பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைக் கருவிகள்

524

இசைக் கருவிகள்

கள் இல்லை. சாவிகள் உள்ள கருவிகள் ஒத்திசை என்னும் இசைமுறைக் கேற்றவை; இந்திய இசைமுறைக்கு ஏற்றவையல்ல.

இசைக் கருவிகளைச் செய்யும் கலை வேதகாலத்திலிருந்து பயிலப்பட்டு வந்துள்ளது. இசையின் வளர்ச்சிக்கேற்ப இசைக் கருவிகளைச் செய்யும் கலையும் வளர்ந்தது. மா, பலா, செஞ்சந்தனம் முதலிய மரவகைகளும், வெள்ளி, வெண்கலம், பித்தளை, செம்பு முதலிய உலோகங்களும், நாணல், பிரம்பு, சுரைக்குடுக்கை, தோல் முதலிய வேறு பொருள்களும் இசைக் கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. விலங்குகளின் நரம்பும், உலோகக் கம்பிகளும், பட்டு நூலும் இசைக் கருவிகளின் நரம்புகளாகப் பயன்படுகின்றன. பழங் காலத்தில் தருப்பைப் புல்லை முறுக்கி நரம்பாகப் பயன்படுத்தினார்கள். இசைக் கருவிகளில் பயன்படும் மரத்தை முதலில் மிக நன்றாகப் பதப்படுத்தவேண்டும். கருவி எளிதில் சுருதி கூட்டத் தக்கதாகவும், அழகிய வடிவுள்ளதாகவும், எளிதில் பயிலத்தக்கதாகவும், அதன் நாதம் இனிமை பயப்பதாகவும் இருக்கவேண்டும். தென்னாட்டில் இசைக் கருவிகளைச் செய்யும் கலை சில இடங்களுக்கே சிறப்பானதாக இருந்து வருகிறது. தஞ்சையிலும், திருவனந்தபுரத்திலும், மைசூரிலும் வீணைகளும் வேறு கருவிகளும் செய்யப்படுகின்றன. பண்ணுருட்டி, மானாமதுரை ஆகிய இடங்களில் நல்ல நாதமுள்ள கடங்கள் செய்யப்படுகின்றன. ஓர் இசைக் கருவியின் தோற்றத்திலிருந்தே அது எவ்விடத்தில் செய்யப்பட்டது என ஊகிக்கும் அளவிற்கு ஒவ்வோரிடத்திலும் செய்யப்படும் கருவிகள் சிறப்பியல்புகள் உடையவை.

பாகுபாடு: இசைக் கருவிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை நரம்புக் கருவி, தொளைக் கருவி, தோல் கருவி, கஞ்சக் கருவி எனப்படும். ஜாலரா போன்ற கருவிகள் கஞ்சக் கருவிகள் எனப்படும்.

நரம்புக் கருவிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதல்வகை மீட்டுக் கருவிகள் எனப்படும். இவற்றுள் கருவியின் நரம்புகள் கையினாலோ, தந்தம், மரம் அல்லது உலோகத்தினாலான துண்டு ஒன்றினாலோ இழுத்துவிடப்பட்டு அதிருமாறு செய்யப்படுகின்றன. இந்தத் துண்டுக் கருவி பண்டை நூல்களில் 'கோணம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. யாழும், வீணை வகைகளும், கோட்டு வாத்தியமும் இவ்வகையைச் சேர்ந்தவை. வடநாட்டுக் கருவிகளில் சிதார், சரோடு, சுரசிங்காரம் போன்றவை இவ்வகையின. மாண்டலின், கிதார், ஹார்ப் ஆகியவை இவ்வகையைச் சேர்ந்த மேனாட்டுக் கருவிகள். வீணை, சிதார் போன்ற கருவிகளில் துடிக்கும் நரம்பின் நீளத்தைக் கட்டுப்படுத்த அதன்கீழே மெட்டுகள் (Frets) இருக்கும். கோட்டு வாத்தியம் போன்ற சில கருவிகளில் இவை இரா ; விரலினால் நரம்பை அழுத்திக்கொண்டு அதன் நீளத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். இவ்வகைக் கருவிகளில் நரம்பைப் பக்கவாட்டில் இழுத்துக் கமகங்களைத் தோற்றுவித்துச் சுரத் தொடர்ச்சியைப் பெறுகிறார்கள். சரோடிலும், சுரசிங்காரத்திலும் நரம்பின்மேல் கையை நகர்த்திக் கமகங்களை உண்டாக்குகிறார்கள். இவ்வகைக் கருவிகள் அகலமாகவும் தடித்த நரம்புகள் கொண்டனவாகவும் இருக்கவேண்டும்.

நரம்புக் கருவிகளில் இரண்டாம் வகை வீல் கருவிகள் எனப்படும். மானிட வரலாற்றில் முதல் வில் கருவியான இராவணஹஸ்தகம் என்னும் இசைக் கருவி இந்தியாவில் தோன்றியது. பிடில், மயில் வாத்தியம் போன்ற கருவிகளும், தில்ரூபா, சாரங்கி போன்ற வட இந்தியக் கருவிகளும் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றில் ஒரு வில்லினால் நரம்பைத் தேய்த்து ஒலியை எழுப்புகிறார்கள். நரம்பின் வழியே விரலை நகர்த்தி, அதன் நீளத்தை மாற்றிச் சுருதி மாற்றங்களை விளைவிக்கிறார்கள். இதனால் இக்கருவிகளில் திருத்தமான சுரத் தொடர்ச்சிகளைப் பெற முடிகிறது. இதில் வில்லும் ஓரளவு உதவுவதோடு, தேவையானபோது அழுத்தத்தையும் தருகிறது. ஆகையால் இவ்வகைக் கருவிகள் வாய்ப்பாட்டிற்குப் பக்கவாத்தியமாக மிகப் பொருத்தமாக அமைகின்றன.

மூன்றாம் வகை நரம்புக் கருவிகள் அடிகருவிகள் எனப்படும். இவற்றில் இரு கம்புகளாலோ சிறு சம்மட்டியாலோ கம்பிகளை அடித்து, அவை ஒலிக்குமாறு செய்யப்படுகின்றன. முன்னர் வழக்கத்தில் இருந்த சுரமண்டலம் என்ற இந்திய இசைக் கருவியும், பியானோ என்னும் மேனாட்டு இசைக் கருவியும் இவ்வகையைச் சேர்ந்தவை.

தொளைக் கருவிகள் இருவகைப்படும். இவற்றுள் முதல்வகைக் கருவிகளில் துருத்தியை யொத்த எந்திரத்தின் உதவியால் கருவிக்குள் காற்று ஊதப்படுகிறது. ஆர்கன், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகள் இவ்வகையின. இரண்டாம் வகைத் தொளைக் கருவிகளே முக்கியமானவை. இவற்றைப் பயில்வோன் இவற்றில் காற்றை ஊதி இசையை எழுப்புகிறான். சங்கு, கொம்பு, குழல், நாகசுரம், முகவிணை போன்ற இசைக் கருவிகளும் துத்தாரி, சுந்தரி, ஷனாய், ஆல்கோஜா போன்ற வடநாட்டு இசைக் கருவிகளும். ஓ போ, கிளாரினெட், கார்னெட், டிராம்போன் போன்ற மேனாட்டுக் கருவிகளும் இவ்வகையைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கருவிகளில் தொளையின் வழியே காற்று ஊதப்படுகிறது. வேறு சிலவற்றில் அவற்றிலுள்ள நாக்கின்மேல் காற்றை ஊதி அது அதிருமாறு செய்யப்படுகிறது. இவற்றுள் முதல் வகைக்குக் குழலும், இரண்டாவதற்கு நாகசுரமும் உதாரணங்களாகும். மேனாட்டுத் தொளைக் கருவிகளில் உள்ளதுபோல் இந்திய நாட்டு இசைக் கருவிகளில் சாவிகள் இல்லாவிட்டாலும், கைவிரல்களைக்கொண்டு தொளைகளை மூடும் வகையைக் கொண்டே பல சுரங்களையும் எழுப்ப முடிகிறது. கருவிக்குள் காற்றை ஊதும் முறை மிக முக்கியமானது. இதன் உதவியால் மானிடக் குரலிலுள்ள நெகிழ்வையும் மென்மையையும் இதில் பூரணமாக வெளிப்படுத்தலாம். நாக்கின் அசைவினாலும், காற்று ஊதுவதைக் கட்டுப்படுத்துவதினாலும் இதில் கமகங்களைப் பெறுவது கைதேர்ந்த வித்தையாகும்.

மூன்றாம் வகைக் கருவிகளான தோற் கருவிகள் முன்னர்ப் பலவகைகளிற் பயன்பட்டன. நகராவும் பேரிகையும் போர்க்களத்தில் பயனாயின. எச்சரிக்கைக் வழக்கம்.கும் அறிவிப்புக்களுக்கும் முரசு கொட்டுவது இவ்வகைக் கருவிகளிற் பெரும்பான்மையானவை லய வாத்தியங்களாகப் பயனாகின்றன. இவற்றுள் சில ஒரே முகத்தையும், மற்றவை இரு முகங்களையும் உடையவை. கையினால் அடித்து ஒலிக்கப்படும் கருவிகளும், கம்பினால் அடித்து ஒலிக்கப்படும் கருவிகளும், ஒரு புறத்தை அடித்தும், மற்றொரு புறத்தைத் தேய்த்தும் ஒலிக்கப்படும் கருவிகளும் உண்டு. இவ்வகை இசைக் கருவிகளில் தலை சிறந்தது மிருதங்கம். இதைப் பயிலும் முறை முன்னேறி உயர்ந்த நுட்பத்தை அடைந்துள்ளது. வடநாட்டில் தபலாவைப் பயிலும் முறை இவ்வாறே முன்னேறியுள்ளது. மிருதங்கம் வெறும் தாளவாத்தியமாக மட்டும் இல்லாமல் இனிமையான நாதத்தையும் எழுப்புவதற்கு அதன் அமைப்பில்