம். பழங்கால இசைமுறைகளையும், தற்கால இசைமுறைகளையும் ஆராய்ந்தால் அவை இரு பிரிவுகளாலானவை எனத் தெளிவாகும். இவை இன்னிசை முறை என்றும், ஒத்திசை முறை என்றும் கூறப்படும். இன்னிசை முறையில் இசையானது தொடர்ச்சியான தனிச்சுரங்களால் ஆனது. ஒத்திசை முறையில் இசையானது தொடர்ச்சியான கூட்டுச்சுரத் தொகுதிகளால் ஆனது. இத்தொகுதிகள் கார்டுகள் (Chords) எனப்படும். ஒரு கார்டிலுள்ள சுரங்களுக்குள் குறிப்பிட்டவொரு தொடர்பிருக்கும். இரு முறைகளிலும் விரிவான தாள அமைப்பு உண்டு. ஆனால் இன்னிசை முறைக்கு இது இன்னும் முக்கியமானது. இந்தியாவைத் தவிர மற்ற நாட்டு இசை முறைகளில் முதலாவதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாலினீசியா ஆகிய பிரதேசங்களிலுள்ள பழங்குடி மக்களின் இசை முறையும், சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளின் இசை முறையும், மேனாட்டு இசைமுறையும் ஆராயற்பாலன.

பழங்குடிகளின் இசையை மானிட உள்ளம் முதிர்ச்சியடையாத நிலையில் செய்யும் கலை முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம். விசேஷ நாட்களில் மனிதனது உணர்ச்சியைத் தூண்டவும், போரிட அவனுக்கு உற்சாகமூட்டவும் ஏற்ற எளிய பாடல்களும் பழங்காலத் தாளமுறையும் இவர்களது இசையாகும். இதற்கும் முழுவளர்ச்சி பெற்ற வேறு இசை முறைகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.

சீன இசையும் ஜப்பானிய இசையும் பெரும்பாலும் இன்னிசை முறையையே ஒட்டியவை. இவை மத அடிப்படையில் வளர்ந்துள்ளன. சீன இசையின் அடிப்படையான மேளம் பன்னிரண்டு சுருதிக் குழாய்களை (Pitch pipes) ஒட்டிய சுரங்களைக்கொண்டது. இச்சுரங்கள் இந்திய, மேனாட்டு இசை முறைகளில் வழங்கும் பன்னிரண்டு சுரஸ்தானங்களை (Chromatic Scale) ஒத்தவை. பழங்காலச் சீன மேளம் ஐந்து சுரங்களைக் கொண்ட ஒளடவ ராகத்தை ஒத்தது. இது கங் (ச), ஷாங் (ரி), சியாவ் (க), சி (ப), யூ (த) ஆகிய ஐந்து படிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இதனுடன் பிரதிமத்யமம், காகலி நிஷாதம் ஆகிய சுரங்களும் சேர்க்கப்பட்டன. இந்த ஏழு சுரங்களைக்கொண்டு ஏழு மேளங்கள் அமைக்கப்பட்டன. சீன மேளங்களிற் சில கிரேக்க மேளங்களை ஒத்தவை. சீன இசைமுறை யில் மொத்தம் 84 மேளங்கள் இருந்தன. சுரங்களை ஆண்,பெண் என்று பிரித்து, அவற்றிற்குப் பல்வேறு பண்புகளும் நல்லியல்புகளும் இருப்பதாக அவர்கள் கருதினர். அவர்கள் பயன்படுத்திய ஏராளமான இசைக் கருவிகளில் பெரும்பான்மையானவை தோற் கருவிகளும் கஞ்சக் கருவிகளுமாகும். ஆனால் பிடில் வகைகள் புல்லாங்குழல் முதலிய வேறு கருவிகளும் வழக்கத்தில் இருந்தன. சீனர்கள் ஒத்திசை முறையைச் சில காலம் கையாண்டு, அது பயனற்றதெனக் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.

சீன இந்திய இசை முறைகள் ஜப்பானிய இசை வளர்ச்சிக்கு உதவியுள்ளன. நான்காம் நூற்றாண்டு வரை மிகப் பிற்போக்கான நிலையிலிருந்த ஜப்பானிய இசை அதன் பின்னர் அயல்நாட்டு முறைகளைத் தழுவி வளர்ந்துவந்தது. 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு இசைமுறையின் மறுமலர்ச்சி ஒன்று ஏற்பட்டது. பிற்காலத்தில் ஜப்பானிய இசை மேனாட்டு முறைகளால் பெரிதும் மாறுதலடைந்தது. சீன இசையையும் ஜப்பானிய இசையையும் கேட்கையில் அவற்றின் வர்ணமெட்டுக்கள் வட இந்திய மெட்டுக்களை ஒத்திருப்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

பழங்காலக் கிரேக்க இசை மேளங்களிலிருந்து மேனாட்டு இசை மேளங்கள் தோன்றின. இவை கீழ் நாட்டு இசை மேளங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவை. பொதுவாகக் கீழ் நாடுகளிலும், குறிப்பாக இந்தியாவிலும் வழக்கத்திற்கு வராத எந்தத் தாளமும் மேளமும் மேனாட்டில் வழக்கத்தில் இல்லை. மேனாடுகளில் வழங்கும் ஒத்திசைமுறை மட்டும் இந்நாடுகளில் வழக்கத்திற்கு வரவில்லை. பைதாகரஸ் என்ற கிரேக்க