பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

521

இசை


மத்தியக் கிழக்கு நாடுகள்: ஆதியிலிருந்தே இந்தியாவிற்கும் இந்த நாடுகளுக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. கிறிஸ்து சகாப்தத்திற்குச் சுமார் மூவாயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாகரிகங்களைப் பற்றிய உண்மைகள் இந்தியப் பண்பாட்டிற்கும் மத்தியக் கிழக்குப் பண்பாடுகளுக்கும் இருந்த ஒற்றுமைகளை அறிவுறுத்துகின்றன. மெகாஸ்தனிஸ் (Megasthenes), ஆரியன் (Arrian), ஸ்ட்ராபோ (Strabo ) முதலிய கிரேக்கர்கள் இந்திய நாடு டயனைசஸ் (Dionysus) என்று அமைக்கப்பட்ட சிவனது புனிதமான உறைவிடம் என்றும், இத்தெய்வம் அலெக்சாந்தர் காலத்திற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மானிடவர்க்கத்திற்கு இசையையும் நடனத்தையும் பயில்வித்தது என்றும் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லவியலாதாயினும், இந்தியாவே இசையின் பிறப்பிடம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். எகிப்தியர்களது முக்கியமான இசைக்கருவி பீன் (Bin) என்று அழைக்கப்படும் வீணை. பர்ஹுத், அமராவதி முதலிய இடங்களில் உள்ள மிகப் பழமையான தொல்பொருள் சின்னங்களில் காணப்படும் வில்போன்ற வடிவுள்ள வீணையும், எகிப்தியர்கள், சுமேரியர்கள், அசிரியர்கள் முதலிய பழைய கால மக்கள் பயின்ற இசைக்கருவியும் ஒன்றேயாம். சுமேரியர்களிடையே வழங்கிய துப் (Dub) என்பது இந்திய நாட்டுத் துந்துபி; ஹிட்டைட்டு (Hittite) மக்கள் உபயோகித்த கத்ரால் (Katral) என்ற இசைக் கருவி இந்திய நாட்டின் கரதாளம்; எபிரேயர் (Hebrews) பயின்ற கின்னரம் (Kinnar) இந்தியக் கின்னரவீணை; சூர் னா (Surna) அல்லது சனாய் (Sahnai), டமரு (Damaru) ஆகிய இந்திய இசைக் கருவிகள் இன்றுள்ள வடிவிலேயே நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் வழங்கின. சுமேரிய நாட்டில் இசைக் கலைஞனது பெயர் நர் (Nar) என்பது. அக்காடியன் மொழியில் இது நரு. பாடகியின் பெயர் நர்த்து. இப்பெயர்கள் வடமொழிச் சொல்லான நர்த்தகியை ஒத்திருப்பது காணலாம். இந்தியாவிற்கும் மத்தியக் கிழக்கிற்கும் இசை வரலாறு பொதுவானது என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது. அக்காலத்தில் வழங்கிய இந்த இசையின் தோற்றத்தைப்பற்றி எல்லா நாடுகளிலும் அறியக்கூடிய உண்மைகள் அனைத்தும் இந்தியாவிலேயே இது தோன்றி வளர்ந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன.

அயல் நாட்டினரும் இந்தியரும் எழுத்து மூலமாகத் தரும் சான்றுகளிலிருந்து மற்ற நாட்டினரை இந்திய இசை எவ்வாறு மாற்றினது என அறியலாம். இந்திய இசை முறையும் இசைக் கருவிகளும் நடனமும் பழங்கால உலகில் மாறுபாட்டை யுண்டாக்கின என்பதற்குத் தக்க சான்றுகள் இருந்தாலும், இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி மிகவும் முன்னேறிய பிறகே இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும், அக்காலத்திய இசை முறை எத்தன்மையது என்பதையும் பற்றிய நேரடியான உண்மைகளை அறிய முடியும். சில பழைய வடமொழி இசை நூல்கள் எப்போது எழுதப்பட்டன என்று அறியவும் இவ்வாராய்ச்சி உதவும்.

துருக்கர்கள் : பெளத்த மதத்தின் தோற்றத்தினால் இந்திய நாகரிக வெள்ளம் புரண்டு மத்தியக் கிழக்கை நோக்கிப் பாய்ந்தது. பௌத்த மதம் மத்தியக் கிழக்கில் எவ்வளவு தூரம் பரவி இருந்தது என்பதை இப்போது நாம் அறிய முடியாது. ஏனெனில் அதன்பின் அங்கே தோன்றிய வேறு மதங்கள் அதன் சமயக் கொள்கைகளையும் சடங்குகளையும் ஏற்றுக் கொண்டாலும், அதன் தோற்றத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டன. காந்தாரம் என வழங்கிய ஆப்கானிஸ்தானத்தைக் கேந்திரமாகக் கொண்டு பெளத்த மதம் ஆதென்ஸ், ரோம், அலெக்சாந்திரியா ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கிருந்து அக்காலத்தில் நாகரிகமடைந்திருந்த எல்லாப் பிரதேசங்களிலும் பரவியது என்று மட்டும் நாம் அறிகிறோம். கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னரும் அதன் தொடக்கத்திலும் இது நிகழ்ந்தது. மத்தியக்கிழக்கிலிருந்த துருக்கர்கள் மாஸ்டாகொள்கை என்னும் சாரதூஷ்டிர சமயத்தவர் எனினும், பௌத்த மதத்தால் அவர்கன் பெரிதும் மாறுபாடடைந்தவர்கள். எட்டாம் நூற்றாண்டு வரை வழங்கிய அவர்களது இசை முறைக்கும் இந்திய முறைக்கும் வேற்றுமையே தெரிவதில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இத்தொடர்பு நீடித்தது. அக்காலத்திய வடமொழி நூல்கள் பலவற்றில் துருக்க இசை வகைகளைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

அராபியர்: துருக்கர்கள் முகம்மதிய மதத்தைத் தழுவிய பின்னர் அரபு நாடுகளில் தமது இசைப் பண்பாட்டைப் பரப்பினர். அரபு மொழியில் முக்கியமான இசை நூலாசிரியரான அவிசென்னா ,அல்பராபி, சவியுத்தீன் போன்ற அனைவரும் பிறப்பிலோ, பண்பாட்டிலோ துருக்கர்கள். பழங்கால இந்திய இசை முறையைக் கிரேக்கர் கொள்கைகளின் அடிப்படையில் திருத்தியமைத்த அராபிய இசை முறையை இவர்கள் வளர்த்தார்கள். அராபியர்களாலே கீழ்நாட்டு இசை ஸ்பெயின் வரையிலும் சென்றது. ஸ்பெயின் மக்களிடையே இந்திய இசையின் முக்கியமான இராகங்கள் இன்னும் வழக்கத்திலுள்ளன.

ருமேனியா: பழங்காலத்தில் வாழ்ந்த திரேசியர்கள் இந்திய முறையை ஒத்த இசை முறையைக் கையாண்டனர். லிடியர்களது (Lydians) இசை முறையிலிருந்து கிரேக்கர்கள் சில அமிசங்களை எடுத்துக் கொண்டதால் அவர்களைப் பற்றி நாம் ஓரளவு அறிய முடிகிறது. திரேசியர்களது இசை முறை இன்றைய ருமேனியாவில் வழங்குவதால் இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஹங்கேரி: ஹங்கேரியர்கள் தற்போது வாழும் பிரதேசங்களுக்குச் சுமார் கி. பி. 896-ல் வந்தனர். இவர்கள் துருக்க வமிசத்தைச் சேர்ந்தவர்களாகையால் இவர்களது இசையும் இந்திய இசைத் தொகுதியைச் சேர்ந்ததேயாம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு வந்த ஜிப்சி என்ற நாடோடிகள் வடஇந்திய மொழி பேசிய இந்திய இனத்தவர். அவர்களது இசை இன்றும் ஐரோப்பிய இசைக் கவிஞர்களுக்குக் கற்பனை ஊற்றாக விளங்குகிறது. சுரமண்டலமும் பல இராக வடிவங்களும் ஐரோப்பாவில் பரவ இவர்கள் காரணமாயினர். சிம்மேந்திர மத்தியமம் என்ற இராகம் ஆஸ்திரியாவிலும் மற்றக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஜிப்சிகளால் இன்றும் பாடப்பெறுகிறது.

ரஷ்யா : துருக்கர்கள் வாயிலாக இந்திய இசை வட, கீழ், மத்திய ஐரோப்பாவில் பரவியது. ரஷ்யாவில் இப்போதும் வழங்கும் கஸ்லே (Gusle) என்பது பழைய சுரமண்டலத்தின் ஒரு வடிவமேயாகும். 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் புதுவகையான சீன இசைக் கருவிகளையும் இந்திய இசைக் கருவிகளையும் ரஷ்யாவிற்குக் கொண்டு சென்றார்கள். இவற்றுள் தொம்ரா (Domra) என்ற இந்திய நரம்புக் கருவியிலிருந்து பாலலைகா (Balalaika) என்ற இசைக் கருவி 17ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ரஷ்யாவில் சாதாரண மக்கள் பழகும் இசையில் பெரும் பகுதி