பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

517

இசை

அறிஞர் சங்கராபரண மேளம் ஒத்திசை விகிதங்களுக்கு ஏற்றது எனக் கண்டுபிடித்தார். ஆயினும் 14ஆம் நூற்றாண்டுவரை மேனாட்டுக் கோயில் இசையில் பழங்காலக் கிரேக்க மேளங்களே வழக்கத்தில் இருந்தன. மத்யமத்திலும், பஞ்சமத்திலும் இன்னிசையை இரு மடங்காக்கி ஒத்திசை முறையைப் பெற முதலில் முயற்சி செய்தார்கள். தற்கால இசை அமைப்புப்படி இது அவ்வளவு நேர்த்தியான முறையன்று. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த டாலமி என்ற கிரேக்க அறிஞரும், பிற்காலத்தில் இத்தாலியில் மத குருவாக இருந்த செயின்ட் அம்பிரோஸ் என்ற அறிஞரும் கிரேக்க மேளவரிசைகளை மாற்றியமைத்தார்கள். கிரகரி என்னும் போப் 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவற்றைக் கோஷ்டிகானத்திற்கு (Choir singing) ஏற்றவாறு மாற்றியமைத்தார். மிலான் போன்ற சில இடங்களில் மாதாகோயில்களில் இம்முறை இன்னும் வழங்குகிறது.

மறுமலர்ச்சியின்போது நிகழ்ந்த முன்னேற்றத்தில் தான் உண்மையான ஒத்திசை முறை பிறந்தது எனலாம். இப் புதுமுறையில் பாட்டமைத்த ஆசிரியர்களிற் புகழ்பெற்றவர் ஜாவானி பியர் லூயீஜீ பாலஸ்ட்ரீனா (Giovanni Pierluigi Palestrina, 1525-94) என்ற இத்தாலியர். பக்திப் பாடல்களில் கூட்டிசை (Polyphony) முறையை இவர் முதன்முதல் கையாண்டார். இவருடைய பாட்டுக்கள் இன்னும் நமது செவிக்கு விருந்தாகின்றன. தமது பொருளாதார நிலையின் சீர்கேட்டினால் எப்போதும் தொல்லையுற்றாலும் இவர் சிறந்த பக்திப்பாட்டுக்களை அமைத்துப் புகழ் பெற்றார். இவர் காலத்தில் வாழ்ந்த ஆர்லாண்டோ லாசோ (Orlando Lasso, 1530-94) என்ற பெல்ஜிய நாட்டுப் பாட்டாசிரியர் மதப்பாட்டுக்களையும் இலௌகிகப் பாட்டுக்களையும் அமைத்தார். இக்காலத்திலிருந்து மதச் சார்பற்ற இலௌகிக இசை தோன்றி வளர்ந்தது. கிளாடியோ மான்டிவெர்டி (Claudio Monteverde. 1567-1643) என்ற இத்தாலியப் பாட்டாசிரியர் முதல் இசை நாடகத்தை எழுதினார். பழங்காலத்தில் தலை சிறந்த இசையை எழுதிய அலஸ்ஸாண்டிரோ ஸ்கார்லட்டி (Allessandro Scarlatti, 1660-1725), டாமினிக்கோ ஸ்கார்லட்டி (Dominico Scarlatti, 1685-1757) என்ற தந்தையும் மகனும் இவருடன் தொடர்புள்ளவர்கள். களுக்குப்பின் தோன்றிய பாட்டாசிரியருள் XIV-ம் லூயியின் ஆஸ்தானத்திலிருந்த லுல்லி (Lulli) என்பவர் புகழ்பெற்றவர். இவர் காலத்தில் கூபரின் (Couperin), ராமோ (Rameau) என்ற பாட்டாசிரியர்களும் வாழ்ந்தார்கள். உருப்படிகளை இயற்றும் முறையை ராமோ முதன்முதலில் மிக விரிவாக ஆராய்ந்தார். இவர்கள் அனைவரும் நாடகப் பாட்டுக்களையும் இசை நாடகங்களையும் இயற்றிய ஆஸ்தானக் கவிஞர்கள். இக்காலத்தில் ஜார்ஜ் பிரடெரிக் ஹாண்டல் (George Frederick Handel, 1685-1759), யோஹான் செபஸ்டியான் பாக் (Johann Sabastian Bach, 1685-1750) என்ற ஜெர்மானியப் பாட்டாசிரியர்கள் தோன்றிச் செவ்விசை (Classical music) உச்சநிலையை அடைய உதவினர். சிறு வயதிலேயே ஹாண்டல் பாட்டியற்றுவதில் தேர்ச்சிபெற்றார். இவர் பாட்டியற்றிய வேகம் பிறரைத் திகைக்க வைத்தது. இவர் விரிவான கல்வி பெற்றுப் பல நாடுகளில் பிரயாணம் செய்து, பரந்த மனப்பான்மை கொண்டவரானார். இவர் இயற்றிய இசை பல உணர்ச்சிகளையும் கற்பனைகளையும் ஊட்டத் தக்கதாகவும், நாடகப் பண்புள்ளதாகவும் இருந்தது. இவர் முக்கியமாக இசையும் நடிப்பும் கலந்த பக்தி சம்பந்தமான இசைப் பாடல்களையும் இசை நாடகங்களையும் இயற்றினார். இவர் இயற்றிய பாடல்கள் இன்றும் பயிலப்படுகின்றன. பியூகு (Fugue) என்ற இசை அமைப்பை இயற்றுவதில் பாக் தலைசிறந்தவர். கூட்டிசை முறை தோன்றவும் இவரே காரணராக இருந்தார். ஆர்கன் என்ற கருவியை இசைப்பதில் இவர் அக்காலத்தில் சிறந்து விளங்கினார். இன்று வரையிலுங்கூட இக்கலையில் இவரை மிஞ்சியவர் இல்லை எனலாம். இவர் இயற்றிய இசையின் சிறப்பும் பெருந்தன்மையும் வேறெதிலும் இல்லை. இவர் மறைந்த ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே இவர் இயற்றிய இசையின் அருமையை உணர்ந்து சுவைக்கத் தொடங்கினார்கள். இதே காலத்தில் வாழ்ந்த ஜோசப் ஹேடன் (Joseph Haydn, 1732-1809) என்ற ஆஸ்திரியர் தற்காலத்திய கருவி இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். பல்லிய இசைக் (Orchestra) கேற்ற பல பாட்டுக்களையும், சில கருவிகளின் கோஷ்டி கானத்திற்கேற்ற பாட்டுக்களையும் இவர் சிறந்த வகையில் இயற்றினார். இவரது இசை தற்காலத்தில் அவ்வளவாக வழக்கத்தில் இல்லை.

இதன் பின்னர் 18ஆம் நூற்றாண்டின் இடையில் வால்ப்காங்கு ஆமாடேவுஸ் மோசார்ட் (Wolfgang Amadeus Mozart, 1756-91), லூட்விக் வான் பேதோவன் (Ludwig Von Beethoven, 1770-1827) என்ற இரு மேதைகள் தோன்றினர். மோசார்ட் இயற்றிய இசையை அக்காலத்திய பண்பாட்டு முறையின் பிறவி எனலாம். இவரது குறுகிய வாணாளுக்குள் இவர் உள்ளத்தில் அளப்பரிய கற்பனைகள் தோன்றின. பூரணமான தெளிவும், ஒப்பற்ற உணர்ச்சி நயமும் உள்ள பல தனிப்பாட்டுக்களையும் இசை நாடகங்களையும் இவர் இயற்றினார். மந்திரப் புல் லாங்குழல் (The Magic Flute), பிகாரோவின் திருமணம் (Marriage of Figaro) என்ற இவருடைய இசை நாடகங்களை இன்னும் மேனாட்டு நாடக அரங்குகளில் காணலாம். இசையுலக லட்சியவாதி என இவர் புகழப்படுகிறார். பேதோவன் பல வகைகளில் இவருக்கு நேர் எதிரிடையானவர். மோசார்ட்டின் விளையாட்டுப் பண்பை இவர் இசையில் காணமுடியாது. இது வீரம் செறிந்ததாகவும், புரட்சி நிறைந்ததாகவும், மக்களின் துன்பத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும். வாழ்க்கையில் இவர் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. தமது முப்பதாவது வயதில் இவர் செவிடரானார். பியானோவிற்கேற்ற இவரது தனி உருப்படிகள் புகழ்வாய்ந்தவை. இவருடைய உருப்படிகளே இன்றும் அதிகமாகப் பயிலப்படுகின்றன. இவரது ஒன்பதாவது சிம்பனி (Ninth Symphony) தலைசிறந்ததும், புகழ்வாய்ந்ததும் ஆகும். துன்பத்திற் பிறந்து வளர்ந்த இவர் இந்த உருப்படியில் சொர்க்கத்தின் இன்பத்தைச் சிறந்த வகையில் சித்திரிக்கிறார். செவ்விசை மரபின் பாட்டாசிரியர்களில் இவரே பிற்பட்டவராவர்.

மேனாட்டு இசையின் கற்பனை நவிற்சிக் (Romantic) காலத்தில் மூன்று பாட்டாசிரியர்கள் முக்கியமானவர்கள். இவர்களுள் முதல்வர் பிரான்ஸ் பீட்டர் ஷூபர்ட் (Franz Peter Schubert, 1797-1828) என்ற ஆஸ்திரியர். இவர் தம் பாடல்களினாற் புகழ்பெற்றார். இரண்டாமவர் பிரடெரிக் பிரான்ஸ்வா ஷோபான் (Frederic Francois Chopin, 1810-49) என்ற பிரெஞ்சு -போலிஷ் பாட்டாசிரியர். இவர் இயற்றிய பாட்டுக்கள் பெரும்பா லும் பியானோவிற்கு ஏற்றவை. இவை நேர்த்தியும் நயமும் நிறைந்தவை.