பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை

22

அகில இந்தியக் கீழைநாட்டுக்கலை மாநாடு

துண்டைக் கொண்டு முனைபோல உள்ளே செல்லும்படி அடித்தால் இந்தக் காளான் வளர்ந்து பரவுதலால் அந்த மரத்திலும் அகிலுண்டாகும். அகில் தரும் மரங்களில் சில இனங்களுண்டு. இந்தியாவிலுள்ள முக்கியமான மரம் அக்விலேரீயா அகல்லோச்சா என்னும் இனம்.

அகில் சிறுசிறு துண்டுகளாக விற்கிறது. அதை நெருப்பில் சந்தனக் கட்டைத் துண்டுகளைப் போடுவது போலப் போட்டால் நல்ல சந்தனம் அல்லது அம்பர் போன்ற வாசனையுள்ள புகைவரும். மிகப் பழைய காலந்தொட்டு எகிப்து, அரேபியா, முதலிய நாடுகளிலும், இந்தியா, பர்மா முதலிய கீழ்த்தேசங்களிலும் இதை விரும்பி யுபயோகித்து வந்திருக்கின்றனர். பார்சிகளிலும இதைத் தங்கள் கோயில்களில் தூபப்பொருளாகப் பயன்படுத்துகின்றனர். அகில் பீசின் நிரம்ப உள்ள மரத்துண்டு நீரில் மிதக்காது அழுந்திவிடும். இதனால் அகிலின் தரத்தையறிந்துகொள்ள முடியும்.

அகிலிலிருந்து ஒரு தைலம் இறக்குகின்றனர். அதற்கு அகர் அத்தர் என்று பெயர். இந்தத் தைலத்தைத் தனியே வாசனைப் பண்டமாக உபயோகிப்பதும்ன்றி மற்ற உயர்ந்த வாசனைப் பொருள்களைக் கலப்பதற்கும் அவற்றின் வாசனை போகாமல் வைப்பதற்கும் பயன் படுத்துகின்றனர்.

அகில் தூளைத் துணிகளில் தூவி வைப்பதுண்டு. பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஊதுவர்த்தி, அகர்பத்தி செய்யயும் இது உதவுகிறது.

அகில் பெரும்பாலும் அஸ்ஸாமிலிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்டுகிறது. மிகப் பழைய காலங்தொட்டுத் தமிழ் மக்கள் அகிற் புகை அகிற் கூட்டுக்களில் பெரு விருப்பபுடையவர்கள்.

குடும்பம் : தைமீலியேசீ (Thymeliaceae).
இனம் : அக்விலேரியா அகல்லோச்சா (Aquilaria agallocha).

அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை (Pan-Americanism) : அமெரிக்காக் கண்டம், வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், மத்தியப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பு. இந் நாடுகளெல்லாம் பலவகைக் கொள்கை வேறுபாடுகள் உள்ளவை. ஆயினும் இக்கண்டத்து அரசாங்கங்கள் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டால் எல்லாருடைய நலத்திற்கும் அது உகந்ததாகும் என்று கருதின. 1889-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முக்கியமாக வாணிப நலன்களையே நோக்கமாகக் கொண்டு ஐக்கிய முயற்சியில் ஈடுபட்ட்ன. ஆயினும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு அமரிக்க ஐக்கிய நாடுகளிடம் நம்பிக்கை யில்லாம்லிருந்ததால் இம் முயற்சி அதிகமாகக் கைகூடவில்லை . 1823-ல் மன்ரோ தோற்றுவித்த கொள்கை அமெரிக்காக் கண்டத்தில் பிறர் தலையீட்டைக் கண்டித்ததாயினும் 1904-ல் தியடோர் ரூஸ்வெல்ட் இக்கொள்கையிற் செய்த் திருத்ததால் கரீபியன் கடல் தகராறில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட முடிந்தது. இதனால் அமெரிக்க ஐக்கிய நாடுகலிடம் தென் அமெரிக்கப் பகையுணர்ச்சி வளர்ந்தது. 1928லிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற அமெரிக்க நாடுகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ளத் தொடங்கின. அப்போதிலிருந்து அகில அமெரிக்காவும் ஒன்றுபட்டு வெளிநாட்டு விவகாரங்களை நடத்த வேண்டும் என்பது ஒரு கொள்கையாயிற்று. இக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர வாஷிங்டன், மெக்சிகோ நகரம், ரீயோடிஐனெரோ, போனஸ் அயர்ஸ், சான்டியாகோ, ஹவானா, மான்டி, விடியோ முதலிய இடங்களில் பல மாநாடுகள் நடைபெற்றன. இம்மாநாடுகளைத் தொடர்புபடுத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயல்வது அகில அமெரிக்க ஐக்கியம் என்னும் ஸ்தாபனம். இதன் தலைமைக் காரியாலயம் வாஷிங்டனில் உள்ளது.

அமெரிக்க நாடுகளிடையே எற்படும் விவகாரங்களைச் சமாதானமாகத் தீர்ப்பதும், பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒற்றுமையை வளர்ப்பதும் இவ் வைக்கியத்தின் நோக்கங்கள். 1936 போனஸ் அயர்ஸில் நடந்த மாநாடு வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து அமெரிக்க நாடுகளைக் காக்க அந்நாடுகளிடையே ஒற்றுமை வேண்டும் என்று வற்புறுத்திற்று. 1947-ல் ரீயோடி, ஜனேரொ பரஸ்பர உதவி யொப்பந்தமும் இதையே சுட்டிற்று.

20-க்கு மேற்பட்ட பல்வேறு நாடுகளிடையே மன ஒற்றுமை காண்டல் அரிது, அன்றியும் மேற்கு அர்த்த கோளம் உலகத்தின் பிற பகுதிகளின்றும் தனிப்பட்டு நிற்றலும் அரிது. ஆயினும் ஐ.நா. சபையில் ஐக்கிய நாடுகளும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஒத்துழைத்து வருவதைக் காணில் இவ்வொற்றுமை இயலும் என்றே தோன்றும். அ. மு

அகில இந்திய அழகுக்கலை கம்மியச் சங்கம் (All India Fine Arts Society ) 1926-ல் நிறுவப் பெற்றது. இதன் நோக்கம் இந்தியாவின் பண்டைய அழகுக்கலைகளையும் பிற்கால அழகுக்கலைகளையும் பற்றி ஆராய்ச்சி செய்வதையும் மதிப்பிடுவதையும் வளர்ப்பதாகும். இது ஆண்டுதோறும் டெல்லியில் அழகுக்கலைப் பொருட்காட்சி நடத்துகிறது. பிரயாண அழகுக்கலைப் பொருட்காட்சி என்று ஒன்று அமைக்கப் பெற்று முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்திய அழகுக்கலைப் பொருள்களை அயல்நாடுகளிலும் அயல் நாட்டு அழகுக்கலைப் பொருள்களை இந்தியாவிலும் பொருட்காட்சியாகக் காட்டி வருகிறது. ரூபலேகை என்ற அரையாண்டு இதழையும், கலைச் செய்திகள் (Art News) என்ற கால் ஆண்டு இதழையும் நடத்துக்கின்றது. இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருக்கிறது.

அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பது இந்தியக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவி புரியும் பொருட்டுக் காந்தியடிகளால் 1934-ல் நிறுவப் பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவைச் சார்ந்த மகன்வாடி.

அகில இந்தியக் கீழ்நாட்டுக்கலை மாநாடு (All India Oriental Conference) : கீழ்நாட்டு ஆராய்ச்சியாளாின் பணியை ஒன்றுசேர்த்து இணைக்கவும், அவர்களுக்கு வேறு வகைகளில் உதவவும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நாட்டின் பல பகுதிகளில் கூட்டப்பெறும் மாநாடு. இதன் மத்திய அலுவலகம் புனாவிலுள்ள பாண்டாரகர் கீழ்நாட்டு ஆராய்ச்சிக் கழகத்தில் உள்ளது. இது 1919-ல் பூனாவில் கட்டப்பட்டது. இம்மாநாட்டில் ஆராய்ச்சியாளர் தாம் செய்த ஆராய்ச்சிகளை விவரிக்கிறார்கள். கீழ்நாட்டுக் கலைையப்பற்றிய ஆராய்ச்சிகள் வேறு ஸ்தாபனங்களின் ஆதரவில் நடைபெற்றாலும் இம்மாநாடு அதற்குத் தனது உதவியை அளிக்கிறது. இதிலுள்ள பல பிாிவுகளில் தென்னிந்தியப் பண்பாட்டிற்கும் ஒரு பிாிவுஉண்டு.